Saturday, January 2, 2016

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்

logo

இந்தியா பண்டைய காலத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு, வடக்கே நாளந்தா பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் காஞ்சி பல்கலைக்கழகமும்தான். கி.பி. 5–ம் நூற்றாண்டில் இருந்து 12–13–ம் நூற்றாண்டுவரை நாளந்தா பல்கலைக்கழகம் பிரமாண்டமாக இயங்கியதற்கு சரித்திரச்சான்றுகள் இருக்கின்றன. இங்கு வெளிநாடுகளில் இருந்து எண்ணற்றோர் படிக்க வந்திருக்கிறார்கள். இதுபோல, காஞ்சீபுரத்தில் அதே காலகட்டங்களில் பல்கலைக்கழகம் இயங்கியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் படையெடுத்து வந்த காலம் போய், இப்போது நிறைய மாணவர்கள் சிறந்த கல்வியை நாடி வெளிநாடுகளுக்கு அலை, அலையாய் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற தகவல், மத்திய–மாநில அரசுகளைத் தட்டியெழுப்பும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச கல்வி நிறுவனம், சர்வதேச கல்வி பரிமாற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2014–15–ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் கூடுதலாக வந்த சதவீதம்தான் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கவந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, 29.4 சதவீதம் அதிகமாக வந்திருக்கிறார்கள்.

இந்த கணக்குப்படி, இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 888 மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில், 80 சதவீத மாணவர்கள் என்ஜினீயரிங், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியல், வர்த்தக படிப்புகளைப் படிக்கவே சென்று இருக்கிறார்கள். அங்கு மட்டுமல்ல, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேப்போகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக அண்டை நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம், கல்வித்தரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்ற எண்ணம் வளர்வதாகும். வசதி படைத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்லாமல், வசதி இல்லாதவர்கள்கூட வங்கிக்கடனை பெற்று வெளிநாடுகளுக்கு படிக்கச்சென்றுவிடுகிறார்கள். சிறந்த கல்விக்கும், நல்ல வேலைவாய்ப்பு தரும் செயல்முறை பயிற்சிக்கும் வெளிநாடுகளில் சீரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், உடனடியாக உயர்கல்வியில் மேலான மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் இன்னும் தீவிரமாக மத்திய–மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இந்தியாவில் 1992–ல்தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போதுதான் புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. உலகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டாலும், நமது கல்விக்கொள்கை மட்டும் மாற்றம் காணாமல் இருப்பது சரியல்ல. சர்வதேசதரத்துக்கு இணையான பாடத்திட்டங்களை இணைக்கும் வகையில், கல்லூரிப்படிப்பு இருக்கவேண்டும்.

ஒருகாலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நான் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவன் என்று சொன்னால் தனி மதிப்பு இருக்கும் என்பார்கள். அத்தகைய நிலை மீண்டும் தோன்றவேண்டும். சர்வதேச அளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லை என்பது வெட்கித்தலைகுனிய வைக்கிறது. அதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் கல்லூரிகளில் உள்ள சோதனைக்கூட அட்டெண்டர்கள் நியமனம்வரை லஞ்சம் இல்லாத நியமனங்களாக, தகுதிபடைத்தவர்களாக நியமிக்கப்பட்டால், கல்வி நிச்சயமாக வளரும்.

தகுதிபடைத்த ஆசிரியர்கள், தரமான கல்வி என்றால் போதும், வெளிநாட்டுக் கல்வி இங்கேயே கிடைத்துவிடும். உயர்கல்விகளில் சிறந்த கல்வியாளர்கள் வேண்டும். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கொண்டதாக இருந்தால் நல்லது. புதிய கல்விக்கொள்கை இதையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024