பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் (V.S.Raghavan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். தந்தை மறைவுக்குப் பிறகு, தாயுடன் புரசைவாக்கத்தில் அக்கா வீட்டில் வசித்தார்.
l சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
l ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.
l கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.
l தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
l 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.
l நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.
l திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
l சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
l அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்த வி.எஸ்.ராகவன் 2015-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 90-வது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment