Sunday, January 24, 2016

நெட்டெழுத்து: இணையத்தில் அரசு பள்ளி மகத்துவம் அடுக்கும் ஆசிரியர்

க.சே. ரமணி பிரபா தேவி

Return to frontpage

ஒவ்வோர் ஆசிரியருக்கும், அவர் பணியாற்றும் பள்ளி ஒரு கோயில்தான்.

அதன் அடிப்படையில் தான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைத்தளத்துக்கு ''கல்விக்கோயில்'' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறுகிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் இராஜேந்திரன்.

'பள்ளிக்குச் சென்றோம்; பாடம் சொல்லிக் கொடுத்தோம். மாலை மணி அடித்தால், கிளம்பினோம்' என்று இல்லாமல், தான் செய்யும் பணிகளை முறையாக ஆவணப்படுத்தி, தன் வலைதளத்தில் பதிவேற்றுகிறார். ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இவருக்கு, தன் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், புகைப்படங்களோடு கூடிய செய்திகளாக பதிவுபடுத்துவது வழக்கம்.

பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழாவை விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்களோடு சேர்த்து செய்தியாகப் பதிவிட்டிருக்கிறார்.படிக்க http://kalvikoyil.blogspot.com/2016/01/blog-post_11.html

பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகள், கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் குறித்த தகவலையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் தகவலையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். புகைப்படங்களோடும், மாணவர்களின் கைவண்ணங்களோடும் பதிவுகள் மிளிர்கின்றன. வாசிக்கhttp://kalvikoyil.blogspot.com/2014/07/blog-post.html

பள்ளியில் நடத்தும் விழாக்களைத் தாண்டி, ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பதிவுகளையும் தவறாமல் தன் வலைத்தளத்தில் பதிகிறார் ஆசிரியர் இராஜேந்திரன். கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் குறித்த பதிவுக்கான இணைப்பு http://kalvikoyil.blogspot.com/2015/12/blog-post.html

இவரின் ஆசிரியர் குழு, பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாண்டி வெளியிலும், தனது மாணவர்களைக் களப் பணியில் ஈடுபடுத்துகின்றது. அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய வார விழா தொடர்பாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் புதரில் மறைந்திருந்த நூற்றாண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வாசிக்க: புதிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்புhttp://kalvikoyil.blogspot.com/2015/11/blog-post_22.html

இவை தவிர பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம், யோகா உள்ளிட்ட மனவளக் கலை பயிற்சிகள், சுதந்திர தின விழா, குழந்தைகள் தின விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளின் இணைப்புகளும் காணக்கிடைக்கின்றன.

கல்விக்கான வலைதளத்தில் அறிவியல் சோதனைகள் இல்லாமல் போகுமா? ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கால நேரம் கொண்ட அறிவியல் குறும்படங்களின் யூடியூப் இணைப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல் மற்று உயிரியல் தொடர்பான சோதனைகள் கொண்ட காணொலிக் காட்சிகள், நிச்சயம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! காணஒரு நிமிட அறிவியல் சோதனைகள் http://kalvikoyil.blogspot.com/2014/08/experiments-tamil.html

'அரசுப் பள்ளி எப்போதும் தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளிதான்' என்று ஆணித்தரமாகக் கூறும் ஆசிரியர் இராஜேந்திரன், அதை உலகுக்கு உணர்த்திடவே இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அரசுப்பள்ளிகளின் சாதனைகளை வெளிக்கொணரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

கல்விக்கோயில் வலைதள முகவரி http://kalvikoyil.blogspot.com/

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024