Friday, January 8, 2016

காற்றில் கலந்த இசை 37: இசைக் கலைஞனின் வெற்றிக் கனவுகள்! .;... வெ. சந்திரமோகன்

பாரதிராஜா இளையராஜா கூட்டணியின் 6-வது படம் ‘நிழல்கள்’. 1980-ல் வெளியான இப்படத்தின் கதை, வசனத்தை மணிவண்ணன் எழுதியிருந்தார். எண்பதுகளின் பிரச்சினைப் பட்டியலில் உச்ச ஸ்தானத்தில் இருந்த ‘வேலையில்லாத் திண்டாட்டம்’தான் படத்தின் முக்கியக் கரு. பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்த படம். ஒரே ஒரு காரணத்துக் காகக் காலத்தைக் கடந்து நிற்கிறது: இசை!
இளையராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை அவரது பாடல்கள் தொடர்பான தேடல் முடிவற்றது. பாடல் பிரபலமானதாக இருக்கும். ஆனால், அதன் காட்சி வடிவத்தைப் பார்த்திருக்க முடியாது. அதேபோல், படம் வெளியாகியிருந்தாலும் காட்சிப்படுத்தப்படாமல் போன அற்புதமான பாடல்களும் உண்டு. அவற்றில் ஒன்று ‘நிழல்கள்’ படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடல். நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுக்கென்றே அவதரித்த எஸ். ஜானகி பாடியது.
ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடலின் முகப்பு இசையில், சொல்லப்படாத காதலின் வலியை உணர்த்தும் வீணை இசை ஒலிக்கும். மனதுக்குள் பாடிக்கொள்ளும் ரகசியக் குரலில் தொடங்கும் பாடல், மெல்ல உருக்கொண்டு விஸ்வரூபம் எடுக்கும். முதல் நிரவல் இசையில், ஒற்றை வயலின், பெண் குரல்களின் கோரஸ், வீணையின் விகசிப்பு என்று பெண் மனதின் புலம்பல்களைப் பிரதிபலிக்கும் இசைக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.
சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல், அவநம்பிக்கையில் பிதற்றும் மனதைப் படம்பிடித்துக் காட்டும். இரண்டாவது நிரவல் இசையில், காதல் மனதின் உக்கிரத்தை உணர்த்தும் வயலின் இசைக்கோவையை ஒலிக்கவிடுவார். உக்கிரமான மனது உடைந்து உருகி வழிவதைப் போன்ற ஒற்றை வயலின் அதைத் தொடரும். காதலின் தவிப்பைத் துல்லியமாக வெளிப்படுத்தும் இப்பாடல், பின்னர் ‘சித்தாரா’ எனும் தெலுங்குப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. ‘வெண்ணெல்லோ கோதாரி’ என்று தொடங்கும் அப்பாடல் எஸ். ஜானகிக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
சருகுகளைச் சுழல வைக்கும் தென்றல், மெலிதான தூறல், மாலை நேரப் பொன்னிற மேகங்களின் நகர்வு, திரளும் மேகங்களின் உரசல்களில் கண்ணைப் பறிக்கும் மின்னல். இந்தக் காட்சியை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் முகப்பு இசையை ஒரு முறை கேளுங்கள். தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் பாடிய இப்பாடல் மிக நீண்ட முகப்பு இசையைக் கொண்டது. தாளச் சுழற்சியில் மிருதங்கத்தை ஒலிக்க வைத்த மற்றொரு பாடல் இது.
முதல் நிரவல் இசையில் சிணுங்கும் வயலின். வயலின் இசைக்கோவையின் முடிவில் திருமண மேளதாளம் என்று பாடலின் சூழலுக்கேற்ற இசை ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் வயலினுக்கும் புல்லாங்குழலுக்கும் இடையிலான உரையாடலை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா. உமா ரமணன் பாடும்போது அதை ஆமோதித்து ரசிப்பதுபோல், ‘ம்ம்..’ என்று தீபன் சக்கரவர்த்தியின் ஹம்மிங் ஒலிக்கும். அவர் பாடும்போது உமா ரமணனின் ஹம்மிங் இன்னொரு அடுக்கில் ஒலிக்கும். அபாரமான இசை வளமும், கற்பனைச் செறிவும் இத்திரைப்பாடலுக்குக் காவிய அந்தஸ்தை வழங்கின.
வைரமுத்துவின் முதல் பாடல் என்று அறியப்படும் ‘பொன் மாலைப் பொழுது’ பாடல் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. வாழ்க்கையை ரசிக்கும் இளம் கவிஞனின் பார்வையில், விரியும் நகரக் காட்சிகளின் மாலை நேரத் தொகுப்பு இப்பாடல். கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று ரசனையான இசைக் கருவிகளாலான முகப்பு இசையைத் தொடர்ந்து, கம்பீரமும் பாந்தமும் நிறைந்த குரலில் பாடலைத் தொடங்குவார் எஸ்பிபி. ‘வான மகள் நாணுகிறாள்…’ எனும் வரிகளிலேயே தமிழ்த் திரையுலகில் தனது வருகையைப் பதிவுசெய்துகொண்டார் வைரமுத்து.
பல்லவியைத் தொடர்ந்து பொன்னிற அடிவானத்தின் கீழ் இயங்கும் உலகை, பறவைப் பார்வையில் பார்க்கும் உணர்வைத் தரும் வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஒலிக்கும். இப்பாடலின் நிரவல் இசையில் சற்று நேரமே ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார், நினைவுகளின் தொகுப்பைக் கிளறிவிடும். படத்தில் சந்திரசேகரின் பாத்திரம் இசைக் கலைஞன் என்பதாலோ என்னவோ இப்படத்தின் எல்லாப் பாடல்களிலும் ஒற்றை வயலினுக்குப் பிரத்யேக இடமளித்திருப்பார் இளையராஜா.
தன்னை அழுத்திக்கொண்டிருந்த அவமதிப்புகளை, தோல்விகளைத் தகர்த்தெறிந்துவிட்டு வெற்றியை ருசிப்பதாகக் கனவுகாணும் இசைக் கலைஞனின் குதூகலம்தான் எஸ்பிபி பாடிய ‘மடை திறந்து’ பாடல். ஆர்ப்பரித்துப் பொங்கும் புதிய அலையாக ஒலிக்கும் வயலின் இசைப் பிரவாகத்துடன் பாடல் தொடங்கும். ஒவ்வொரு அணுவிலும், நரம்பை முறுக்கேற்றும் இசைத் தெறிப்புகள். வெற்றிக் கனவின் பிரதேசங்களினூடாகப் பயணம் செய்யும் அக்கலைஞனின் மனவோட்டங்களைப் பிரதிபலிக்கும் இசை.
அடிவானச் சூரியனைத் தொட முயல்வதுபோல் நெடுஞ்சாலையில் விரையும் வாகனத்தைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் ஹார்மோனியத்திலிருந்து எலெக்ட்ரிக் கிட்டாருக்குத் தாவும் இசை அவரது முத்திரை. ‘விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்’ எனும் வரிகளை இளையராஜா பாடுவதாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை பொருத்தமான காட்சி அது!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024