இந்த பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச்செய்வோம், இதைச்செய்வோம், இதைத்தருவோம், அதைத் தருவோம் என்று இலவசங்கள், மானியங்கள் பட்டியல் அடுக்கடுக்காக வரப்போகிறது. ஆனால், உழைப்பே உயர்வுதரும் என்று வாழும் இந்த தமிழ்நாட்டில், 45 ஆண்டுகளுக்கு மேலாக ஓசியே, மானியங்களே, சுகம் தரும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. உழைத்து சம்பாதிக்கவேண்டிய வயதில், ஓசிகளை வாங்கியே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற ஒரு சோம்பேறித்தனமான எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாக இதுபோன்ற எண்ணங்கள் பயனளிக்காது. முன்னுக்கு செல்லவேண்டிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுத்துவிடும்.
தமிழ்நாட்டில், அரசின் மொத்த வருவாயில் 41 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், பென்சனுக்காகவும் சென்றுவிடுகிறது. 40 சதவீத வருவாய் அரசு வழங்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் சென்றுவிடுகிறது. வருகிற மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்தக்கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டிக்காக 12 சதவீதம் சென்றுவிடுகிறது. வருவாயின் இவ்வளவு தொகை இந்த 3 இனங்களுக்கு மட்டுமே சென்று விட்டால், எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கமுடியும்? அரசு இனிமேலும் கடன்வாங்கி காலத்தை தள்ளமுடியாது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால்தான் மாநிலம் வளர்ச்சியை காணமுடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அறிக்கை வரவேண்டுமே தவிர, இலவசங்கள், மானியங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி, நாட்டை பின்னுக்கு தள்ளக்கூடிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, ஒருபோதும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்கவில்லை என்று பெற்ற பெயரை, வருகிற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அதைப்போல அறிவித்து, நற்பெயரை பெறவேண்டும். இறக்கம் தரும் இலவசங்கள், மானியங்கள் வேண்டாம். ஏற்றம் தரும் வேலைவாய்ப்புகளை தந்தால், அவர்களே உழைத்து சம்பாத்தியம் செய்துக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment