Wednesday, January 27, 2016

சுயநிதிக் கல்லூரியும், செட்டப் ஆஸ்பத்திரியும்... ....கே. மகேஷ்

Return to frontpage

முன்னாடி எல்லாம் கடை வாசல்ல உட்கார்ந்து நாலஞ்சி பெருசுக பேப்பரை படிச்ச மாணிக்கே இருப்பாங்க. ஒரு புள்ளி விடாம வாசிச்சிருவாங்க. அதுவும் சட்டசபை செய்தின்னா கேட்கவே வேணாம்.

“கேட்டாம் பாரு கேள்வி”ன்னு செல்லையா தாத்தா சொல்வாரு. “பதில் அதவிட பிரமாதம்யா”ம்பாரு இளந்தாடி தாத்தா. “எல்லாம் தப்புய்யா. அது மரபு கெடையாது” அப்பிடிம்பாரு தங்கய்யா தாத்தா.

ஒரு தடவை நான் கடைக்குப் போயி அப்பாகிட்ட, “யப்போ, அம்மை உங்கள சாப்பிட கூப்டாவ”ன்னேன். பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்த தங்கய்யா தாத்தாவுக்கு கோவம் வந்திருச்சி. என் காதை பிடிச்சித் திருகி, “அப்பாவாமுல்லா, அப்பா. அதுக்கு, ‘ஏலெ பிச்சக்கனி கஞ்சி குடிக்கவாலே’ன்னு கூப்பிட்டிருக்கலாம்ல. பெத்த தகப்பன, ‘அய்யா இங்க வாரும், போரும்’ மரியாதையா கூப்பிடத் தெரியல. நீயெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சி என்னாத்துக்கு?”ன்னு குமுறிட்டாரு.

ஏன்னா அவருக்கு எல்லாமே மரபுப்படி நடக்கணும். நல்லவேள இப்ப அவரு உசுரோட இல்லை. இருந்திருந்தா சட்டசபை செய்தியப் படிச்சிட்டு ரொம்பப் புலம்பியிருப்பாரு.

எனக்கு சட்டசபை மரபெல்லாம் தெரியாது. இருந்தாலும் இந்த தடவை பெருத்த ஏமாத்தம். நாலரை வருஷமா சட்டசபை கூட்டத்தொடர் ஒரு மாதிரியா நடந்திருந்தாலும், கடைசி கூட்டத்தொடர்லயாவது பூராப் பேரும் அநியாயத்துக்கு ‘பெர்பார்ம்’ பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். வழக்கம் போல ஏமாத்திட்டாங்க. பாவம், சட்டசபையில பேசுறதுக்கு மேட்டரே இல்ல பாருங்க.

நம்ம கல்வித்தரத்தப் பத்தியும், கல்வி நிறுவனங்களப் பத்தியும் பேசுறதா இருந்தாலே ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நாள் வேணும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, சுய நிதிக் கல்லூரி, பேராசிரியர் பணி நியமனம், துணை வேந்தர் தேர்வுன்னு விலாவாரியா பேசுனா ‘புரட்சித் தலைவி அம்மா’ சொன்ன மாதிரி, 36 நாளு பேச வேண்டியது இருக்கும். ஆனா யாரும் பேசல. எதிர்க்கட்சிகளப் பேச விடலைன்னா, உங்க பாணியில மக்கள் மன்றத்துலயாவது பேசலாம்ல? பேச மாட்டாங்க. ஏன்னா, நம்ம அரசியல்வாதிகளுக்கும், அவங்களோட புரவலர்களுக்கும் கல்வி வியாபாரம்தான் மெயின் பிஸினஸே... செய்யும் தொழிலே தெய்வம். அதைப் பத்தி பேசுனா சாமி குத்தமாகிடாதா?

மருத்துவக் கல்லூரிகள்

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில தற்கொலை பண்ணுன மாணவிக எழுதிவெச்சிருந்த கடிதாசிய பேப்பர்ல படிச்சிருப்பீங்க. ‘அடிப்படை வசதி இல்ல, கெட்ன பீசுக்கு ரசீது தர்றதில்ல, மாணவர்கள கிரிமினல்னு திட்டுறாங்க, செத்த பிறகு கூட நடத்தை சரியில்லைன்னு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு’ன்னு அந்தப் புள்ளைக எழுதியிருக்குதுக. நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க இந்தப் பிரச்சன, அந்த காலேஜ்ல மட்டும்தாம் இருக்குன்னு? தமிழ்நாட்ல இருக்க பூரா சுய நிதிக்கல்லூரிகள்லேயும் இதே பிரச்சனை இருக்கு. இது கல்வித்துறை அதிகாரிகள்ல இருந்து அரசாங்கம் வரைக்கும் தெரிஞ்ச விஷயம்தாம். எஸ்விஎஸ் கல்லூரியப் பத்தி கலெக்டர்ல இருந்து மருத்துவ கல்வி இயக்குநரகம் வரைக்கும் மாணவர்கள் புகார் பண்ணியிருக்காங்க. ஆனா நடவடிக்கை எடுக்கல. 3 பிள்ளைக செத்தப் பிறகு, ‘சினிமா போலீஸ்’ மாதிரி கிளைமாக்ஸ்ல வந்திருக்காங்க அதிகாரிங்க. கல்லூரிகள்ல மாணவர்கள் இறந்தது புதுசும் இல்ல, உடனே இது நிற்கப் போறதும் இல்ல.

ஏன்னா, சுயநிதிக் கல்லூரிகள்ல டிசிப்பிளின்ங்கிற பேர்ல பசங்க அடிமை மாரி நடத்துறாங்க. மாணவர்களுக்குப் பிரச்சனைன்னா, ஆசிரியர்கள்தாம் நிர்வாகத்துகிட்ட பேசணும். ஆனா தனியார் சுயநிதிக் கல்லூரிகள்ல ஆசிரியர்கள் நிலைமையே கவலைக்கிடமா இருக்கு. ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டை கையில குடுத்துட்டு, தங்களோட பிரச்சினையையே பேச முடியாத வாயில்லாப் பூச்சிகளா இருக்கவங்க, மாணவர்களுக்காகப் பேச முடியுமா? அப்பிடிப் பேசி பிரச்சனையானா, எத்தனை மீடியாக்கள் அவங்களுக்காக செய்தி வெளியிடும்-? அவங்களும் தாம் காலேஜ் நடத்துறாங்களே!

செட்டப் மருத்துவமனை

மதுரையில எங்க வீட்டுப் பக்கம் ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரி இருக்கு. அடிக்கடி பிரச்சனை வந்தாலும் ‘தெறமையா’ சமாளிச்சிடுவாங்க. போன வருஷம் அரசு அனுமதியில்லாமலேயே கூடுதலா மாணவர்களைச் சேத்திட்டாங்கன்னு பிரச்சினை. பல லட்சம் டொனேஷன் குடுத்து சேர்ந்த பசங்களுக்கு, பரீட்சை நேரத்துல ஹால் டிக்கெட் வராமப் போயிருச்சி. அவங்களுக்கு எல்லாம் ஹால்டிக்கெட் வராதுன்னு நிர்வாகத்துக்கு ஏற்கெனவே தெரியும். எப்பிடியும் பரீட்சைக்கு முன்னால கூடுதல் சீட்டுக்கு அனுமதி வாங்கிடலாம்னு நினைச்சிருந்தாங்க. ‘வாங்க’ முடியாததால பிரச்சினை வெளிய வந்திடுச்சி. அப்புறம் என்ன மாணவர்களைத் திருப்திப்படுத்துறதுக்காக மருத்துவ பல்கலைக்கழத்து மேல பேருக்கு ஒரு கேஸைப் போட்டுட்டு ஜாலியா இருக்காங்க.

அதே கல்லூரியில இந்த வருஷம் வேறொரு பிரச்சனை. மூச்சுத்திணறல் வந்து மயங்கி விழுந்த ஒரு பையன், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் முன்னாடியே இறந்திட்டாம். அங்கயிருந்த டாக்டர்க ‘ஏன்யா மெடிக்கல் காலேஜ்ல இருந்து தான வர்றீங்க? அங்க பர்ஸ்ட் எய்ட் குடுக்கணும்ங்கிற அறிவு கூடவா இல்ல’ன்னு திட்டியிருக்காங்க. ‘அய்யோ சார், எங்க காலேஜ்ல டாக்டர் மட்டுமில்ல, ஆக்ஸிஜன் சிலிண்டரும் கெடையாது’ன்னு சொல்லிப் புலம்பியிருக்காங்க பசங்க. விதிப்படி எந்த மருத்துவக் கல்லூரி நடத்தினாலும் அதாடு சேர்ந்து ஆஸ்பத்திரியும் இருக்கணும். ஆனா, எத்தனை காலேஜ்ல அப்படி இருக்கு-? அதிகாரிங்க ஆய்வுக்கு வரும்போது மட்டும், ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்துல வர்ற மாதிரி வேகவேகமா ஒரு ‘ஆஸ்பத்திரி செட்’ போட்டுச் சமாளிக்கிறாங்க.

ஏழை படும் பாடு

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளாவது ஓரளவு வசதியா னவங்ககிட்ட கொள்ளையடிக்குது. ஆனா, நர்சிங், ஐடிஐ, லேப் டெக்னீஷியன்னு சொல்லி கோர்ஸ் ஆரம்பிக்கிறாங்க பாருங்க. அவங்களோட இலக்கு முழுக்க ஏழைங்க. அதுவும் பாவப்பட்ட கிராமப்புற ஏழைங்க.

ஏப்ரல், மே மாசம் வந்திட்டா போதும், தேர்தல் வௌம்பரம் கணக்கா ஊரெல்லாம் “நர்சிங், நர்சிங் அசிஸ்டெண்ட், லேப் டெக்னீஷியன், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி! குறைந்த கட்டணம்! உடனடி வேலைவாய்ப்பு!”ன்னு எழுதித் தள்ளிருவாங்க. கண்ணைப் பறிக்கிற கலர்ல பிளக்ஸ் வௌம்பரம் வேற.

கடன்வாங்கி பிள்ளைகளச் சேப்பாங்க ஏழைங்க. டுட்டோரியல் காலேஜ் மாதிரி ஏதாவது மொட்டை மாடியில கூரை போட்டு வகுப்பு நடக்கும். ஒரு வழியா அந்தப் புள்ளைகளும் படிச்சி(-?) பாசும் ஆகிடுங்க. அப்புறம்தாம் தெரியும் இந்த சர்ட்டிபிகேட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூட பதிய மாட்டாங்கன்னு. இதுல வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் தொல்ல வேற.

அரசாங்கத்தையும், கல்வி வியாபாரிகளையும் மட்டும் குத்தம் சொல்லிப் பிரயோசனம் இல்ல. நம்மோட தனியார் மோகம்தாம் எல்லாத்துக்கும் மூல காரணம். நான் குடியிருக்கிற ஊரு அரசாங்க பள்ளிக்கூடத்துல என்ன குறைன்னாலும் புகார் பண்ணுற அதிகாரம் சலூன் கடை வெச்சிருக்கிற மதியழகனுக்கு இருக்குது. ஏன்னா அவரோட பிள்ளை அங்க படிக்கதால அவர கல்விக்குழு உறுப்பினரா போட்டிருக்காங்க. எல்கேஜிக்கு 1 லட்சம் நன்கொடை கொடுத்து பிள்ளைய நர்சரி ஸ்கூல்ல சேத்த நம்மால, ‘என்ன சார் ஸ்கூல் 3 மணிக்கே முடிஞ்சிடுச்சி. பையன் 5 மணிக்குத்தான் வீட்டுக்கு வாரான். ஒரு பஸ்தாம் வெச்சிருக்கீங்கள்லா-?ன்னு துணிஞ்சி கேள்வி கேட்க முடியுமா? பிள்ளைய பழி வாங்கிடுவாங்களோன்னு பயப்படுறோம். இதே பயம் மெட்ரிக் ஸ்கூல், காலேஜ்ன்னு தொடர்ந்துக்கிட்டே இருக்குது. பெத்தவங்களும் பயப்படுறோம், பசங்களும் பயந்து பயந்தே சாவுறாங்க.

வாழ்க்கைய வாழ்றதுக்கு கல்வியா? எப்பிடியாவது பயந்து நடுங்கி செத்துப் பிழைச்சாவது, பிழைக்க வழிதேடுறது கல்வியா? முதல்ல யோசிக்க வேண்டியது நாமதாம்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

No comments:

Post a Comment

44 booked for forging NRI documents to join MBBS course

44 booked for forging NRI documents to join MBBS course Bosco.Dominique@timesofindia.com  13.11.2024  Puducherry : Police in Puducherry have...