Thursday, January 14, 2016

கரும்பு இவர்களுக்கு இனிக்குமா?

 logo
 
நாளை தைத்திருநாள் பிறக்கிறது. உள்ளங்களிலும், இல்லங்களிலும் உவகை பெருக்கெடுத்தோடும் இந்த நாளில், தித்திப்பான பொங்கல் போல இனிக்கும் கரும்பும் முக்கியபங்கு வகிக்கும். ஆனால், எல்லோருக்கும் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கும் இனிக்கிறதா? என்பதுதான் இப்போது கேட்கவேண்டிய கேள்வியாகப்போய்விட்டது. தமிழ்நாட்டில் கரும்பு பணப்பயிராக கருதப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வில் இப்போது பணப்பயிராக இல்லை. காரணம் உற்பத்தி செலவுக்குக்கூட அவர்கள் விளைவிக்கும் கரும்புக்கு விலை கிடைக்கவில்லை. வழக்கமாக தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28 லட்சம் டன் கரும்பு உற்பத்தி அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவின் 10 சதவீத கரும்பு உற்பத்தி தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்ற நிலைமாறி, இந்த ஆண்டு 18 லட்சம் டன் கரும்பு உற்பத்தியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,850 என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த விலை போதாது என்கிறார்கள், கரும்பு விவசாயிகள். தமிழ்நாட்டில் 24 தனியார் சர்க்கரை ஆலைகளும், 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் இருக்கின்றன. இந்த ஆலைகளெல்லாம் அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையைக் கொடுத்து, விவசாயிகளிடம் இருந்து கரும்பு வாங்கினால்தான் விவசாயிகளுக்கு இந்த விலை கிடைக்கும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே அரசு பரிந்துரை செய்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் மட்டும் கொடுத்தார்கள், தனியார் ஆலைகள் கொடுக்கவில்லை என்பது விவசாயிகளின் மனக்குமுறலாகும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அதைக்கொடுக்கும் அளவுக்கு சர்க்கரைக்கும் விலை இல்லை. தற்போதைய நிலையில் ஒருகிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.41–க்கு மேல் ஆகிறது. ஆனால், சர்க்கரை விற்பனை விலை ஏறத்தாழ 30 ரூபாய்தான் என்கிறார்கள், ஆலை அதிபர்கள். உற்பத்தி செலவோடு அரசு தமிழ்நாட்டில் விதிக்கும் வரிகள் மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமாக இருப்பதால், அவர்களோடு போட்டியிட்டு சர்க்கரையை விற்பனை செய்யமுடியாமல், அனைத்து ஆலைகளிலும் சர்க்கரை தேங்கிக்கிடக்கிறது என்பது ஆலை அதிபர்களின் ஆதங்கம்.

ஒரு டன் கரும்பில் இருந்து 90 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சர்க்கரைக்கு இருந்த கொள்முதல் வரியை எடுத்துவிட்டு, 5 சதவீதம் மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுகிறது. இதனால் மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.1.50 விலை அதிகமாகிறது. மேலும் ஒரு டன் கரும்பில் இருந்து 30 லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்யமுடியும். இதற்கு தமிழ்நாட்டில் 14.5 சதவீதம் வரி. ஆனால் கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் 2.5 சதவீதம்தான் வரி. இதனால் தமிழ்நாட்டு எரிசாராயத்தின் விலை அதிகமாக இருப்பதால் மற்ற மாநிலத்தோடு போட்டிபோட்டு விற்கமுடியாததால், எரிசாராயம் அளவுக்கு அதிகமாக ஆலைகளில் தேங்கிக்கிடக்கிறது. இதோடு கரும்பு சக்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்சார வாரியம் தகுந்த விலை கொடுத்து வாங்கவில்லை என்பதும் அவர்களின் குறையாக இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விற்கமுடியாமல், ஈரோட்டில் வந்து குவியும் கர்நாடக சர்க்கரை விலை குறைவு என்ற காரணத்தால் அதையே வியாபாரிகளும், மக்களும் வாங்குகிறார்கள். ஆக, விவசாயிக்கும் உரிய விலை இல்லை. ஆலை அதிபர்களுக்கும் வருமானம் இல்லை. இந்த பெரிய நெருக்கடியைப் போக்க, உடனடியாக விவசாயிகள், ஆலை அதிபர்களை அழைத்து, அரசாங்கம் முத்தரப்பு கூட்டத்தைக்கூட்டி, இருதரப்புக்கும் கட்டுபடியாகும் நிலையை உருவாக்கவேண்டும். விலை நிர்ணயத்தை மத்திய–மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, தேவை–சப்ளை அடிப்படையில் விவசாயிகள்–ஆலை அதிபர்களே நிர்ணயித்துக்கொள்ளலாமா? என்பதையும் பரிசீலிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024