Thursday, January 7, 2016

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ்
C  

1
நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?
பட்டத்து யானைகள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்றே தம்மைக் கருதுகின்றன. அதிலும் எறும்புகள் அதிகபட்சம் உழைப்பதற்கும் ஓட்டுப் போடுவதற்கும் மட்டுமே உரிமயுடையவை என்றும் அவை கருதுகின்றன. நம்மூரில் ஜனநாயகத்துக்கான அதிகபட்ச மதிப்பு அவ்வளவுதான். சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத் இதைத்தான் அவருக்கே உரிய திராவிட நடையில் சொல்லியிருக்கிறார்: “எறும்புகள் சாகின்றன என்பதற்காகப் பட்டத்து யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா?”
நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சிப் பதவியிலிருந்து ‘விடுவிக் கப்பட’ அவர் கொடுத்த பேட்டிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் தலைமை சொல்லவில்லை. என்றாலும், மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். மேலும், “அதுதான் உண்மை யான காரணம் என்றால், அவர் பதவி நீக்கப்பட்டது சரிதானே?” என்றும் கேட்கிறார்கள். அதுதான் காரணமா என்று நமக்குத் தெரியாது. ஆனால், அதுதான் காரணம் என்றால், அங்கே ஒருவர்கூடப் பதவியில் நீடிப்பது நியாயமாக இருக்காது.
நாஞ்சில் சம்பத் ஒரு பதச் சோறு
நாஞ்சில் சம்பத் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மேடைப் பேச்சில் தேறியவர். பேட்டிகளும் இக்கட்டான கேள்விகளும் அவருக்குப் புதியவை அல்ல. “ஐயோ, மேடையிலேயே அவர் கொச்சை கொச்சையாகப் பேசுவாரே!” என்று நீங்கள் கேட்பீர்களேயானால், மேடைக்குக் கீழே அவர் இன்னும் பேசுவார் என்பதே பதில். நாஞ்சில் சம்பத்திடம் வெளிப்பட்டது ஆட்சியாளர்களின் மமதைக்கு ஒரு பதம் சோறு. சுற்றிலும் விளக்குகள் எரிய, கேமராக்கள் முன் தான் பேசுவதைக் கோடிப் பேர் பார்ப்பார்கள்; விமர்சிப்பார்கள் எனும் எல்லைக்குட்பட்ட சூழலில், பொதுவெளிக்கு ‘நன்கு பயிற்சி பெற்ற’ சம்பத்தே இப்படிப் பேசுகிறார் என்றால், ஏனையோர் எப்படிப் பேசுவர்?
இந்த வெள்ளம் தொடர்பாக ஒரு மாதமாகப் பல்வேறு தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறோம். என்னிடம் பேசிய ஒரு அதிமுககாரரும் பரிவோடு பேசி நான் கேட்டதில்லை. “ஆமாம், வெள்ளம் வந்துச்சு… ஆத்தோரம் இருந்தா அடிச்சுக்கிட்டுப்போவத்தான் செய்யும். நாங்க என்னா பண்ண முடியும்? கூட விழுந்து சாவணும்கிறீங்களா?” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டவர்களே அதிகம்.
அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அரசியல் யானைகள் தங்களை எப்போதும் பட்டத்து யானைகளாகவே கருதுகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையின்போது உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றனவா? குண்டுகள் தமிழர்கள் மீது கொத்துக்கொத்தாக விழுந்துகொண்டிருந்தபோது, “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்றார் கருணாநிதி. “போர் ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா.
வார்த்தைகள் ஒரு வெளிப்பாடு. அவற்றைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ளவை செயல்பாடுகள். “ஒரு வீட்டில் ஒப்பாரிச் சத்தம் கேட்கிறது என்பதற்காக, பக்கத்து வீட்டில் கல்யாணக் கச்சேரியைத் தவிர்க்க முடியுமா?” என்று கேட்ட நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகள், ஒரு கட்சியின் அலட்சியத்தின் வெளிப்பாடு என்றால், வெள்ளப் பிணங்கள் சுடுகாட்டைச் சேரும் முன் மதுக் கடைகளைத் திறந்த ஒரு அரசின் செயல்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
செய்தியாளர்கள் குணசேகரனும், ரங்கராஜ் பாண்டேவும் எழுப்பிய கேள்விகள் மக்களின் கேள்விகள். வெளியே இதைவிடவும், பல மடங்கு கோபத்தோடும் கேள்விகளோடும் இருக்கிறார்கள் மக்கள். அன்றைய தாய ஆட்டத்தில் நிகழ்தகவில் விழுந்த புள்ளி நாஞ்சில் சம்பத். வேறு யாரேனும் அங்கு உட்கார்ந்திருந்தால் மட்டும் என்ன பதில் சொல்லிவிடப்போகிறார்கள்? “ஆமாம், எங்கள் கட்சி தவறிழைத்துவிட்டது. மக்கள் இன்னலில் உழன்றுகொண்டிருக்கும்போது கட்சிக் கூட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் இவ்வளவு பிரம்மாண்டமும் இப்படியான கொண்டாட்டமும் நடந்தது அநாகரிகம். எங்கள் இயக்கம் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று பேச இன்றைக்கு இங்கே எந்த அரசியல்வாதிக்காவது மனசாட்சி இருக்கிறதா அல்லது அப்படியான ஜனநாயகம்தான் எந்தக் கட்சியிலாவது இருக்கிறதா? எந்த நடராஜனோ ஆட்சியைப் பற்றி விமர்சித்தால், எந்த நடராஜனையோ கட்சியைவிட்டு நீக்கிச் சேர்க்கும் அளவுக்குத்தானே உட்கட்சி ஜனநாயகம் இங்கே இருக்கிறது!
யூனூஸுடன் ஓர் உரையாடல்
ஓரிரு நாட்களுக்கு முன் முஹம்மது யூனூஸைச் சந்தித்தேன். இந்த மழை வெள்ளம் நமக்குக் காட்டிக்கொடுத்த நல்மனிதர்களில் ஒருவரான அதே யூனூஸ்.
“இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் சின்னதாக ஒரு அலுவலகம் நடத்துறேன். இணைய வர்த்தகம்” என்றார். “எது உங்களை மீட்புப் பணிக்கு உந்தித் தள்ளியது?” என்ற கேள்விக்குப் பின் அவர் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நாம் இன்றைய அரசியல்வாதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
“இந்த டிசம்பர் மழைக்கு முன்னாடி நவம்பர்ல ஒரு பெருமழை பெஞ்சுது இல்லையா, அதுதான் என் வாழ்க்கையில திருப்புமுனை. அதுவரைக்கும் என் வாழ்க்கையோட குறிக்கோள் நூறு கோடி ரூபா சம்பாதிக்கிறது. வேகமா சம்பாதிச்சுக்கிட்டும் இருந்தேன். நவம்பர்ல அந்த மழை பெஞ்ச நாளுக்கு மறுநாள் வீட்டுலேர்ந்து வீதிக்கு வந்தப்போ நிறையப் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்னதைப் பார்த்தேன். ஓர் இளம்பெண் கைக்குழந்தைக்கு வீதியில உட்கார்ந்து பால் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு.
எனக்குச் சொந்தமான வீடுகள்ல சில வீடுங்க காலியா இருந்துச்சு. வீதியில நின்ன சில குடும்பங்களை அழைச்சுக்கிட்டு வந்து அங்கே தங்க வெச்சோம். தலை மேல கை வெச்சி அவங்க வாழ்த்தினப்போ, வாழ்க்கையோட அர்த்தமே வேறன்னு புரிஞ்சுச்சு.
அடுத்த மழை பிடிச்சப்போ சமூக வலைதளங்கள்ல நண்பர்க ளோட சேர்ந்துக்கிட்டு முடிஞ்சவரைக்கும் உதவிக்கிட்டு இருந்தோம். டிசம்பர் 1 அன்னைக்கு உதவி கேட்டு நூத்துக்கணக்கானவங்க தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அப்படித்தான், ஊரப்பாக்கத்துலேர்ந்து ஒரு அழைப்பு வந்துச்சு.
`வெள்ளம் ஆறா அடிச்சிக்கிட்டுப்போவுது. எல்லாம் மாடில குழந்தைங்களோட நிக்கிறோம். எப்படியாவது காப்பாத்துங்க'ன்னு. அரசாங்கத் துறைகள் யாரையும் அணுக முடியலை.
ஆயிரக்கணக்கானவங்க சிக்கியிருக்காங்க. பெரிய வெள்ளம். படகுங்க இல்லாம உதவிக்குப் போக முடியாது. கடக்கரையை நோக்கி ஓடினோம். 20 படகோட்டிகளோட 9 படகுகளை எடுத்துக்கிட்டு ரொம்பக் கஷ்டங்களுக்கு மத்தியில போய்ச் சேர்ந்தோம். நாங்க போனப்போ, அது ஊரா இல்லை. வெள்ளக்காடா இருந்துச்சு. குறைஞ்சது பத்தடித் தண்ணீ கடுமையான வேகத்துல ஆறாப் பாயுது. கும்மிருட்டு வேற. ராத்திரி மூணரை மணி இருக்கும். அப்போ ஆரம்பிச்சு மறுநாள் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும் போராடிக் காப்பாத்தினோம்.”
அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் நிறைமாதக் கர்ப்பிணி சித்ரா. தன் பிள்ளைக்கு இப்போது யூனூஸ் பெயரைச் சூட்டியிருக்கிறார். வெள்ளத்தில் உதவிக்கு அழைத்தவர்கள் யூனூஸுக்குப் பரிச்சயமானவர்களா? இல்லை. படகோட்டிகள் பரிச்சயமானவர்களா? இல்லை. “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டால், அதுவும் “தெரியாது” என்றார். அப்புறம் எப்படி திடீரென்று அந்த இருட்டில் கிளம்பிப்போனார்? ‘‘உயிருக்குப் போராடுற இடத்துல நம்மை வைக்காம, உதவுற இடத்துல நிறுத்தியிருக்கார் கடவுள். அப்போ உதவுறது கடமை இல்லையா?’’ என்றார். இந்த மீட்புப் பணியின்போது யூனூஸ் ஒரு இடத்தில் தவறி விழுந்திருக்கிறார். வெள்ளம் அடித்துச் செல்லவிருந்தவரை இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். “மொத்தம் எத்தனை பேரை மீட்டீர்கள்?” என்றேன். “1,500 குடும்பங்கள்” என்றார். கையைப் பிடித்துக்கொண்டேன்.
ஒரு யூனுஸால் 1,500 பேரை மீட்க முடிந்திருக்கிறது என்றால், சர்வ வல்லமையும் கொண்ட ஒரு ஆளுங்கட்சியினரால் இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்? தமிழகத்தில் எல்லா பெரிய கட்சிகளுமே மீனவர்கள் அணி என்று ஒன்றை வைத்திருக்கின்றன. உள்ளதிலேயே பெரியது ஆளுங்கட்சியின் மீனவர் அணி. ஒரு யூனூஸ் அழைத்தால் 20 பேர் ஓடி வருகிறார்கள் என்றால், ஆளுங்கட்சியினர் அழைத்திருந்தால் எத்தனை பேர் ஓடிவந்திருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்?
பரிவு எங்கே?
எது ஒரு யூனூஸைத் தன் உயிரையும் பொருட்படுத் தாமல் ஓடச்செய்ததோ, அது இல்லாததுதான் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரை மமதையோடு பேசச் செய்கிறது. அன்பு - பரிவு - கருணை.
பட்டத்து யானைகள் வலியவை. பிரம்மாண்டமானவை. பட்டத்து யானைகள் பீடுநடைக்கு முன் எறும்புகளின் சாவுகள் ஒரு பொருட்டல்லதான். ஆனால், சக எறும்புகளை அவை கலங்கவைக்கும்; துன்புறுத்தும்; அச்சத்தில் ஆழ்த்தும்; ஒன்றுதிரட்டும். பட்டத்து யானைகள் பட்டத்து யானைகள்தாம். எறும்புகள் எறும்புகள்தாம். ஆனால், கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னாகும்? யோசிக்க வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024