மழை வெள்ள மீட்பு பணிக்கான சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ்: நமது உடலில் உள்ள நீர் மற்றும் மலம் எங்கும் ஒன்றாக சேராது. இரண்டும் தனித்தனியாகத் தான் உடலில் இருந்து வெளியேறும். இயற்கை அப்படித்தான் நம்மை படைத்துள்ளது. வெளியே வந்ததும் நாம் ஒன்றாக சேர்த்துவிடுகிறோம். அதன்பின் அதனை பிரிக்க செலவு செய் கிறோம். இயற்கை செய்தது போலவே நாமும் செய்தால் கோடிக் கணக்கான பணம் மிச்சம் ஆகும்.
மாற்றம் மனதளவில் நம்மிடையே வரவேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்து வரவில்லை என்றால், இதுபோன்ற பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கும். நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் எங்கு தேங்குமோ அங்குதான் தேங்கும். நாம் அங்கு சென்று வீடுகளை கட்டிவிட்டு தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அது நம்முடைய குற்றம். தண்ணீரோட குற்றம் இல்லை. நீர் மேலாண்மையில் நம்முடைய முன்னோர்கள்தான் உலகத்துக்கே முன்னோடி.
ஆறு, ஏரி, கலங்கல், மதகு, குட்டை, தாங்கல் என்று அந்த காலத்தில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200-க்கும் மேல் ஏரிகள் இருந்துள்ளன. எப்படி திட்டமிடப்பட்டதோ அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்கிறார்கள். நம்முடை யது ஜனநாயக நாடு. நாம்தான் அரசு. நாம் எல்லாவற்றையும் விட்டு விலகியிருக்கிறோம்.
சிலர் தவறு செய்யும் போது, அதனை தட்டிக்கேட்டு நிறுத்தாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும் போதோ தட்டிக்கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி, வாய்க்கால், நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் ஒன்றுமில்லை.
முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாறை 30 மீட்டரில் இருந்து 60 மீட்டருக்கு ஆழப்படுத்தினோம். முன்னதாக அங்கிருந்த 127 குடும்பங்களை உடனடியாக அரசுசின் உத்தரவு வாங்கி பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றினோம். அந்த குடும்பங்களுக்கு வீடு கிடைத்ததால் சந்தோஷமாக இருக் கிறார்கள். அடையாறை ஆழப் படுத்தியதால் 5 ஆயிரம் குடும்பங் கள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
மக்கள் நியாயமான எந்த செயலாக இருந்தாலும் ஆதரவு தருவார்கள். மக்கள் நல்லவர்கள். சுனாமி, தானே, வெள்ளம் வரும்போது மட்டும் மனிதாபிமானத்தை காட்டக் கூடாது. அது எப்பவும் இருக்க வேண்டும். அரசு நல்ல படியாக செயல்பட வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். இந்த மழை வெள்ளம் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.
அரசு சொத்து எல்லாம் என்னுடைய சொத்து. பள்ளி, மருத்துவமனை, சாலை, தெரு விளக்கு என அனைத்தையும் நான் பாதுகாப்பேன். யாராவது சேதப்படுத்தினால் நான் தட்டிக்கேட்பேன் என்று இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment