Thursday, January 14, 2016

ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம் தீர்வாகுமா?

First Published : 14 January 2016 01:10 AM IST
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளதால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் கலாசாரம் தொடர்புடைய ஒரு வீர விளையாட்டுக்கு, மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் ஒரு நிகழ்வுக்கு ஜனநாயக நாட்டில் அளிக்கப்படும் மரியாதை இவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த ஓரிரு நாள்களே உள்ள நிலையில் இந்தத் தடை உத்தரவு ஜல்லிக்கட்டு கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஓர் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது இப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை. தடை விதிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்து விட்டது அல்ல.
 முதல் தடை விதிக்கப்பட்டது கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம். இதுவரையில், சுமார் 18 மாதங்கள் உருண்டோடி விட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரையில் இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழர் நல அமைப்புகளும் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இப்போது, தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் எல்லோரையும் விழித்துக் கொள்ளச் செய்துள்ளது.
 மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற ஒருமித்த குரலில், இனிமேல் மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே அதை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு இனிமேல் வாய்ப்பில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்து விட்டார்.
 தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை, ஏன் நிர்வாக ரீதியிலான ஓர் உத்தரவை பிறப்பித்தாலே போதுமானது என்று யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகுமா? ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக அமையுமா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கு வேறு எங்கும் முன்னுதாரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை.
 ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை விவகாரமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2006-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை செயலற்றதாக்கும் வகையில் கேரள அரசு உடனடியாக பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
 அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவின்பேரில் அந்த சட்டம் செல்லாது என கடந்த 2014-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ""கேரள அரசின் 2006-ஆம் ஆண்டு சட்டத் திருத்தமானது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் வகையில் அரசியல் சட்டம் அனுமதிக்காத ஒன்றை நேரடியாகக் கோருகிறது'' என கூறியது.
 அதாவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை விரும்பாத மாநில அரசுகள், அவரவர் விருப்பம்போல சட்டங்களையோ அல்லது அவசரச் சட்டத்தையோ நிறைவேற்றிக் கொண்டால் நிலைமை என்னவாகும்? அது நீதித்துறையின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இருக்கும். இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 142 அடிக்கு உயர்த்தி இருக்க முடியாது.
 ஜல்லிக்கட்டுக்காக இன்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றினால் அடுத்த ஓரிரு நாளில் காளைகளை அடக்கி மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அது உச்சநீதிமன்றத்தின் தடைக்கு எதிரான நிரந்தர தீர்வாக இருக்குமா? கேரளத்துக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயத்தை உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா?
 அவசரச் சட்டம் என்பது, நாடாளுமன்றம் கூடாத காலங்களில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கானது. அதன் ஆயுள்காலம் குறைந்தபட்சம் ஆறு வாரங்கள். தேவைப்பட்டால் ஆறு மாதங்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
 ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு மூன்று முறை நாடாளுமன்றம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்க சட்டத் திருத்தம் கொண்டு வர ஆளுங்கட்சிக்கும் தோன்றவில்லை, மற்றவர்களும் வசதியாக மறந்து விட்டார்கள். இப்போது அவசரச் சட்டம் என்பது செயலற்ற தன்மையின் வெளிப்பாடே தவிர வேறோன்றுமில்லை.
 நிலம் கையக விஷயத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
 அரசியல் காரணங்களுக்காக ஆளுங்கட்சி அவசரச் சட்டத்தை கொண்டு வந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சிகள் அதற்கான அழுத்தத்தை கொடுத்தாலும் சரி, அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பதாக அமையாது. மோசமான முன்னுதாரணங்களையே ஏற்படுத்தும்.
 நாட்டு நலன், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் அதனதன் காலத்தே செயல்பட வேண்டும்.
 அரசியலுக்காகவும், வாக்குக்காகவும் செயல்படும் கட்சிகளால் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் 18 மாதங்கள் "சும்மா' இருந்துவிட்டு இப்போது அவசரச் சட்டம் என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.
 

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...