By பிரபா ஸ்ரீதேவன்
First Published : 19 January 2016 01:36 AM IST
சில நாள்களுக்கு முன் இந்தியன் வங்கியின் பெண் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அப்பொழுது வங்கியில் பெண் ஊழியர்களின் நிலைமை என்ன என்பது பற்றி சொன்னார்கள். பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்றும் இதில் இருந்தே அவர்களின் உரிமை எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது தெரியும் என்றும் சொன்னார்கள்.
அப்பொழுது நான், இந்தியாவில் எந்த மூலையில் இந்தியன் வங்கியின் கிளை துவங்கினாலும் முதலில் பெண்களுக்குத் தனியாக கழிவறைகள் அமைக்கப்படும்பொழுதுதான் பெண் ஊழியர்கள் சமமாகக் கருதப்படுகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளமுடியும் என்று கூறினேன். என் எதிரே தெரிந்த பல முகங்களில் ஆமோதிப்பு மின்னியது.
என்னை வழியனுப்ப வந்த அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர்கள் இந்த விஷயம் குறித்துப் பொதுவாக எல்லோரும் பேசக் கூச்சப்படுவார்கள் என்றும், ஆனால் மிகவும் முக்கியமான விஷயம் என்றும், நான் அதை குறிப்பிட்டதற்கு நன்றி என்றும் கூறினார்கள்.
இந்த வசதி இல்லாமல் பெண்கள் எப்படிப் பணியிடங்களில் வேலை செய்யமுடியும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். 10-இல் இருந்து 5 என்று வைத்துக் கொண்டாலும் 7 மணி நேரம். பெண் ஊழியர்களின் நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் வேதனை மேலிடும்.
நான் நீதிபதியாக நியமனம் ஆகி சில மாதங்கள் ஆகி இருக்கும். அப்பொழுது திருச்சி மாவட்ட பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப் பட்டேன். அதற்கு சில மாதங்கள் முன்பு தான் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கு என்று இதற்காக அறைகள் கட்டப்பட்டன என்று சங்கத்தின் செயலாளர் சொன்னார்.
அப்போது, இதற்கு முன் என்ன செய்தீர்கள் என்றேன். மேடம், அதோ பாருங்கள் காம்பவுண்டு சுவருக்குப் பின்னால் ஒரு கட்டடம் தெரிகிறது இல்லையா? நாங்கள் சுவர் ஏறி குதித்து என்று தயக்கத்துடன் இழுத்தனர். ஓ! சரி! என்றேன். இதற்கு மேல் இந்த சோகத்தைக் கேட்க விரும்பவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண், முதுகும் முழங்காலும் ஒத்துழையாமை போராட்டம் நடத்தும் பெண் என்ன செய்வார்? இனிமேல் வேலைக்கு வரவில்லை என்று சொல்லியிருப்பாரா?
ஒரு முகம் வரையுங்கள் என்றால் சிறு வயதில் ஒரு வட்டம் போட்டு இரு புள்ளிகள் (கண்கள்) முதலில் போடுவோம் இல்லையா? அந்த புள்ளிகளை - அதாவது கண்களை... பெண்களை விலக்கிவிட்டு எவ்வளவு ஆண்டுகள் அந்த நீதிமன்றம் இயங்கியிருக்கிறது. இதுபோலத்தான், எந்த ஒரு பொது அலுவலகத்தின் கதையும். அலுவலகம் என்ன? வீடுகளும் தான்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜஸ்டிஸ் சசிதரன் ஒரு முறை என்னிடம் பெண் சமத்துவம் எங்கேயோ வெகு தொலைவில் இருக்கிறது. எங்கள் ஊர் அருகில் ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அதன் நிர்வாகிகள் இங்கு ஞாயிற்றுக்கிழமை கூட மாணவிகள் வருகிறார்கள் என்றார்கள். ஏன் என்று கேட்டால் அவர்கள் வீடுகளில் டாய்லெட் இல்லை. பள்ளியில் இருக்கிறது அதனால் வருகிறார்கள் என்றார்கள். வருத்தமாக இருக்கிறது என்று சொன்னார்.
அந்த பள்ளியிலாவது இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடையலாமா? பல பள்ளிகளில் தலைகீழ் நிலைமை.
மதுரையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போழுது வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம். இந்த விஷயம் மும்மாரியைவிடக் கணக்குத் தவறாமல் நடைபெறும். அதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களே நேரில் வந்து பேசுவார்கள்.
பல வழக்குகளில் அவர்களின் வாது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம். இந்தப் பொதுநல வழக்கில் பத்து பதினைந்து பெண்கள் தங்கள் கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்பது பற்றி பேசினார்கள். என்ன அழகாக ஒவ்வொரு "பாயிண்ட்' எடுத்துச் சொன்னர்கள்.
வழக்குரைஞர்கள் வந்திருந்தால்கூட இவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருப்பார்களா என்பது ஐயம் தான். அவர்களின் பெரிய குறை அவர்கள் காலையில் எழுந்து ஊருக்கு வெளியே சென்று தங்கள் காலைக்கடன்களை முடிக்க வயலுக்குச் செல்லும் இடத்தில் நாம் மேலே குறிப்பிடப்பட்ட கடை. ஆண்கள் தாறுமாறாகக் கிடப்பார்கள்; தாறுமாறாகவும் பேசுவார்களாம்.
"அம்மா, கண்ணைத் தொறந்து பாக்க முடியாது, காது கொடுத்து கேட்கமுடியாது. நாங்க என்ன செய்வோம்?' என்கிற அவர்களது கேள்விகள் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு வன்முறை நடந்தால், ஏன் அங்கு போனாய், அந்த வேளையில் ஏன் போனாய்? ஏன் இந்த உடை உடுத்திக் கொண்டு போனாய்? என்று வாய் கிழியக் கேட்கிறார்கள் பாரம்பரியப் பாதுகாவலர்கள். இதற்கு மேலே குறிப்பிட்ட வினாக்களில் எதைத் தேர்வு செய்வார்கள்? அரசுத் தரப்பு வழக்குரைஞரைப் பார்த்தேன். அவர் தாளை எடுத்து ஏதோ விதிமுறையைச் சுட்டிக் காட்டினார்.
அந்தப் பெண்கள், "சார், ரூல் பேசாதீங்க சார். எங்களுக்கு வழி சொல்லுங்க' என்று கேட்டபோது அவர் வாயடைத்துப் போனார்.
உண்மை தானே. பட்டினிகூடக் கிடந்து விடலாம். இதற்கு என்ன செய்வது?
சமீபத்தில் நிகழ்ந்ததே, சென்னையில் சமுத்திரம்.. அப்பொழுது ஓர் இடத்தில் பெண்கள் எங்களுக்கு இங்கே போக வசதி இல்லை. ஆகையால், குடிக்கவும், உண்ணவும் ஒன்றும் வேண்டாம் என்று சொன்னார்களாம்.
ஆண்களுக்குப் பெண்களைப்போல அவ்வளவு சிரமம் இல்லை. சிருஷ்டியிலேயே அவர்கள் புண்ணியம் செய்தவர்கள். இறைவன் ஒருவேளை ஆண் தானோ?
அபர்ணா கார்த்திகேயன் ஓர் இளம் எழுத்தாளர். அவர் மறைந்துவரும் கிராமியக் கலைகளைப் பற்றி எழுதுபவர். வீணை செய்பவர்கள், கடம் செய்பவர்கள், காங்கேயம் காளை வளர்ப்பவர்கள் இப்படி - தன் அனுபவங்களை அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொள்பவர்.
அவர் தென் மாவட்டத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். இளம் விதவை. கணவன் குடிப் பழக்கத்தால் மன நலம் சிதைந்து போய் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். எச்.ஐ.வி. விதவை (H.I.V. widow) என்று எச்.ஐ.வி.யால் இறந்த ஒருவரின் மனைவியைக் குறிப்பிடுவார்கள். நாம் இனிமேல் டாஸ்மாக் விதவை என்று கூட சொல்லலாம் போல இருக்கு. அவருக்கு ஒரு பெண், ஒரு பையன். இருவரும் படிக்கிறார்கள். இவர் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தால் தன் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளும் நேரம் குறைந்து போகும் என்று அங்கே போகாமல் விவசாய வேலை செய்கிறார்.
Flexi-hours என்று மேல் நாட்டிலும், நகர்வாழ் மக்களும் சொல்கிறார்களே அதை இந்த பெண்மணி எவ்வளவு தெளிவுடன் அறிந்து வைத்திருக்கிறார்? இவ்வளவு புரிந்து கொண்டுள்ளவர் வீட்டில் கழிவறை இல்லை. அவர் அபர்ணாவிடம், "அம்மா, நான் பணம் சேர்த்து என் பெண் பெரிய வயது வருவதற்குள் கழிவறை கட்டிவிடுவேன்' என்றாராம். இவருக்கு திறமை இல்லையா,அறிவு இல்லையா? என்ன இல்லை?
ஆனால், சமீபத்தில் வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்வை அளவுகோலாக வைத்து பார்த்தோமானால் இவர் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. ஏனென்றால், ஹரியாணா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளார்கள். அது அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது என்று ராஜ்பாலா என்பவர் மனு கொடுத்தார்.
உச்சநீதிமன்றம், சட்டம் சரியாகத் தான் உள்ளது என்று தீர்ப்பளித்தது. அதில் ஒரு தகுதி என்னவென்றால், வேட்பாளர் வசிக்கும் இடத்தில் இயங்கும் கழிவறை இருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தலில் நிற்க முடியாது. ஹரியாணா மாநிலத்தில் 12,000 ரூபாய் கழிவறை கட்டுவதற்கு உதவி தருகிறார்கள். அப்படியும் கட்டிக்கொள்ளவில்லை, என்றால் அவர்களுக்கு வேட்பாளராக நிற்கும் உரிமை இல்லை என்பதுபோல் செல்கிறது தீர்ப்பு.
ஏழ்மையின் அவஸ்தை என்ன என்று புரியவில்லையோ? வாடகை வீட்டில் இருந்தால், அங்கு கழிவறை இல்லை என்றால், ஒருவர் என்ன செய்வார்? குடிசை நல வாரியம் போன்ற இடத்தில் மிகவும் குறைவான தரத்தில் கட்டப்பட்ட வீட்டில் இருந்தால்... அந்தக் கழிவறை இயங்கவில்லை என்றால்.. அபர்ணா சந்தித்த பெண், பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராம நலனுக்கு நிச்சயம் உழைப்பார். அவருக்கு இயங்கும் கழிவறை இல்லை என்றாலும் கூட. அது என்ன இயங்கும் கழிவறை? Functional toilet என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.
ஒடிஸா மாநிலத்தில் தன்னார்வு இயக்கங்கள் 160 கிராம பள்ளிகளை பார்த்துவிட்டு ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டன. அதில் 57 பள்ளிகளில் ஓர் இயங்கும் கழிவறை கூட இல்லையாம். 84 பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கென்று தனி கழிவறை இருந்ததாம். அதில் 5 பள்ளிகளில் மட்டுமே தண்ணீர் வசதி இருந்ததாம். நினைவிருக்கட்டும்.
நமக்குத் தேவை இயங்கும் கழிவறை. பொது கட்டடங்களிலேயே இந்தக் கேவலம் என்றால்.. ஓர் ஏழையின் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக எவ்வளவு வலுவான ஓர் உரிமை பறிபோகிறது? அவர் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் வாய்ப்பை இழக்கிறார்.
சென்ற ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம், பொது இடங்களில் பெண்களுக்குக் கழிவறை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய சொற்கள் "Women's right to pee..' (பெண்களின் சிறுநீர் கழிக்கும் உரிமை).
ஒன்று நினைவில் இருக்கட்டும்.
நீதித் துறையின் செயல் முனைவு (judicial activism) அத்து மீறுகிறது என்கிறோமே, இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றம் முனையவில்லை என்றால் பெண்கள் பாடு என்னவாக இருக்கும்? ஆட்சியாளர்களும், நிர்வாகமும் செயல்படாமல் இருப்பதால்தானே மக்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அப்படி அவர்கள் நாடும்போது, இது எனக்குத் தொடர்பில்லாதது என்று நீதித் துறை கண்ணை மூடிக்கொள்ளவா முடியும்?
கழிவறைகள் என்பது மனித உரிமையின், மனித சமத்துவத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று உரக்கக் கூவுகிறோம். என்ன செய்வாள் ஒரு பெண்? மதுரையில் பார்த்தோமே, குவளையைத் தூக்கிக் கொண்டு வயலுக்குச் சென்றவர்கள், டாஸ்மாக் குடிமக்கள் இருக்கின்றார்களே என்று கூச்சம் மேலிட வயலுக்குப் போகாமல் இருக்க முடியுமா?
பெண்களுக்கு மாதாந்திர தேவை வேறு. என்னடா, நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேனே என்று எண்ண வேண்டாம். இது மனித உரிமை தொடர்பானது. பெண்களுக்கு சமூகமும், அரசும் தர வேண்டிய மரியாதை தொடர்பானது.
பெண்களுக்குக் கழிவறைகூட உறுதிப்படுத்தாத நிலையில் பெண் சமத்துவம் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை. இது பெண் சமத்துவம் தொடர்பானது அல்ல, மனிதனின் ஜீவாதார உரிமை என்று சொன்னாலும் தவறில்லை!