Wednesday, January 20, 2016

வாட்ஸ் அப்’ வாழ்க்கை!


logo

உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது...?

ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்), பேஸ் புக் (முகநூல்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உண்டு.

பண்டிகை காலங்களில் கடைகடையாய் ஏறி இறங்கி வாழ்த்து அட்டைகளை வாங்கி, பிடித்தவர்களுக்கு அனுப்பியதில் கிடைத்த நிறைவு இப்போது இல்லாவிட்டாலும் ‘வாட்ஸ் அப்’ வாழ்த்து புது சுகம் தருகிறது. முந்திக்கொண்டு வாழ்த்து அனுப்பியவர்களுக்குப் பிடித்தமாதிரி ‘நன்றி கார்டு’ அனுப்பியதைவிட முகநூல் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இன்பம் அதிகமிருக்கிறது.

இதெல்லாம் காலத்தின் கொடை. இன்னும் சொல்லப்போனால் கட்டாயம். இவற்றைப் புறக்கணித்துவிட்டு 21–ம் நூற்றாண்டில் நாம் மட்டும் தனி தீவாக வாழ முடியாது.

அண்மையில் சென்னையை தாக்கிய பேய் மழையின் போது சமூக ஊடகங்களின் சக்தியையும் பார்த்தோம். பிரிந்து போன நட்பை மீட்டெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்தல், கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் சென்றடைதல், அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் என நீளும் இவற்றின் அதீத வீச்சு மிரள வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, எளியோரின் சொற்களையும் அம்பலம் ஏற்றி எல்லாரையும் சமமாக்குவதால் இவற்றைக் கொண்டாடவும் செய்யலாம். தப்பில்லை. அதனால் உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மகிழலாம். ‘வாட்ஸ் அப்’ பயன்பாடும் அப்படியே. எவ்வளவு வசதி. என்னே வேகம். இன்றைய அவரச யுகத்திற்கு நிச்சயமாக இது தவமின்றி கிடைத்த வரம். பெரும் மகிழ்வு.

மகிழ்ச்சி எல்லாம் எதுவரையில்..? வரமாக இருக்கும் வரைதான். அதுவே சாபமாகி விட்டால் என்னாகும் என்கிற கவலை இப்போது எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. புகழ், பணம், வாழ்க்கை இப்படி எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. எதற்காவது அடிமையாகிவிட்டால் தொலைந்தோம். எல்லாவற்றிலுமே ஒரு போதை இருக்கிறது. அது இருமல் மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போல மிதமாக இருந்தால் ரொம்பது நல்லது.

குடிகாரர்களில் இரண்டு வகை உண்டு. எப்போதாவது, விரும்பிய போது அல்லது கொண்டாட்டங்களின் போது குடிப்பவர்கள் முதல் ரகம். இவர்களால் பெரிய வம்பில்லை. இரண்டாவது ரகம் குடி நோயாளிகள். இப்படிப்பட்டவர்கள் முழுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்கள். குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும். பேச்சே வராது. மூளை சொல்படி கேட்காது. முக்காலமும் மதுவையே நினைத்துக் கொண்டிருக்கும். கிட்டதட்ட மதுவைப் போலவே இன்றைக்குப் பலரையும் மயக்கி வைத்திருக்கின்றன சமூக வலைதளங்கள். என்ன, குடித்துவிட்டு தெருவில் கிடப்பவனைப் பளிச்சென தெரிகிறது. இதில் நடக்கும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் நஞ்சாக சத்தமின்றி தனி மனித சக்தியை, குடும்பங்களை உறிஞ்சி குடித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இரண்டிலும் கதியாக கிடப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு எகிறிக் கொண்டே போகிறது.

சாதாரணமாக நம்முடைய வீடுகளிலேயே கவனியுங்களேன். ஆளாளுக்கு கையில் ஒரு செல்பேசி. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். இதில் வயது, பாலின வித்தியாசமெல்லாம் கிடையாது. குழம்பு தாளிக்கும் நேரத்தில் கூட ‘வாட்ஸ் அப்’ பையும், ‘பேஸ் புக்’கையும் விட்டுப் பிரிய முடியாத குடும்பத்தலைவிகள் அதிகரித்துவிட்டார்கள். குடும்பத்தலைவனைப் பற்றி கேட்கவா வேண்டும்? இரண்டும் பேரும் இப்படி என்றால் குழந்தைகளையும் மற்றவர்களையும் இவர்களால் எப்படி கேட்க முடியும்?

இரவு நெடு நேரம் சமூகத்தளங்களில் தேவையோ, நோக்கமோ இன்றி மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் கைகள் பர, பரவென்று ஆகின்றன. காலைக்கடன்களைக் கழிக்கிறார்களோ இல்லையோ, செல்பேசி முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் பட,படத்துப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலருக்கோ நாட்கணக்கெல்லாம் இல்லை. சில மணி நேரம் கூட பொறுக்க முடியாது. செல்பேசியோ, சமூக வலைத்தளங்களோ இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு கண் வைத்திருந்தால்தான் எந்த வேலையையும் செய்யமுடியும். சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலும் சரி; துக்கம் விசாரிக்க மரண வீட்டுக்குப் போனாலும் சரி; என்ன பதிவு வந்திருக்குமோ என குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இஷ்டம் போல எல்லாவற்றையும் பதிவேற்றுவது கொடுமையிலும் கொடுமை. துக்க வீட்டில் போய் செல்ஃபி (கைப்படம்) எடுத்து, பதிவேற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமான வேலை இருந்தாலும், ‘வேண்டாம்’ என்று மனசு நினைத்தாலும் கைகள் தானாகவே ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ போன்வற்றுக்குப் போனால் ‘முற்றி’ போய்விட்டது என்று அர்த்தம். என்னவொன்று அடிமையாகிவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இப்படியானவர்கள் முன்பு நாம் பார்த்த குடிநோயாளிகளைப் போன்றவர்கள். உடனடியாக மனநல மருத்துவர்களைப் பார்க்க வேண்டியவர்கள்.

குடியைப் போலவே ‘சமூக வலைத்தள போதை’யில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களும் ஏராளம். இவர்கள், எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் யாரோடும் மனம்விட்டுப் பேசாமல் எப்போதும் அதிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளிடையே இடைவெளி விழுகிறது. அதிலும் குடும்ப வாழ்க்கைக்கு ‘வாட்ஸ் அப்’ பெரும் வில்லனாக உருவெடுத்திருப்பதைச் சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் காண முடிகிறது. மண வாழ்க்கை முறிவுக்கு மட்டுமல்ல; உளவியல் நோய், குழந்தைப் பேறின்மை போன்றவை அதிகரிப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருகிறது.

இதற்காக அஞ்சி, நடுங்கி இவற்றை ஒரேயடியாக தவிர்க்கவும் முடியாது. இவற்றினால் கிடைக்கும் நன்மையைப் பெறாமல் போனால் அறிவலித்தனமாகிவிடும். அப்படியென்றால் என்ன வழி? நம்முடைய கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்க வேண்டும். ‘ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தில் செலவிடுவேன்; அதுவும் எனக்குத் தேவையற்ற குப்பைகளைப் பார்க்க மாட்டேன்’ என்பதில் உறுதியாக இருக்கலாம். நிறைய நேரமிருப்பவர்கள் இதனை ஒரு மணி நேரமாக்கலாம். இந்த நேரத்தை வசதிப்படி பிரித்துக்கொள்ளலாம். ஆனால் அதைத் தாண்டி போகக்கூடாது; போகவே கூடாது. நம்முடைய நேரத்தைக் கொல்வதற்கு இடம் கொடுத்தோமானால், நாளை அது நம்மைக் கொல்வதற்கும் முயலும் என்பதை மறந்திடக் கூடாது.

குழந்தைகளோடு கொஞ்சுவதற்கு, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு, வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் அத்தனை வசதிகளையும் தேடுகிறோம். வசதியில் இவற்றைத் தொலைத்து விட்டு என்ன செய்யப்போகிறோம்? உலக நியதிப்படி எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். வசதிகள், வரமாவதும் சாபமாவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு அதி அற்புதமான அமிர்தமானாலும் அளவைத்தாண்டிவிட்டால் நஞ்சு தானே!

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...