Thursday, January 7, 2016

Return to frontpage

கனமழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது சமூகத்தில் மன அழுத்த பாதிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது? சில வழிமுறைகள்:

வாழ்வை எளிமையாக்குங்கள்

விரைவாக இயங்கும் நமது சமுதாயத்தில், மிகக் குறைவான நேரத்திற்குள் மிக அதிகமான செயல்பாடுகளை அடைத்துத் திணித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் உங்களுக்காகக் குறைவான நேரத்தை ஒதுக்குவதும்தான் பெரும்பாலும் மன அழுத்தமாக விளங்குகிறது. எனவே, எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செயல்படுவதற்கு வழிதேட முயல்வதுடன், சிலவற்றை கைவிட்டுச் செல்வதற்கும் வழிதேட முயலுங்கள். இவ்வாறு, வீட்டிலும் பணியிடத்திலும் உங்கள் வாழ்வை எளிமையாக்கி சமநிலையில் வைத்துக்கொள்வதற்குச் சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வீட்டில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வீடு அமைதிப் பூங்காவாக விளங்கவேண்டும் மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இடமாக அது இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீட்டில் உங்களுடைய மன அழுத்தச் சுமையை எளிதாக்கப் பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்:

# உணவு அட்டவணையை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடுங்கள். உங்கள் வார விடுமுறையின் ஒரு பகுதியை உணவுப் பொருட்களை வாங்குவதற்கும், பின்னால் அதை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்துங்கள். விருந்துகளில் வாழை இலையையோ காகிதத் தட்டுகளையோ பயன்படுத்துங்கள்.

# கால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அடுத்துவரும் மூன்று மாதங்களில் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் வரிசைப்படுத்துங்கள்.

# எதிர்பாராத மாற்றத்துக்கான திட்டங் களை கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக் குங்கள்: `நான் வருவதற்கு முன்பு, நீ வீட்டுக்கு வந்துவிட்டால்…’ என்பது போன்ற திட்டங்கள்.

# பொருட்கள் குப்பை போல் குவிந்துவிடுவதை அகற்றுங்கள். காகிதங்கள் சேர்ந்துவிடுவதைத் தடுப்பதற்கு ஓர் எளிய மூன்றடுக்கு கோப்பு முறையைப் பயன்படுத்துங்கள்: பில்களுக்கு ஒன்று, ஒருமாத காலத்திற்குள் உங்களுடைய கவனம் தேவைப்படுகிறவற்றுக்கு இன்னொன்று, கோப்பில் இட வேண்டியவற்றுக்கு மூன்றாவது.

# துப்புரவு குறித்து மறு-வரையறை செய்யுங்கள். நாள்தோறும் உங்கள் வீட்டைத் துப்புரவு செய்வதற்கு எவ்வளவு நேரத்தை உங்களால் செலவிட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே துப்புரவுக்காகச் செலவு செய்ய நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு அறையிலும் அதற்காக ஐந்து நிமிடங்களைச் செலவுசெய்யுங்கள். இதை மிளிர வைக்கவேண்டும், அதைக் கறையில்லாமல் வைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கெல்லாம் இப்போது டாட்டா காட்டிவிடுங்கள்.

# உங்களுடைய நேரத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் வாசலைப் பெருக்குவது, வீட்டு வேலை, பில் அல்லது வரி செலுத்துவது போன்ற பணிகளை எல்லாம் மற்றவரிடம் ஒப்படையுங்கள் அல்லது அவற்றுக்காகச் சம்பளம் கொடுத்து ஒருவரை பணியில் அமர்த்துங்கள். இந்த நேரத்தை உங்கள் குடும்பத்தினருடன் செலவிடுங்கள். அல்லது நல்லதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

பணியில் உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம், நாள்தோறும் கூடுதல் வேலைகளைச் செய்து முடிக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பணியிடத்தில் செய்ய வேண்டிய பணித் திட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆழம் உங்களுக்குப் பெரும் பாரமாக உள்ளதா? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்ற முயலுங்கள்:

# ஒவ்வொரு நாளுக்கும் திட்டமிடுங்கள். `செய்ய வேண்டியவை’ பட்டியலை எழுதி, மிக முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். இதை, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்முன் செய்ய முயலுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கு அது தயாராக இருக்கும்.

# பொறுப்பை ஒப்படையுங்கள். நீங்கள் உங்களுடைய `செய்ய வேண்டியவை’ பட்டியலைப் பார்த்து, எவற்றை இன்னொருவரின் பொறுப்பில் ஒப்படைக்கலாம்; எவற்றை முற்றிலும் விட்டுவிடலாம் என முடிவுசெய்யுங்கள்.

# தரமாக வேலையைச் செய்வதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேலையை முதல் முறையே சரியாகச் செய்வதற்குச் சற்று கூடுதலான நேரம் ஆகலாம். எனினும், பிழைகள் ஏற்பட்டால் அவை சார்ந்த திருத்தங்களுக்கு மேலும் நேரம் செலவாகி, ஒட்டுமொத்த பணி நேரத்தை அது அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

# அவசியமற்ற வேலைகளை எடுக்காதீர்கள். கூடுதல் வேலையை ஏற்பதற்கு முன்பு உங்களுடைய குறிக்கோள்களையும் கால திட்டத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

# அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெரிய பணிகளைச் சிறுசிறு பணிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகச் செய்வதற்கும் சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக முழு பணியையும் நிறைவு செய்யுங்கள்.

# உங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுங்கள். மூன்று நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் எழுதிவையுங்கள். மேலும், புத்திசாலித்தனமாக நேரத்தைப் பயன்படுத்துவதற்கு வழி தேடுங்கள். எடுத்துக்காட்டாக, பேருந்தில் பணிக்குச் செல்வதன் மூலம், பயண நேரத்தைப் படிப்பதற்காகப் பயன்படுத்தலாம், இல்லையா?

# நன்றாகத் தூங்குங்கள்; நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். கவனமும் கவனக்குவிப்பும் மேம்படும்போது, உங்கள் பணியைக் குறைவான நேரத்தில் முடிப்பதற்கு துணை புரியலாம்.

# நேர மேலாண்மை பற்றிய வகுப்புக்குச் செல்லுங்கள். உங்கள் பணியிடத்தில் நேர மேலாண்மை வகுப்புக்கு ஏற்பாடு இல்லையெனில், ஓர் உள்ளூர் சமுதாயக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கான ஏற்பாடு இருக்கிறதா என விசாரியுங்கள்.

# உங்களுக்குத் தேவைப்படும்பொழுது பணியில் இடைவெளி விடுங்கள். உங்கள் பணியிடத்திலேயே சற்று உடலை வளைத்துப் பயிற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஒரு சுற்று நடை போடுங்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.



நன்றி: மேயோ கிளினிக் ‘மனஅழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?’
உங்கள் நலவாழ்வுக்கான எளிய வழிகள் புத்தகம்
தொடர்புக்கு: அடையாளம், 1205/1,
கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621310,
திருச்சி.
தொலைபேசி: 04332-373444.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024