Saturday, January 9, 2016

தாவரத்தைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகள்


Dinamani

By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 09 January 2016 03:38 AM IST


பூச்சிகளில் அதென்ன சைவம்? அசைவம்? உயிரியல் விஞ்ஞானம், உயிரினங்களை மாமிச பட்சிணிகள் என்றும் சாகபட்சிணிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதைத்தான் நாம் சைவம், அசைவம் என்று தமிழில் வகைப்படுத்தியுள்ளோம். விவசாயம் செழிக்க அசைவப் பூச்சிகளின் ஆற்றலை அறிவதே நம் நோக்கம். சைவப் பூச்சிகள் பசுமைகளின் எதிரிகள். அசைவப் பூச்சிகளே விவசாயிகளுக்கு நண்பர்கள்.
பூச்சிகளில் எவை சைவம், எவை அசைவம் என்று கண்டறிந்து அசைவத்தை வளர்த்துப் பசுமையைக் காப்பாற்றுவதே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம். இது சரியாக நிகழ்ந்தால் விஷமான பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லை. பூச்சி மருந்துகளைக் கையாளாமல் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிய பெருமையைப் பெறும் ஒரு இளவயது மங்கை மனீஷாவை, வட இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் ஜிண்ட் மாவட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பருத்தி விளைச்சலை உயர்த்தும் "ஜிண்ட் பாக்கேஜ் திட்டம்' பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி விட்டதால் பூச்சி மருந்து முதலாளிகள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கண்கலங்கி நிற்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் வேளாண் விஞ்ஞானி சுரீந்தர் தலாலின் விடாமுயற்சியால் இந்த வெற்றி என்பது மிகையல்ல.
மங்கை மனீஷா குருவை மிஞ்சிய சிஷ்யையாக உருவாகிவிட்டதால் மனீஷா "கீட் மாஸ்டராணி' (பூச்சி மாஸ்டர்) என்று செல்லமாக உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறார். பருத்தி விவசாயத்தை நாசம் செய்வது வெள்ளை ஈக்கள். இந்த வெள்ளை ஈக்களின் பரம எதிரி சிரை சோபா (Chry Sofa) எனப்படும் ஒரு செம்பொறி வண்டு. ஒரு செம்பொறி வண்டு நாளொன்றுக்கு 150 வெள்ளை ஈக்களை உண்கின்றனவாம்.
தீதார் போரா என்ற பூச்சி பச்சை இலைப் பூச்சியின் முட்டைகளை உண்ணுமாம். எந்தப் பூச்சிக்கு எந்தப் பூச்சி எதிரி என்று கண்டுபிடித்து, எதிரிப் பூச்சிகளின் ஒட்டுண்ணியை விடுவதில் மனீஷா வல்லவராம். எனினும், பூச்சிகளை வளர்க்கப் பசுமை வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பசுமையிலிருந்துதானே தொடங்க வேண்டும்!
பஞ்சபூத சக்திகளில் நீருக்கு நிகரான சக்தி சூரிய சக்தி. உலகுக்கே ஒளிவழங்கும் சூரிய பகவான் இல்லாவிட்டால் உலகே இருண்டுவிடும். மனிதர்கள், விலங்குகள், பட்சிகள், பூச்சிகள் அவை மாமிச பட்சிணியானாலும் சாக பட்சிணியானாலும் - தசைகளை இயக்க இயந்திர சக்தி, நரம்புகளை இயக்க மின்சக்தி, உடலை வளர்க்க ரசாயன சக்தி, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வெப்ப சக்தி என்று சகல ஜீவராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா சக்திகளுக்கும் சூரிய சக்தியே மூலாதாரம்.
இனி வருங்காலத்தில் மரபுசாரா எரிசக்தியை நாம் சூரிய பகவானிடமிருந்துதானே பெற்றாக வேண்டும். எனினும், சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்றுப் பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.
புவியின் பசுமைப் போர்வையையும், உணவுகளையும் தாவரங்கள் சூரியசக்தியை உள்வாங்கி ஒளிச்சேர்க்கை செய்வதால்தான் உலகமே இயங்குகிறது.
இவ்வாறு உலகம் இயங்க மூலகாரணம் சூரியன் என்பதால்,
"பரிதியே, பொருள் யாவர்க்கும்
முழு முதலே
பொன் செய் பேரொளித்திரளே,
அனைத்து ஜீவர்க்கும் பிரம்ம ஒளியே
ஒளிக்கு ஒளியே, ஒலி நுழையும்
விண்ணில்
ஒளியாய் நிற்பவனே, வாழியவே...'
என்பது வேத வாக்கியம். வேளாண்மையில் சூரியன் அருளால் நிகழும் ஒளிச்சேர்க்கையினால் பசுமையைக் காப்பாற்றுவது அசைவப் பூச்சிகளே. சைவத்தை வாழ வைப்பது அசைவம் என்கிறது விருட்சாயுர் வேதம். குணபத்தை (Dead Bodies) ரசமாக்கி, நுண்ணுயிரிகளாக்கி வேரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் காய்ப்பதாகவும், தாவரங்கள் தானியங்களை வழங்குவதாகவும் விருட்சாயுர் வேதம் குறிப்பிட்டுள்ளது.
தாவரங்களில் பசுமை ஏற்படும்போது அப்பசுமையை உண்ண வரும் சைவப் பூச்சிகளை உண்டு தாவரங்களைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகளைப் பற்றி அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. ஒவ்வொரு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் பூச்சியியல் துறை உண்டு. இத்துறையை ENTOMOLOGY என்பர்.
ஆனால், இத்துறை நிபுணர்கள் இயற்கையை மதிப்பதில்லை. பூச்சிமருந்து நிறுவனம் வழங்கும் உயிர்க்கொல்லிகள் பற்றியே மாணவர்களுக்குப் போதிப்பார்கள். பூச்சிமருந்துக் கம்பெனி வழங்கும் கமிஷன் பெறுவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்.
ஒரு பயிருக்குப் பூச்சிமருந்து அடிப்பதால் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளுடன் நன்மை செய்யும் அசைவப் பூச்சிகளும் இறந்து விடும். எவ்வளவுதான் மருந்து அடித்தாலும் இலைகளின் பின்புறத்தில் உள்ள முட்டைகள் அழிவதில்லை. அவை பூச்சியாகி மீண்டும் தாக்கும்போது அசைவப் பூச்சிகள் இல்லாததால் பசுமை இழந்து விளைச்சல் குறைகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் தப்பிப் பிறந்த பூச்சியியல் நிபுணர் சுரீந்தர் தலால் இயற்கையோடு இணைந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பருத்தி விவசாயிகளிடம் கற்பித்து பஞ்சாப் - ஹரியாணா, ராஜஸ்தான் பருத்தி விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2013-இல் அவர் இறக்கும் வரை பஞ்சாப் - ஹரியாணா - ராஜஸ்தான் மாநில எல்லைகளை ஒட்டிய பருத்தி மாவட்டங்களில் உள்ள 18 கிராமங்களில், சுமார் 200 பருத்தி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக அடிப்படையில் அசைவப் பூச்சிகளை அடையாளப்படுத்தும் பயிற்சியை வழங்கியுள்ளார். இவர் வழங்கிய பயிற்சியில் 50 பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கீட்மாஸ்டராணி மனீஷா.
ஒளிச்சேர்க்கை மூலம் தாவரம் சமைக்கும் உணவைப் பற்றி சுரீந்தர் தலால் செய்துள்ள நுட்பமான ஆய்வு வியப்புக்குரியது. "ஒரு தாவரம் நாளொன்றுக்கு 4.5 கிராம் உணவு சமைக்கிறது. இதில் அதன் பங்கு 3 கிராம். சுமார் 1.5 கிராம் பூச்சிகளுக்கு ஒதுக்குகிறதாம். பூச்சிகளுக்கு உணவு வழங்கும் கடமை பருத்திச் செடிக்கும் உண்டு.
இந்த உணவு வேர், தண்டு, இலைப் பகுதிகளில் உள்ளன. இந்த உணவில் பூச்சிக்கு கால் பங்கு உண்டு. கால் பங்கு உணவை சைவப் பூச்சிகள் தின்பதால் பயிருக்கு நஷ்டம் இல்லை. ஆனால், கால் பங்குக்கு மேல் சைவப் பூச்சிகள் தாவரங்களை உண்டால் தாவரம் பலம் குன்றும்.
ஆகவே சைவப் பூச்சிகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அசைவப் பூச்சிகளின் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவது அவசியம். அதேசமயம், வயல்வெளிப் பயிற்சியில் கணிசமான அளவில் அசைவப் பூச்சிகளை அடையாளம் செய்துவிட்டால் ஒட்டுண்ணி அட்டையும் வேண்டாம். பூச்சிமருந்தும் வேண்டாம்.'
இவ்வாறே பயிர்களை அழிக்கும் சைவப் பூச்சிகளின் எண்ணிக்கை ரசாயன உரப் பயன்பாடு கூடும்போது அவையும் கூடுகின்றன என்று கூறிய தலால், ஒரு புதிய பருத்தி பாக்கேஜ் திட்டத்தை ஹரியாணாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தில் நிடானா என்ற கிராமத்தில் அறிமுகம் செய்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து அது "ஜிண்ட் பாக்கேஜ்' என்று பிரபலமாகிவிட்டது.
வேளாண்மைத் துறை சிபாரிசு செய்யும் பேக்கேஜ் திட்டத்தின்படி ஒரு ஏக்கர் பருத்திக்கு 2 மூட்டை (100 கிலோ) டி.ஏ.பி., 4 மூட்டை (200 கிலோ) யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் (40 கிலோ), 10 கிலோ துத்தநாகம் (ஜிங்க்) என்பது கணக்கு. ஆனால், தலால் வகுத்துள்ள கணக்கில் ஏக்கருக்கு 15 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ், 3 கிலோ துத்தநாகம் போதுமானது.
அடி உரமாக இயற்கை இடுபொருள்களை வழங்கிய பின்னர் ரசாயன உரத்தை கீழ்க்கண்ட அளவில் -- 2.5 கிலோ டி.ஏ.பி., 2.5 கிலோ யூரியா, 100 கிராம் பொட்டாஷ் 500 கிராம் பொட்டாஷ் சேர்ந்த 5.6 கிலோ கலப்பு உரங்களை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 டேங்க் ஸ்ப்ரே செய்யுமாறு கூறுகிறார். இவ்வாறு பருத்தி பயிரிட்டுக் காய்க்கும் வரை 6 முறை ஸ்ப்ரே செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்துடன் மிகக் குறைந்த அளவு ரசாயனப் பயன்பாடும் இணைந்து பருத்தியின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளதும் புலனாயிற்று. அதே அளவு ரசாயன உரங்களை வலியுறுத்திய துறை சார்ந்த வயலில் ஒரு காயில் 3.5 கிராம் பஞ்சுதான் கிடைத்தது. அதேசமயம், தலால் சிபாரிசு செய்த குறைந்த அளவு ரசாயன உரப் பயன்பாட்டில் ஒரு காய்க்கு 5 கிராம் பஞ்சு கிடைக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தலால் மறைவுக்குப் பின் அவரது பாக்கேஜ் திட்டத்தையும், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி, அவர் நினைவாக "சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன்' என்ற பெயரில் ஏராளமான கிளைகளுடன் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைப்புற பருத்தி மாவட்டங்களில் பருத்தி உற்பத்தியாளர் விவசாய சங்கம் அகாவத்தின் தலைமையில் செயலாற்றி வருகிறது (கீட் என்றால் பூச்சி என்று பொருள்).
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில எல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பருத்தி விளைகிறது. இதுநாள் வரையில் அம்மாவட்டங்களில் உள்ள பருத்தி விளையும் கிராமங்களில் "வெள்ளை ஈ' தாக்குதலால் 75 சதவீதம் விளைச்சல் பாதிப்புற்றதால் அதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பூச்சி மருந்தையும், ரசாயன உரப் பயன்பாட்டையும் அரசின் வேளாண்மைத் துறை சிபாரிசு செய்து வருகிறது. அரசின் சிபாரிசுகளை ஏற்று அவ்வாறு செய்தும்கூட "வெள்ளை ஈ' கட்டுப்படுவதாயில்லை.
இம் மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.4,500 கோடி மதிப்புள்ள பருத்தி. பி.ட்டி பருத்தி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் தாங்க முடியாத உரம் - பூச்சிமருந்துச் செலவினால் கடனாளியாயினர். சுமார் 20 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கெல்லாம் தக்க தீர்வை சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன் வழங்கி வருகிறது.
பருத்தி விவசாயிகளின் துயர் நீங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இளவயது மங்கை மனீஷா போல் ஆயிரக்கணக்கில் மனீஷாக்கள் தோன்றிவிட்டால் இந்தியா பருத்தி உற்பத்தியில் புதிய எல்லையைத் தொட்டு விடும்.

சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்று பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...