By மதுரா
First Published : 04 January 2016 03:41 AM IST
இறைவன் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்பவர் ஒரு சிலர். இறைவனுக்கு உருவம் இல்லை, அவர் ஜோதி வடிவானவர் என்று கூறுவோர் ஒரு பக்கம். இவர் ஒருவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம். இறைவனை பல உருவங்களில் வடித்து இவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம்.
இறைவன் பெயரில் மதங்களை வளர்த்து போற்றும் அனைத்து மதவாதிகளுக்கும் சில கேள்விகள்:
இறைவனை மதம் என்ற ஒன்றில் அடக்கலாமா? இறைவனை ஒரே ஒரு நாமத்தில் (பெயரில்) அடக்கிவிடமுடியுமா? இறைவனை வேதம் அறிந்தவர்கள் தான் அறிய முடியுமா? வாய் பேசமுடியாத உயிரினங்கள் இறைவனை வணங்க முடியாதா? இறைவன் பெயரில் உருவான மதங்கள் சொல்வது என்ன?
இறைவனை தீபமாக பார்ப்பதும், சிலையாய் பார்ப்பதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது இல்லையா? எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை எப்படி உணர்ந்தால் என்ன? என்னை வழிபடுபவரைத்தான் நான் காப்பாற்றுவேன் என்று இறைவன் கூறியதுண்டா?
இயற்கையை நாம் வணங்கினால் இறைவன் கோபித்துக் கொள்வாரா? அப்படி அவர் நினைத்தால் இறைவனின் மனநிலை சராசரி மனிதர்களின் மன நிலை தானா? இறைவனை நேசித்து ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் இறைவனை பகடையாக வைத்து சண்டையிடுவது சரியா?
எங்கள் இறைவன் தான் சிறந்தவர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொள்வது சரியா?
ஆதி மனிதன் முதலில் நெருப்பை கண்டுபிடித்து, பின் அந்த நெருப்பால் உணவுகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு, வேளாண்மை செய்து வாழத் தொடங்கிய மனிதன் சூரியனையும், இயற்கையையும் தன்னை வாழ வைக்கும் கடவுளாக வணங்கியிருப்பான்..
மனிதர்கள் பெருக பெருக, கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். கூட்டங்களாக வாழ்ந்த மனிதன், அந்தந்த மண் சார்ந்த உணவு முறைகளை பயிரிடத் தொடங்கி அவனுக்கென்று உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என்று வளரத்தொடங்கினான்.
வெளிநாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தாற் போல் அந்நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. அவர்களின் பழக்கங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் இறைவழிபாடும் உள்ளது.
அதேபோல், இந்திய நாட்டில் வாழும் மக்களுக்கு பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் என்று உள்ளன. இந்தியா இயற்கை வளங்கள் கொண்ட நாடு. இங்கு விளையும் பொருள்களை, நன்றி சொல்லும் வகையில் முதலில் இறைவனுக்கு செலுத்தும் வகையில் இறைவனை வணங்கிவிட்டு பிறகு தான் அதை நாம் பயன்படுத்துவோம். இது இந்திய கலாசாரம்.
மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு தகுந்த முறையில் அவர்களின் இறை வழிபாடு உள்ளது. அவரவர் மொழிக்குத் தகுந்த முறையில் இறைவனுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
ஆனால், அவரவரும் தாங்கள் அழைக்கும் நாமம் தான் இறைவன் என்று சண்டை போட்டுக் கொள்கிறோம். அதர்மங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் எல்லாம் இறைவன் அவதரித்து தர்மத்தை போதித்துள்ளான்.
இறைவன் பல ரூபத்தில் அவதரித்தாலும் "அன்பாய் இரு, பிறரை துன்புறுத்தாதே, இல்லாதவர்க்கு உதவி செய்' என்றுதான் போதித்துள்ளான். ஆனால், மனிதன் அந்த போதனைகளைக் கைவிட்டு தன் சமுதாய கலாசாரத்தை பெரிதுபடுத்தவே போராடுகிறான்.
ஆதி மனிதன், தினம் விடியலை தந்த சூரியனையும் இரவில் வரும் நிலவையும், அவன் பசிக்கு உணவு தரும் மரம் செடிகளை தான் கடவுளாக வணங்கியிருப்பான். நமக்கு உதவி செய்பவர்களை மதிப்பதும் நன்றி செலுத்துவதும் மனிதனின் நற்பண்பு அல்லவா? இதை இந்திய கலாசாரம் செய்கிறது.
நம் இந்திய கலாசாரம் ஓர் உன்னதமான கலாசாரம். நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்து வைத்தான் தமிழன். ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும், செய்யும் தொழிலும் வேறுபடுகின்றன.
அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால், இதற்கு மனிதன் மதச்சாயம், சாதிச்சாயம் பூசி என் மதம் தான் சிறந்தது, என் சாதிதான் சிறந்தது என்று சண்டையிடத் தொடங்கினான்.
காலப்போக்கில் இறைவன் பெயரில் மனிதநேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக மதத்தையும், சாதியையும் வளர்க்கிறான். மனிதன் ஒன்று கூடி இறைவனை வணங்கவேண்டும் என்றுதான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டப்பட்டன. இதுவும் அந்தந்த நாட்டின் கட்டட கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
கட்டடக் கலையில், இந்தியக் கட்டடக் கலை மனிதனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால்தான்,கோயில்களில் மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் சிற்பங்களை வடித்தார்கள்.
இறைவனை மதங்களில் தேடாதீர்கள்.. மனங்களில் தேடுங்கள். இறைவனை கோயிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் காணலாம். எங்கும் இறைவனைக் காணும் மனநிலை தான் பண்பட்ட மனம் ஆகும்.
No comments:
Post a Comment