Wednesday, January 6, 2016

ஜல்லிக்கட்டும் தீர்வும்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 05 January 2016 12:55 AM IST


கல்யாணத் தேதி குறித்துவிட்டு மாப்பிள்ளை தேடிய கதையாக பொங்கல் இன்னும் பத்து நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இவர்களுடன் ஊடகங்களும் மல்லுக்கட்டுகின்றன. ஆனாலும், மத்தியிலிருந்து எந்தவிதமான ஆதரவான சூழலும் தென்படவில்லை.
இந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அங்கமாகிய காங்கிரஸ், தி.மு.க. இரண்டும்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று பொதுவான குற்றச்சாட்டை மற்ற அரசியல் கட்சிகள் பேட்டியளித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கடந்த 18 மாதங்களாக பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி குஷ்பு.
அரசியல் கட்சிகளை விட்டுத்தள்ளுவோம். ஏன் இதுநாள் வரை, தமிழர் பண்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அமைப்புகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தவறின என்கிற கேள்வியை யாரும் எழுப்பத் தயாராக இல்லை.
உயர்நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை அடியொட்டி, மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு, காவல் துறையின் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட குழுவின் மேற்பார்வை ஆகியவற்றோடு, காளைகளைத் துன்புறுத்தாமல், மது ஊட்டாமல், வெறியேற்றும் செயல்களில் ஈடுபடாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், எத்தகைய குற்றச்சாட்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டதாகவும் எந்தச் சம்பவங்களும் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தடை விதிக்க நேர்ந்தது ஏன்? நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக சரியான புரிதலை முன்வைக்கத் தமிழக அரசோ, இதில் அக்கறையுள்ளவர்களோ இல்லாமல் போனதுதான் காரணம்.
ஜூலை 11, 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்ட அரசு அறிவிக்கையின்படி, "கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவோ அல்லது கேளிக்கை பொருளாக்கவோ கூடாது. இந்த விலங்குகளின் பாலின வேறுபாடு எதுவாக இருப்பினும் இந்த விலங்குகள் அனைத்துக்கும் அந்தச் சட்டம் பொருந்தும். காளை என்று இந்த சட்டத்தில் குறிப்பிடும்போது அது எருமை, மாடு (காயடிக்கப்பட்டது), பசு, கன்று அனைத்துக்கும் பொருந்தும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காளை என்ற சொல்லுக்கு, எருமை, மாடு, பசு, கன்று எல்லாமும் அடங்கும் என்றால், எருமையும் பசுவும் தாங்களாக விருப்பப்பட்டா மனிதருக்குப் பால் தருகின்றன? கன்றுக்காக சுரக்கும் பாலை மனிதன் கறப்பது துன்புறுத்தல் அல்லவா? அதன் இயல்புக்கு அப்பாற்பட்டு செயல்படச் செய்யும் விலங்கு - விரோத நடவடிக்கை அல்லவா? கன்றுக்கான பாலை மனிதன் திருடிக்கொள்வது குற்றமல்லவா? அந்தப் பாலை விற்பனை செய்வது, பசுவைத் துன்புறுத்தும் மானுட வணிகம்தானே!
ஒரு நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும்போது, ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வணிகத்துக்காக பசுக்களை பயன்படுத்துவதும் குற்றம்தானே! ஏறுதழுவுதல் துன்புறுத்தல் என்றால், மாட்டை ஏர் பூட்டுவதும், வண்டி பூட்டுவதும்கூட துன்புறுத்தல்தானே? அவற்றின் இயல்புக்கு பொருந்தா செயல்தானே!
இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், கரடி, குரங்கு, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை வைத்து தொழில்புரியும் சர்க்கஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுதான். ஆனால், இதில் காளை சேர்க்கப்பட்டதன் காரணம், ரேக்ளா போன்ற பந்தயத்தைப் போன்று, ஜல்லிக்கட்டும் ஒரு பந்தயம் என்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான்.
ஜல்லிக்கட்டு பந்தயம் அல்ல இது ஒரு வீரவிளையாட்டு. இந்த வீரத்துக்குப் பரிசாகக் காளையின் கழுத்தில் அதன் உரிமையாளர் காசுகளை கட்டிவிடுகிறார். இது பணத்துக்காக அல்லது தனிநபர் அல்லது தனி அமைப்பின் லாபத்துக்காக நடத்தப்படும் பந்தயம் அல்லது சூதாட்டம் என்பதாக கருதப்படும் என்றால், உறியடித் திருவிழாக்களும்கூட வெறும் சூதாட்டம் என்று ஆகிவிடும் அவலம் நேரும்.
ஆயிரக்கணக்கில் அடிமாடுகள் லாரிகளில் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகள் இறைச்சி ஏற்றுமதி நடந்து கொண்டே இருக்கிறது. காளை என்ற சொல் மாடு என்பதையும் உள்ளடக்கியது என்றால், இது எவ்வாறு நடக்கின்றது? மிகப்பெரும் தோல்பொருள் ஏற்றுமதியும் விற்பனையும் எவ்வாறு நடக்கிறது?
காளையை, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை அரசியல்ரீதியாக யாரும் நடத்தவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், உச்சநீதிமன்றம் தடைவிதிப்பது முறையல்ல என்பதை நீதிமன்ற வழக்காற்றின் அடிப்படையில் எதிர்வினை புரியவும் தமிழ்நாட்டின் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தவறிவிட்டன.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் மரபு சார்ந்த, உணர்வுசார்ந்த விவகாரத்தை, சரியான புரிதல் இல்லாமல் தடுப்பதால், வடநாட்டினர் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் என்கிற எண்ணத்தை விதைப்பதாக அமைந்துவிடும். ஒரு சிறிய விவகாரத்தைப் பெரிதாக்கி, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான விஷத்தை விதைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாமா?
இந்த விவகாரத்தில், அண்மையில் ஒரு பேட்டியில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டதைப்போல, காட்சிப்படுத்தல் விலங்குகளின் பட்டியலை தீர்மானிக்கும் பொறுப்பை மாநில அட்டவணைக்கு மாற்றுவது நல்லது. இது இந்தியாவுக்கு பெரும் நன்மை சேர்க்கும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024