Wednesday, January 20, 2016

ஸ்டெத்தாஸ்கோப் காலம் முடிவுக்கு வருகிறதா? ... கு. கணேசன்

Return to frontpage

ஸ்மார்ட் ஸ்டெத்தாஸ்கோப்பின் வருகை

மருத்துவ உலகில் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளும், மருத்துவக் கருவிகளின் தொழில்நுட்ப மேம்பாடுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பொதுவாக, ஒருவர் மருத்துவர் என்பதற்கு அடையாளமாகப் பொதுமக்களால் பார்க்கப்படும் ஸ்டெத்தாஸ்கோப்பையும் நவீன மாற்றம் விட்டுவைக்கவில்லை. குழாய் வடிவத்தில் இருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்குப் பதிலாக ‘ஸ்மார்ட்போன்’ மாடலில் ஒரு நவீன ஸ்டெத்தாஸ்கோப்பை பிரிட்டனில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெத்தாஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்துவிடலாம்.

ஸ்டெத்தாஸ்கோப்பின் பூர்வீகம்

1816-ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ரெனே லென்னக் என்கிற மருத்துவர் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை உண்டு. அக்காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்துகொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது சரிப்படும்; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள்.

ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின்மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார்.

1816 செப்டம்பர் மாதத்தின் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் ‘லீ லோவர்’ அரண்மனையைச் சுற்றி நடை பயின்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத் துண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத் துண்டின் மறு முனையைத் தன் காதில் வைத்துக்கொண்டு, அந்த ஒலியைக் கேட்டுக் குதூகலித்தான்.

இதைப் பார்த்த லென்னக் ‘இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே!’ என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார். இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும், மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். நோயாளியின் நெஞ்சில் நேரடியாகக் காதை வைத்துக் கேட்பதைவிடப் பல மடங்கு துல்லியமாகக் கேட்டது, இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819-ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட - ஒரு காதை மட்டுமே வைத்துக் கேட்கக் கூடிய - மரத்தால் ஆன ஸ்டெத்தாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெத்தாஸ்கோப்!

அதன் பிறகு, அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843-ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெத்தாஸ்கோப் உருவானது. 1894-ல் பித்தளை, எஃகு போன்ற உலோகங்களால் இது வடிவமைக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டெத்தாஸ்கோப் எவர்சில்வர், ரப்பர், பிவிசி பிளாஸ்டிக் எனப் பல பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

வெளவால் தொழில்நுட்பம்

கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்கு மாற்றாக, பிரிட்டனின் ‘ஜெனரல் எலெக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்’ எனும் நிறுவனம் 'விஸ்கேன்' (VScan) என்கிற நவீன ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது.

இது வேலை செய்யும் விதம் சற்று வித்தியாசமானது. ‘வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் தத்துவம்தான் இதிலும் பயன்படுகிறது’ என்கிறார் GE நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்துகொள்ள, கேளாஒலி அலைகளை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்கு உண்டான இந்தத் தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘விஸ்கேன்’ சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் ‘டிரான்ஸ்டூசர்’ (Transducer) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை நோயாளியின் மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்திசெய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள்வாங்கி, முப்பரிமாணப் படங்களாகத் திரையில் பதிவுசெய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதைத் திரையில் பார்க்க முடியும். இதயத் துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்’ என்கிறார் அவர். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம்.

இதுபோல் டிஜிட்டல் மாடலில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒருவரின் நெஞ்சில் வைத்து, இதய ஒலிகளைப் பதிவுசெய்து, அதை வேறொரு இடத்தில் இருக்கும் மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், அங்கு அவர் அந்த ஒலிகளைக் கேட்டு நோயைக் கணிக்க முடியும். ரூ.15 ஆயிரம் விலையுள்ள இந்தக் கருவிக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நவீன ஸ்டெத்தாஸ்கோப்புகள் மருத்துவர்களின் பணியை எளிதாக்கும் என்றும் நோயைக் கண்டறியும் முறையில் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுவரும் என்றும் இவற்றின் தயாரிப்பாளர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

எதிர்ப்பு அலை

ஆனால், வாட்ஸ்அப் பாணி ஸ்டெத்தாஸ்கோப்புக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ‘இந்தக் கருவி 100 சதவீதம் நுட்பமானது அல்ல; இதய ஒலியில் சிறிதளவு வித்தியாசம் ஏற்பட்டாலும் நோய்க் கணிப்பு தவறாகிவிடும். இது உயிரோடு விளையாடுவதற்குச் சமம்’என்கிறார்கள் பல இதயநல வல்லுநர்கள்.

‘இதுபோல் 17 வகை ஸ்மார்ட்போன் மாடல் ஸ்டெத்தாஸ் கோப்கள் உலக நாடுகளில் வலம்வருகின்றன. இவை எல்லாமே இன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட்போன் மோகத்தைக் குறிவைத்து, வணிக நோக்கில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தயாரிக்கப் பட்டவை’ என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மருத்துவர் களும் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வில்லை. நோயாளியைப் பரிசோதிக்கும் முறைகளில் எத்தனைக் கருவிகள் விதவிதமாகச் சந்தைக்கு வந்தாலும், நோயாளியின் கரங்களைப் பிடித்து, நாடி பார்த்து, அவரது நெஞ்சில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துக் கேட்டு, சில வார்த்தைகள் கனிவாகப் பேசி, ஆறுதல் சொல்லி, ‘நோய் குணமாகும்’ என்ற நம்பிக்கையை விதைக்கிற பரிசோதனை முறைக்கு ஈடுஇணை எதுவுமில்லை என்று கருத்து தெரிவித்திருக்கி றார்கள். மக்களின்மீது உண்மையிலேயே அக்கறை உள்ள மருத்துவர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்ற கருத்தே மருத்துவ உலகில் நிலவுகிறது!

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment

44 booked for forging NRI documents to join MBBS course

44 booked for forging NRI documents to join MBBS course Bosco.Dominique@timesofindia.com  13.11.2024  Puducherry : Police in Puducherry have...