நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. கடந்த 2008-ல் தீபாவளிக்கு மூன்று வாரங்களே இருந்த அக்டோபர் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை அது. சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் திரையரங்கம் அமைந்திருக்கும் மில்லர்ஸ் சாலையைக் கடந்து வில்லிவாக்கம் செல்வதற்காக பைக்கில் விரைந்துகொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு அந்தத் திரையரங்கை நெருங்கியபோது போக்குவரத்து நெருக்கடி. பேண்ட் வாத்தியம் முழங்க “புரட்சித் தலைவர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தர்மத்தின் தலைவன் வாழ்க! எங்கள் தங்கம் வாழ்க! எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க” என்ற கோஷங்கள் காற்றைக் கிழித்தன.
வெள்ளை பேண்டும் மஞ்சள் கட்டம்போட்ட சட்டையும் தலையில் ஆரஞ்சு நிற சன் ஷேட் தொப்பியும் அணிந்து நடுவில் நின்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரது வலப்புறம் நடிகை லதாவும் இடப்புறம் அந்தத் தாய்லாந்து நடிகையும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனரில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த பேனருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எப்படித் தங்களுக்குள் பதிந்திருக்கிறாரோ அதே வரிசையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் சரிபாதிக்கும் மேலாக இருந்தார்கள்.
100க்கும் அதிகமான பெண்களையும் பார்க்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தயாரித்த அந்தப் படம் 35 ஆண்டுகளுக்குப் பின் வெளியானபோது அங்கே திரண்டு நின்ற அவரது ரசிகர்கள் ஒரு புதுப்பட வெளியீட்டைப்போல் கொண்டாடியது ஆச்சரியத்தை அளித்தது. தீபாவளிக்குப் புதுப்படம் வெளியாகும்வரை அந்தத் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிப’னுக்குக் கூட்டம் குறையவில்லை. தினசரி அந்தப் பாதையில் பயணித்து வந்த நானே இதற்குச் சாட்சி.
இன்று மோட்சம் திரையரங்கம் தன் சேவையை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீள்பதிவு செய்யப்பட்டு வேறொரு மால் திரையரங்கில் வெளியாகலாம். அப்போதும் இந்த ரசிகர் கூட்டத்தை அதே உற்சாகத்தோடு அங்கே காண முடியும். அதுதான் எம்.ஜி.ஆர். எனும் ஒப்பிடமுடியாத நட்சத்திரம் ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம்.
திராவிட இயக்கத்தின் அறுவடை
அவதார புருஷர்களைப் பற்றி புராணக் கதைகள் வழியாக அறிந்திருந்த தமிழர்களுக்கு, தர்மத்தின் காவலனாக எம்.ஜி.ஆர். திரைப்படம் வழியே வசீகரித்த வரலாறு ஒரே நாளில் நடந்த திருப்பம் அல்ல. திராவிட இயக்கத்தின் பிரச்சாரக் கருவியாகத் திரையிலும் அரசியல் மேடைகளிலும் கவனம்பெறத் தொடங்கிய ஒரு வளரும் நட்சத்திரம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட பகுத்தறிவு இலட்சியவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தாலும் அதைத் தனக்கான பாதையாக அவர் முன்வைக்கவில்லை.
மாறாக, திரைப்படங்களின் வழியாகத் தன்னை ஊருக்கு உழைக்கும் ஏழைப்பங்காளன் என்ற புனித பிம்பமாக முன்னிறுத்திக்கொண்ட துருவ நட்சத்திரமாக எழுந்து நின்றார். அந்தப் புனித பிம்பம்தான் பின்னாளில் அரசியல் களத்திலும் அவருக்குக் கைகொடுத்தது.
சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துப் பின் கதையின் நாயகன் ஆனார். அதன் பின் சாகச நாயகனாகவும் அதற்கும் பின் நல்லவர்களைக் காக்கத் தீயவர்களை அடக்கி ஒடுக்கும் அவதார நாயகனாகவும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர்., அரசியலிலும் பல்வேறு தடைகளைத் தாண்டித் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் முதலமைச்சராக அவர் அமர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றின் தற்செயல் நிகழ்வு அல்ல.
விளிம்பு நிலை மக்களின் ரட்சகர்
‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது பரிவும் கவனமும் தனித்துவமானது. தன் பால்ய காலத்தில் தாயார் சத்யபாமா, அண்ணன் சக்ரபாணி ஆகியோருடன் வறுமையும் பட்டினியும் சூழ, கும்பகோணத்தில் வசித்தபோது பெற்ற வாழ்வனுபவத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டது.
இந்த அனுபவம்தான் அவரது பல திரைப்படங்களில் ‘ஏழைப்பங்காளன்’ காட்சிகளாக உருமாறியது. பின்பு அவர் அரசியலுக்கு இடம்மாறியபோது சமூகநலத் திட்டங்களிலும் பிரதிபலித்தது.
கேரளப் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்து, சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் எம்.ஜி.ஆர். குடும்பம் குடந்தைக்குப் புலம்பெயர்ந்தது. சிறு வயதில் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் நாடோடியாய் அலைந்து திரிந்தார். திரைப்படங்களில் நடிக்க தாமதமாகவே வாய்ப்பு கிடைக்கிறது. நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதைவிடத் தாமதமாகிறது.
நாயகனாக நிலைபெற்ற பிறகு அதில் திருப்தி அடைய மறுத்துப் புதிய சாகசத்தில் இறங்குகிறார். தன் வாழ்க்கையோட்டத்தின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘நாடோடி மன்னன்’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவுசெய்கிறார். அந்தப் பட வெளியீட்டுக்கு முன் “ படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று கூறியிருக்கிறார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, திரை உலகின் முடிசூடா மன்னராக அவரை மாற்றியது. சாகச முயற்சி சாதனையாக மாறியது.
தனிப் பிறவி
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த பலரிடத்தில் அவர் பாணியிலான கதைகளைத் தொட்டுக்கொண்டு நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தையும் முயற்சியையும் பார்க்க முடிகிறது. திரை பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் பல வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் யாராலுமே எம்.ஜி.ஆர். அளவுக்கு அதில் வெற்றிபெற முடியவில்லை.
சினிமாவில் பெரும்பாலான நாயகர்கள் எம்.ஜி.ஆரைப் போல தர்மத்தைக் காக்கவே போராடுகிறார்கள். ஆனால் யாராலும் ‘தர்மத்தின் தலைவ’னாக, ‘மக்கள் திலக’மாக உருப்பெற முடியவில்லை. தன் படங்கள் மூலமாகச் சமூக உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் தனிப் பெரும் சாதனை. அந்த வகையில் அவர் தனிப் பிறவி. மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்.
No comments:
Post a Comment