Thursday, January 7, 2016

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

நம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்

தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.

ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.

ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.

தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.

இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். | படங்கள்: எம்.லட்சுமி அருண்

கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.

ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.

இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024