By ஆசிரியர்
First Published : 15 January 2016 01:15 AM IST
மதம் மற்றும் மக்களின் நம்பிக்கை சார்ந்த பிரச்னைகளில் அரசும், நீதிமன்றமும் தலையிடுவது என்பது முடிந்தவரை தவிர்க்கப்படுவதுதான் நல்லது. நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கத் தொடங்கினால், பட்டியல் நீண்டுகொண்டே போகும், முடிவே இருக்காது.
சபரிமலையைப் பொருத்தவரை மாதவிலக்கு நின்றுபோகாத பெண்கள் ஆலயத்துக்குள் வரக்கூடாது என்பது பல ஆண்டுகளாக இருந்துவரும் நடைமுறை. ஆகவே சிறுமிகள் (பேதை, பெதும்பை), மாதவிலக்கு நின்ற பெண்கள் (பேரிளம் பெண்) ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலைக் கோயிலில் ஏன் எல்லாப் பெண்களையும் அனுமதிப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இது மரபு சார்ந்தது என்றும், ஐயப்பன் நைஷ்டீக பிரம்மச்சாரி என்றும் ஒரு பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, இந்த நடைமுறை அறிவியல் சார்ந்தது என்பதையும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கிட வேண்டும். தனது பக்க நியாயங்களை எடுத்துரைக்காமல் போனால், இதுபோன்ற இன்னும் பல ஆலய வழிபாட்டு முறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படக்கூடும்.
மாதவிலக்கு என்பது உடல் தூய்மை சார்ந்த விவகாரம் மட்டுமல்ல. மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களுக்கு அந்த மூன்று நாள்களுக்கும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வும், அதனால் குணபேதம், எரிச்சல், கவனக்குவிப்பு, உடல்சோர்வு ஆகியன ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் உண்மை. அதை அனுபவபூர்வமாக நமது முன்னோர்கள் உணர்ந்திருந்ததால்தான், மாதவிலக்கான பெண்கள், ஓய்வு கொள்ள வேண்டும் என்பது காலம்காலமாக இருந்துவரும் நடைமுறை.
நகர வாழ்க்கையும், அலுவலகப் பணியும் இத்தகைய பழமையான நடைமுறைகளை மாற்றிவிட்டன. மாதவிலக்கான நாள்களில் பெண்கள் அலுவலகம் போகிறார்கள். பள்ளி, கல்லூரிக்குப் போகிறார்கள். ஆனாலும்கூட, அந்த மூன்று நாள்களுக்கு கோயிலுக்குப் போவதை இன்றும்கூடப் பெண்கள் தவிர்க்கிறார்கள். பல வீடுகளில், பல பெண்கள் அந்த மூன்று நாள்களில் எந்த அறைக்குச் சென்றாலும், பூஜை அறைக்கு மட்டுமே செல்வதில்லை. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று கூறலாம். ஆனால், நம்பிக்கை சார்ந்தது. அவரவர் விருப்பம் சார்ந்தது.
மலைக் கோயில் உள்ள இடங்களில், மலைப் பாதையின் நடுவே தீட்டுமண்டபம் என்று இருக்கிறது. இன்றளவிலும் அத்தகைய தீட்டுமண்டபங்கள் உள்ளன. மலைக்கு வரும் பெண் பக்தர்கள் மாதவிலக்காகும் நிலைமை உருவானால், அவர்கள் அந்த மண்டத்திலேயே தங்கி விடுவார்கள். உடன் வந்தவர்கள் மலைக்கு மேலே போய் தரிசனம் முடித்துத் திரும்பும்வரை அந்த தீட்டுமண்டபத்தில் அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். மாதவிலக்கான பெண்கள் கோயிலுக்கு செல்வதில்லை என்பது தூய்மை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மனநிலை சார்ந்ததும்கூட.
விதிவிலக்காக சில ஆலயங்களில் மாதவிலக்கான பெண்கள் கோயிலுக்கு வரலாம் என்ற நடைமுறை உள்ளது. உதாரணமாக, மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில். அத்தகைய ஆலயங்கள் சக்தி பீடமாக இருக்கும். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் சக்தி பீடம் அல்ல.
ஒவ்வொரு கோயிலும் ஒருவித காந்தவிசை (மேக்னடிக் பீல்டு) கொண்டுள்ளது. அது அந்த கோயிலின் கட்டுமான அமைப்பு, கருவறை, மூலவர், அதன் கீழே வைக்கப்படும் "யந்திரம்" ஆகியவற்றை பொருத்து சில நியதிகளை வகுக்கின்றனர். இவை அறிவியலா, ஆன்மிகமா, வெறும் நம்பிக்கையா என்று எல்லாவற்றையும் விளக்குவது சாத்தியமில்லை. அறிவியல் சார்ந்து பதில் சொல்லவியலாத பல சடங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன. ஆனால், இந்து மதம் மட்டுமே எல்லாரையும் கேள்வி கேட்க அனுமதிக்கிறது. அதுவே அதன் பெருமை.
காலம்காலமாக நடத்திவந்த ஜல்லிக்கட்டு, இன்றைய நவீன உலகுக்குப் பொருந்தாத, "தொன்மையின் எச்சம்' என்று சொல்லப்படுவதைப்போல, கற்சிலைக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் எல்லாமும்கூட நவீன உலகுக்குப் பொருந்தாத வீண் செயல், தேசிய இழப்பு என்றுகூட யாராவது வழக்குத் தொடுக்க முடியும். நீதிமன்றம் அந்த மனுவையும் ஏற்று, கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
சில நடைமுறைகள் காலத்துக்குப் பொருந்தாதவையாக மாறும்போது, அந்தந்த கோயில்கள் அல்லது மதங்கள் அல்லது இனங்கள் அவற்றை மாற்றிக் கொள்கின்றன. உதாரணமாக, பார்ஸி இனத்தார் சடலங்களைக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கட்டடத்தின் மேலே பருந்துகளுக்கு உணவாக வைத்துவிடுவார்கள். ஆகவே இந்த நடைமுறையைக் கைவிட்டுவிடலாமா என்று அந்த சமூகம் தற்போது கலந்தாய்வு செய்கிறது. சில நடைமுறைகள் காலமாற்றத்துக்கு ஏற்ப மாறாவிட்டாலும்கூடத் தொடர்கின்றன. உதாரணமாக, கிராமக் கோயில்களில் நடைபெறும் மிருகபலி. பகுத்தறிவு சார்ந்த அரசுகளாலும்கூட அதைத் தடை செய்ய முடியவில்லை. காரணம், அது நம்பிக்கை சார்ந்த ஒன்று.
ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வருகிறார்கள். அனைவரும் முற்றிலும் புலனடக்கிய முனிவர்கள் அல்லர். லட்சக்கணக்கான ஆண்கள் கூடுமிடத்தில், அதிலும் கானகத்தில் பெண்களும் வருவது என்பது இயல்பாகவே அசம்பாவிதத்திற்கு வழிகோலக்கூடும். அதைத் தடுப்பதோ, கண்காணிப்பதோ பாதுகாப்புத் தருவதோ இயலாத ஒன்று. "தவறு நேர்ந்தால்' என்கிற கேள்விக்கு யார் பதிலளிப்பது?
காலம் காலமாகத் தொடரும் நடைமுறைகள் பொருந்தாதவை என்றால், அதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அதற்குரிய கோயில், சமூகம், மதத்தினரிடமே விட்டுவிட வேண்டும். இதில் அரசோ, நீதிமன்றமோ தலையிடுவது சரியல்ல!
No comments:
Post a Comment