Wednesday, January 13, 2016

இலையுதிர் காலம் - ஓர் எச்சரிக்கை!

First Published : 13 January 2016 01:18 AM IST
மான்களின் கூட்டத்திலே கிழடு தட்டிய மான் கிடையாது. மீன்களின் இனத்திலே மூப்படைந்த மீன் கிடையாது. வான் பறவைக் கூட்டத்திலே வயது மூத்த பறவைகளைக் காண முடியவில்லை. ஆனால், மனிதனிடம் மட்டும் மூப்பு ஏன்? முதுமை ஏன்?
 வனாந்தரங்களிலுள்ள மரங்களுக்கு வசந்த காலம் வருகிறது. அடுத்து, இலையுதிர் காலம் வருகிறது. மறுபடியும், வசந்த காலம் அல்லது பூக்காலம் வருகின்றது. ஆனால், மனித வர்க்கத்தில் மட்டும் வசந்த காலத்தை அடுத்து, இலையுதிர் காலம் வருகின்றது. தொடர்ந்து வசந்த காலம் திரும்புவதில்லை.
 இலையுதிர் காலத்தோடு மனித வாழ்வு முடிவடைந்து விடுகிறது. அதனால்தான் முதுமையை சோகமான இலையுதிர் காலம் (Sad Autumn) என்றார் ஓர் அறிஞர். சேட்டியாபிரியான்ட் (Chateabriand) எனும் அரசியலறிஞனும் முதுமையை உடைந்து போன கப்பல் என்கிறார்.
 முதுமை பயனில்லாதது என்பதனைச் சங்கப் புலவராகிய நரிவெரூஉத்தலையார், பல்சான்றீரே பல்சான்றீரே கயல்முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின் பல்சான்றீரே (புறநானூறு : 195-வது பாடல்) எனும் பாடல் மூலம் முதுமை பயனில்லாதது என்பார்.
 சங்கப்புலவரைப் போலவே ஷேக்ஸ்பியரும், முதுமையில் பற்கள் செயலற்றுப் போகின்றன, கண்கள் செயலற்றுப் போகின்றன, நாக்கு சுவையற்றுப் போகின்றது, இறுதியில் எல்லாமே செயலற்றுப் போகின்றன (Sans teeth, sans eyes, sans taste and everything) என்று "அஸ் யு லைக் ட்' நாடகத்தில் எழுதியுள்ளார்.
 நம் காலத்து ஆர்.கே. நாராயணன், என்னுடைய இடது காதின் சவ்வு முதலில் கிழிந்தது, அதற்குப் பிறகு அனைத்துப் பொறிபுலன்களும் செயலற்றுப் போயின (The left ear drum is the first to be switched off. Faculties are switched off one by one) என்றெழுதுகிறார். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாகின்றது.
 ஆனால், மறுபடியும் அது கூட்டுப்புழு ஆவதில்லை. மனிதன் மட்டும் வண்ணத்துப் பூச்சியாகி பின்னர் கூட்டுப்புழு ஆவது கொடுமை அல்லவா? மானிட சாதியில் கிளியோபாட்ரா ஒருத்திதான் முதுமையடையாமலேயே முழு வாழ்க்கை வாழ்ந்ததாக ஷேக்ஸ்பியர் கூறுகின்றார்.
 மரத்திற்கு இலையுதிர் காலம் வந்தால், மரத்துக்காரன் உடனடியாக அதனை வெட்டுவதில்லை. ஏனென்றால், அந்த மரம் அடுத்துப் பூக்கும், காய்க்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், மனித சாதியில் முதுமை வந்துவிட்டால், அது மீண்டும் பூக்காது, காய்க்காது என்பது சந்ததியர்க்குத் தெரிந்த காரணத்தால், அம்மரத்தைப் பாதுகாக்க மறுக்கிறார்கள்.
 பசுக்களில் ஒரு மாடு இனிமேல் பால் சுரக்காது, அது மரப்படி மாடு என்றாகிவிட்டால், அதனை மந்தைக்கு விரட்டிவிடுவார்கள் (பால் சுரப்பற்ற மாடுகளுக்கு, மரப்படி மாடு என்று பெயர்). முதுமையுற்றோர் இனிப்பயன்பட மாட்டார்கள், சுமையாகிவிடுவார்கள் என்பது தெரிந்ததால், இன்றைய இளைஞர்கள் காப்பகத்திற்குக் கைகாட்டிவிடுகிறார்கள்.
 முதுமையின் கொடுமையை நன்கறிந்த கவிஞன் டபிள்யூ.பி. ஏட்ஸ், ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் மகன், அவனது அறுபது வயதில் எப்படியிருப்பான் என்பதை முன்கூட்டியே அறிந்துவிட்டால், அவள் தாய்மையைத் தியாகம் செய்து, புறக்கணித்துவிடுவாள் என்றார். ஒருகாலத்தில் முதியோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் படித்தால், நாக்கு அழும்.
 நியூசிலாந்துக்குப் பக்கத்திலிருந்த ஆதிவாசிகள் மூப்படைந்தோர்களை முதுமக்கள் தாழிக்குள்ளே வைத்து, அவர்கள் விரும்பும் உணவு தானியங்களையும் உள்ளே வைத்து, அத்துடன் ஒரு சிறு அகல் விளக்கையும் உள்ளே வைத்துப் புதைத்துவிடுவார்களாம்.
 அதுபோலவே, மலேசியாவுக்குப் பக்கத்திலுள்ள காமரூன் தீவைச் சேர்ந்த வேட்டையாடிகள் முதியோர்களை அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய், அடர்ந்த புதர்களிடையே வைத்துவிட்டு வந்துவிடுவார்களாம். அவர்கள் பசியெடுத்த விலங்குகளுக்கு இரையாகி முடிந்து போவார்களாம். முதியோர்கள் வதைபடுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது.
 குழந்தைப் பருவம், மாணவப் பருவம், வாலிபப் பருவம் என்று சொல்வதுபோல், முதுமையை ஒரு பருவம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஒரு நோய். அந்த நோய் கொல்வது கிருமிகளைக் கொண்டல்ல, கருமிகளைக் கொண்டாகும். லியோ டால்ஸ்டாய் எழுபதாவது வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்தார். அவரைப் பார்த்த ஆண்டன் செகாவ், இவருடைய நோயின் மூலக்காரணம் முதுமை. அம்முதுமை இவரை முழுமையாகத் தின்று கொண்டிருக்கிறது என்றார்.
 முதுமை காலாவதியாகிப் போன ஒரு பிராமிசரி பத்திரம். அதன் பயன்படாமையைக் கவிக்கோ அப்துல் ரகுமான், "முதுமை, நிமிஷக் கரையான் அரித்த ஏடு, இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத்தட்டு, ஞாபகங்களின் குப்பைக்கூடை, வியாதிகளின் மேய்ச்சல் நிலம், காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட வர்ண ஓவியம்' எனப்பாடி, எதிர்காலத்திற்கு ஓர் எச்சரிக்கை தருகிறார்.
 ‘On growing old‘ எனும் கவிதையில் முதுமையின் இயல்பைப் பாட வந்த மேத்யூ அர்னால்டு எனும் ஆங்கிலக் கவிஞன், "பனித்துளிகளின் மீது என் நடை தளர்கிறது. புதிய ஊர்களுக்கு எனது உள்ளம் துள்ள மறுக்கிறது. மிதிபட்ட என் நம்பிக்கையுணர்வு, மீண்டும் எழ முடியாமல் தவிக்கிறது' எனப் பகர்வார்.
 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புறநானூற்றுப் புலவர், கழிந்துபோன இளமைப் பருவத்திற்காக ஓர் இரங்கற்பாவே பாடுகிறார். "இப்பொழுது நினைத்தாலும் என் நிலைமை எனக்கே இரக்கமாகின்றது. ஒரு காலத்தில் மணலிலே வண்டல் இழைத்து விளையாடிய வனிதையரோடு கைகோர்த்து ஆடினேனே.. வஞ்சனையறியா இளைஞர்களுடன் கூடி, மருத மரத்தில் மீதேறி மடு நீருள் தொப்பெனப் பாய்ந்து, அடி மணலை அள்ளி வந்து, பருவப் பெண்கள் ஆச்சரியப்படும்படியாகக் காட்டி மகிழ்ந்தேனே.. அந்த இளமைக் காலம் இனி எப்போது, எங்கே கிடைக்கும்?
 இப்பொழுது பூணிட்ட தண்டினை ஊன்றிக்கொண்டு, இருமல் இடையிடையே வந்து தொல்லை தர, சிலச்சில சொற்களைப் பேசிக்கொண்டு திரிகின்ற நான், கழிந்துபோன என் இளமைக்காலத்தை நினைத்தால் இரக்கமாகின்றதே' (புறநானூறு 243-வது பாடல்) என்ற பாடல் முதுமையின் மீது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும்.
 இத்தகைய இலையுதிர் காலத்துக்குத் தொல்காப்பியர் ஓர் எச்சரிக்கை தருகிறார். ஒரு தலைவனும், தலைவியும் வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தபிறகு, அவர்களே தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்திலிருந்து அவர்கள் விலகிப்போய் ஒரு தவ வாழ்க்கையை மேற் கொள்ளலாம்.
 தசரத சக்கரவர்த்தி ஒரு நரை முடியைக் கண்டவுடன், அரண்மனையை விட்டுப் புறப்படத் தயாரான செய்தியை இராமாயணம் சொல்லும். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் அந்திமக் காலத்தில் காசிக்குப் புறப்பட்டுப் போனதும், ஒரு விவேகமான செயலாகவே இப்பொழுது தோன்றுகிறது.
 மகாகவி பாரதி பாரத நாட்டின் பெருமையைப் பேசவந்தபொழுது, எங்களுடைய பாட்டன், பூட்டன், முப்பாட்டன்கள் உறவின் முறையோடு கூடிக்களித்த நாடு, இந்நாடு (எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்தது மிந்நாடே - அதன் முந்தையர் ஆயிரமாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே) எனப் பாடினான். இன்றைக்கு நாம் அதனை மறந்துவிட்டாலும், சீனாக்காரர்கள் பாரதி கண்ட கனவை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 சீன வரலாற்றில் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிலேயே முதியோரைப் பேணிக்காத்தல் நல்ல மன்னனுக்குரிய கடமையாக வகுக்கப்பட்டது. சீனத்து அரசர்கள் மூத்த அமைச்சர்களுக்கு எதிரில் அமர்ந்து பேசமாட்டார்களாம். சீன ஞானியாகிய கன்பூசியஸ், முதியோர்களுக்கு அமைதியும், இளைப்பாற வசதியையும் செய்து தருவதையே தம் முழுமுதல் நோக்கமாக வைத்திருந்தாராம்.
 சிலப்பதிகாரக் காலத்தில், முதுமை போற்றப்பட்டிருக்கிறது - பாதுகாக்கப் பெற்றிருக்கிறது என்பதை, கண்ணகி கடவுளுக்கு இட்ட நிபந்தனையால் அறியலாம். மதுரையை எரிக்கச்சொல்லி தீக்கடவுளுக்குக் கட்டளையிடுகின்றபொழுது, யார் யாரை எரிக்கக்கூடாது எனப் பட்டியலிடுகின்ற வேளையில், அதில் முதியோர்களும் இடம் பெறுகின்றனர் (பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எம் இவரைக் கைவிட்டு).
 பழங்காலத்துச் சீனத்தில் முதியோர்கள் 70 வயது வரை அரசுப் பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனராம். ஓய்வுபெற்ற அதிகாரி எண்பது வயதை அடைந்ததும், அவரைப் பேணிக் காக்க ஓர் அரசு அலுவலருக்கு ஊதியத்தோடு விடுப்புக் கொடுத்து, எண்பது வயதுப் பெரியவரைப் பாதுகாக்கப் பணிப்பார்களாம்.
 பழைய ரோம அரசில் ஒரு மகன் தந்தையை அடித்துவிட்டால், அடித்தவனின் குடியுரிமையைப் பறித்துவிடுவார்களாம். ரோம சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு முதியோர்களே காரணமாகத் திகழ்ந்ததால், அவர்கள் அங்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். சீனத்து, ரோம் நாட்டு முதியோர்களுக்கு இலையுதிர்க் காலத்தின் எச்சரிக்கை தேவையேயில்லை.
 முதுமை எனும் இலையுதிர்காலத்தினால், முதியோர்கள் பெற வேண்டிய எச்சரிக்கை ஒன்று உண்டு. ஒரு தந்தை தம் மகனைப் படிக்க வைப்பதையோ, அவரைப் பணியில் அமர்த்துவதையோ, அவருக்குத் திருமணம் செய்து வைப்பதையோ தம் கடமை என்று எண்ணி ஆற்ற வேண்டும். இவற்றை எல்லாம் இன்றைக்கு நாம் செய்தால், எதிர்காலத்தில் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் செய்யக்கூடாது. இதனைச் சரியாகவே எச்சரித்திருக்கிறார் திருவள்ளுவர்.
 தந்தை மகற்காற்றும் நன்றி என நவின்றார் திருவள்ளுவர். தந்தை மகற்காற்றும் உதவி என்று சொல்லவில்லை. காரணம், ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதைப் பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பித் தருவதாக எண்ண வேண்டும். அதனால்தான் நன்றி எனக் கூறினார். இதனை ஆங்கிலக் கட்டுரையாளர் ஏனெஸ்டு பேக்கர், இம்முறையை ஒரு "ரிலே ரேஸ்' என்றார். ஒருவர் பெற்ற மூங்கில் கழியை இன்னொருவரிடம் ஓடிப்போய் கொடுப்பதைப்போல ஆகும்.
 பிள்ளைகளும் இன்றைக்குத் தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும். இளைய தலைமுறையினருக்கும் ஓர் எச்சரிக்கை செய்கிறது நாலடியார்.
 கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அம்மரத்தினுடைய விழுதுகள் தாங்கிப் பிடித்து, ஏந்திப் பிடித்துக் காப்பாற்றுவது போல, தந்தையாகிய ஆலமரத்தைப் பிள்ளைகளாகிய விழுதுகள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
 உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங்களும் காலங் காலமாய் நிற்பதில்லை. ஆனால், கொல்கத்தா பொட்டானிகல் கார்டனிலுள்ள ஆலமரத் தோப்பும், அடையாறு ஆலமரத்தோப்பும் காலங்காலமாய் நிலைத்து நிற்பதற்குரிய காரணத்தை, மூத்த சமுதாயமும் இளைய சமுதாயமும் கற்க வேண்டும்.
 இவ்விரண்டு இடங்களிலுமுள்ள தாய் மரங்கள் பலனை எதிர்பார்த்து விழுதுகளை விடுவதில்லை விழுதுகளும் வந்த இடத்தை மறந்து தாங்கிப்பிடிக்காமல் விடுவதில்லை. அதனால், ஆச்சர்யப்படத்தக்க வாழ்க்கை வாழ்கின்றன. வேர்கள் விழுதுகளைத் துண்டிப்பதில்லை. விழுதுகள் வேர்களை வெட்டுவதில்லை.
 ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதை பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பி தருவதாக எண்ண வேண்டும். பிள்ளைகளும் இன்றைக்கு தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும்.

 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024