திருநெல்வேலியில் இன்று காலை ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, "காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து வள்ளியூர் அருகே வந்தபோது சாலையின் நடுவே இருந்த கான்க்ரீட் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் இறந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்தவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், போலீஸ் டி.ஐ.ஜி. அன்பு மற்றும் எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்" எனக் கூறியுள்ளது.
ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்:
விபத்து குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில், மிகவும் சோர்வடைந்திருந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போதே தூங்கியதால் வண்டி அவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது" என்றார்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம்:
இந்த விபத்தில் 10 பேர் பலியான நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களுக்கான மீட்பு, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேரள மாநிலம் தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி மனோஜ் ஆப்ரஹாமுக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment