Saturday, January 2, 2016

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்



புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு வழிபாடு

திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சாமி கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில், கீழவீதியில் பழனியாண்டவர் கோவில், துர்வாசகர் கோவில் அமைந்துள்ள பாலஅய்யப்பன் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சர்க்கரை விநாயகர் கோவில், காட்டூர் கீழத்தெரு மகா காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பாத்திமா அன்னை ஆலயம் 

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு தொடக்கத்தையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் பொதுமக்கள் வெடி, வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

நீடாமங்கலம் 

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. 

இதை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், கெஜலெட்சுமி சன்னதிகளில் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல்அலுவலருமான சாத்தையா, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் தக்காருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்கள மாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், குழந்தை பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு விழா மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024