Wednesday, January 6, 2016

வாட்ஸ்அப் தகவல்களைப் பரப்பலாமா?....நிதின் பாய்

Return to frontpage

அவசரகதியில் பகிரப்படும் தகவல்களால் தீமைகள்தான் அதிகம்

எதையும் அலசி ஆராய்ந்து வாதப் பிரதிவாதம் செய்யும் இந்தியர்களின் இடத்தை எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கியெழும் இந்தியர்கள் அபகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ எனும் ஐயம் எழுகிறது. விசாலமான பார்வைகளை முன்வைக்கும் பொது விவாத மேடைகள் அரிதாகிவருகின்றன. பொது மேடைப் பேச்சுகள் என்றாலே கத்திக் கூப்பாடுபோடுவது என்றாகிவிட்டது. இந்தப் போக்கு தணியப்போவதாகத் தெரியவில்லை. ஆக, தலைப்புச் செய்திகளையும் உடனடி அலசல்களையும் விட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கிப் போராடினார்கள். அதன் பிறகு, இந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அந்த வரிசையில் நடிகர் மற்றும் இயக்குநர் அனுபம் கெருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இந்தியாவில் சகிப்புத்தன்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துவிட்டதாக நடிகர் அமிர்கான் கூறியதைக் கண்டித்து, அனுபம் கெர் ஊர்வலம் நடத்தினார். இப்படி எதிர்ப்பை எதிர்த்ததற்காக அனுபம் கெருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர்ப்புச் சங்கிலிகள்

இதேபோன்று சமீபத்தில் பெங்களூருவில் நடத்தப்பட்ட இலக்கியச் சங்கமமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து, இந்தியாவில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவருவதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தனர் இல்லையா! அந்த எதிர்வினையைச் சிலர் விமர்சித்தனர். அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் விக்ரம் சம்பத். இவர் இலக்கியவாதிகளின் ஒப்பற்ற படைப்புகளுக்கு அரசு சாரா நிறுவனமான சாகித்ய அகாடமி கொடுத்த விருதுகளை எதற்காகத் திருப்பித் தர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அவர் ஒருங்கிணைத்த இலக்கியக் கூட்டம்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவை முறியடிக்கச் சில எழுத்தாளர்கள் முயன்றதாகச் சிலர் ஆவேசப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நிகழ்வுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம். அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஒரு பிரச்சினைக்கு ஊடகம் ஏற்படுத்தும் பிம்பத்துக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கினோம். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் எதிர்வினைக்கு எதிர்வினை ஏவப்படுகின்றன. இப்படியாக எதிர்வினைக்கு எதிர்வினை. மீண்டும் அதற்கு எதிர்வினை என ஒரு தொடர் சங்கிலியாக எதிர்வினைகள் முடிவிலியில் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆக, செய்திகளுக்குப் பதிலாக எதிர்வினைகளும் எதிர்ப்பலைகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவெளிகளில் விவாதம் என்பது சுருங்கிக்கொண்டே போகிறது. நாடகத்தனமாகக் கூச்சலிடும் செய்தித் தொகுப்பாளர்களும், கத்திக் கூப்பாடுபோடும் பேச்சாளர்களும், பிரச்சினையைப் பூதாகாரமாக்கும் நிருபர்களும், ஒருதலைப்பட்சமான வர்ணனையாளர்களும், சந்தர்ப்பவாதிகளான ஆதரவாளர்களும், தான் நினைப்பது மட்டுமே சரி எனப் பதாகை தூக்கிப்பிடிக்கும் இணையவாசிகளும் ஒன்றுகூடி நாளொன்றுக்கு ஒரு சாத்தானைத் தேடி அலைகின்றனர்.

செயல்படாத ஜனநாயகம்

இந்தப் போக்கு சமூக நலத்துக்கு அபாயகரமானது. அதைவிடவும் ஜனநாயகத் தூணையே அசைத்துப் பார்க்கிறது. அரசியல் கொள்கைகள் இதுவரை காணாத அளவுக்குத் தூக்கி எறியப்படுகின்றன. அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதுவுமே உண்மை என நம்ப முடியாத இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒருபுறம் முழுமையான ஜனநாயகம் மறுபுறம் ஜனநாயகத்துக்குச் சவால்விடும் சம்பவங்கள். இப்படி இரண்டுக்கும் இடையில் லாவகமாகக் கயிறு மேல் நடப்பதுபோன்ற சாகசத்தைப் பல தசாப்தங்களாக இந்தியா செய்துவந்தது. ஆனால், அந்தக் கயிற்றிலிருந்து இந்தியா இடறி விழுந்துவிடுமோ எனும் அச்சத்தைச் சமீபகாலப் போக்குகள் ஏற்படுத்துகின்றன. ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பார்கள். ஆனால், ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழியே. நம்மில் ஒருவர்தான் நம்மை ஆளுகிறார் என்பதுதானே ஜனநாயகம். ஆனால், இன்றைய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆன்மாவை இழந்துவருகிறது. சரியான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கலந்துரையாடல்களுக்குப் பதிலாகக் களேபரங்கள்தான் அநேகமாக நாடாளுமன்றத்தில் நிகழ்கின்றன.

சமூகவியலாளர் மற்றும் குற்றவியல் ஆய்வாளரான ஸ்டேன்லி கோஹன் 1960-களில் உருவாக்கிய சொல்லாடலான

`தார்மீகப் பதற்றம்’என்பதில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஸ்டேன்லி பார்வையில் இத்தகைய தார்மீகப் பதற்றத்தை ஊடகம்தான் கட்டமைக்கிறது. மக்கள் எதைப் பார்த்து அஞ்ச வேண்டும், எதைக் கண்டிக்க வேண்டும், எதை நிந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. ஊடகங்கள் இல்லையேல் தார்மீகப் பதற்றமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். சில தனிநபர்களையும் அமைப்புகளையும் சமூக விரோதிகள் போல கட்டமைப்பது மோசமான சில ஊடகங்கள்தான் என்கிறார் ஸ்டேன்லி. ஒரு கட்டத்தில் காரணம் தெரியாமலேயே இப்படியாக முன்நிறுத்தப்படும் பிம்பங்களை மக்கள் வெறுக்கிறார்கள், தண்டிக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தார்மீகப் பதற்றம் உருவாகலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவை ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இதன் விளைவாகத்தான், எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பது என்னும் போக்கு உருவெடுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தார்மீகப் பதற்றத்தின் போக்கு மாறியுள்ளதா என்பதை இதுவரை யாரும் கல்வி நிறுவனங்களில் ஆராயவில்லை. அதிலும் மொபைல் போன்களும், இணையதளமும், சமூகத்துக்குள் ஊடுருவிய பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, பொதுவெளிகளில் நடைபெறும் கருத்துரையாடல்களின் தரத்தை டுவிட்டர் தளர்த்திவிட்டது. ஒரு காலத்தில் வலைப்பூ எழுத்துகள் தரத்தை மேம்படுத்த உதவின. ஆனால், தற்போது பொதுப்படையான கண்ணோட்டம் இல்லாமல் தனிப்பட்ட பார்வையிலிருந்து ஒரு செய்தியை விவரிக்கும் முறையான ‘கான்சோ ஊடகவியல்’தான் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு உகந்த உதாரணம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் தகவல்கள். தனிப்பட்ட கருத்துகளை இதன்மூலம் நாம் முன்னோக்கிப் பரப்புகிறோம். இதில் ஆபத்து என்னவென்றால், வெகுஜன ஊடகங்களில் காணும் செய்திகளைவிடவும் இத்தகைய ஃபார்வர்ட் தகவல்கள் உளவியல்ரீதியாக நமது நம்பகத்தன்மையைச் சுலபமாகச் சம்பாதித்துவிடுகின்றன. “தான் நினைப்பதுபோலவே பலரும் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளும் துறுதுறுப்பில் எதை வேண்டுமானாலும் பரப்பும் போக்கு அதிகரித்துவருகிறது. அரசியல் மதிநுட்பமே இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள், ஒரு கட்டத்தில் இயக்கமாகவே உருமாறுகின்றன” என எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சந்தோஷ் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.

இதை எப்படித்தான் எதிர்கொள்வது என்றால், செய்திகளை வாசிக்கும் அனைவரும் தங்களுக்குள் அதை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போலச் சமூக ஆர்வலர்களும், ஊடகமும், பொதுச் சமூக அறிஞர்களும் பரபரப்புக்குப் பின்னால் ஓடாமல் ஒவ்வொரு சம்பவத்தின் மையத்தையும் கேள்விக்குட்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் கருத்தை நான் திணிப்பதாகக்கூட வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், முதல் கட்டமாகத் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பேன். எல்லா சேனல்களையும்தான் சொல்கிறேன்! வாட்ஸ்அப் தகவல்களையும், ஃபார்வர்ட் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம். நெருக்கடியான சூழல்களைத் தவிர மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களைக் கையில் எடுப்பதைத் தவிர்க்கலாம். என்றென்றும் பேட்டரி சார்ஜ் இறங்காத சிறந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் நாளிதழ்களும் பத்திரிகைகளும்தான்! உங்கள் டுவிட்டர் ஆப்ஸும் தொலைக்காட்சியும் தரும் சுடச்சுடச் செய்திகள் ஆற அமர விரிவான செய்தி தரும் அச்சு ஊடகத்துக்கு இணையாகாது.

இத்தனையும் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையை நான் டுவீட் செய்வேன், ஃபேஸ்புக்கில் பகிர்வேன், வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும் ஃபார்வர்ட் செய்வேன். எப்படியும் என்னை எதிர்த்துப் போராட யாரோ, எங்கேயோ தயாராக இருப்பார்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: ம.சுசித்ரா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024