Monday, January 25, 2016

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பா. ஜீவசுந்தரி

பூக்களை ரசிக்காதவர்கள் இங்கு யார்? மென்மையான உணர்வும் கலாபூர்வமான ரசனையும் அழகுணர்ச்சியும் கொண்ட யாராக இருப்பினும் பூக்களின் வண்ணங்களையும் நறுமணத்தையும் ரசிக்காமல் கடந்து போய்விட முடியாது. அந்தப் பூக்களே உயிர் கொண்டு நடமாடினால் எப்படி இருக்குமோ, அதன் மறு வடிவம்தான் பெண் குழந்தைகள்.

தங்கள் குடும்பத்தின் தேவதை என்றும் குலவிளக்கு என்றும் கொண்டாடும் பெற்றோர்கள் ஒருபுறம் என்றால், ‘இந்தச் சனியனும் பொட்டையாப் போச்சே….’ என்று புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் மறுபுறம். கிராமப்புறங்களில் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றியோ நெல் மணிகளைப் புகட்டியோ கொன்ற நடைமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். மதுரையின் உசிலம்பட்டி பகுதிகளில் அன்றாட நடைமுறையாக இருந்த இந்நிலை இப்போது இல்லை. அதே போல, தர்மபுரி மாவட்டத்திலும் பெண் சிசுக்கொலை வெகு பிரபலம். ஆனால், இந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறதா என்றால், இல்லை என்று அழுத்தமாக மிகுந்த மன வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

மூன்று வயதேயான தன் பெண் குழந்தையுடன், சென்னைக்குப் பிழைக்க வந்தார் காளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண். 18 வயதுகூட நிரம்பாத காளி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கல்வியறிவு இல்லாதவர். இங்கிருந்த உறவினர்களை நம்பியே அப்பெண் வந்திருந்தார். அவர்களும் காளியை ஏமாற்றாமல் பாதுகாப்பளித்து, பிழைப்புக்கு ஒரு வழியையும் காட்டினார்கள். படிக்காத அந்தப் பெண்ணுக்கு சென்னையில் பெரிதாக என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது? வீடுகளில் பணிப்பெண் வேலை தாராளமாகக் கிடைத்தது. ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல். வீடு பெருக்கித் துடைத்தல் என்று அயராமல் வேலை செய்து, எல்லோரிடமும் நல்ல பெயரையும் வாங்கினார். இதில் எங்கள் வீடும் அடக்கம்.

கையில் வருமானம் கிடைத்த பின் தன்னம்பிக்கையுடன், உறவினர் வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார் காளி. மகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். நாங்களும் அதற்கான உதவிகளைச் செய்தோம். இப்போது அந்தப் பெண் குழந்தை 10-ம் வகுப்பை நிறைவு செய்து ப்ளஸ் ஒன் படிக்கிறாள்.

தனியாக ஊரை விட்டுக் கிளம்பி சென்னைக்கு வந்து பிழைக்க எவ்வளவு மனதிடம் வேண்டும். அது அந்தக் காளியிடம் ஏராளமாக இருந்தது. அவ்வப்போது நான் பேச்சுக் கொடுக்கும்போது, அப்படி வந்ததற்கான காரணத்தையும் சொன்னபோதுதான் அந்தப் பெண்ணின் வலியை உணர முடிந்தது. பதினைந்து வயதிலேயே, சொந்தத்தில் வாழ்க்கைப்பட்டு, அவசரம் அவசரமாக ஒரு பெண் குழந்தையையும் 16 வயதில் பெற்றுக்கொண்டாயிற்று. ஆனால், பிறந்தது பெண் என்பதால் வீட்டில் பிரளயம் கிளம்பிவிட்டது. பிறந்த பெண் சிசுவைக் கொன்றுவிடச் சொல்லிக் கணவனிடமிருந்து உத்தரவு வந்ததும் ஆடிப் போய் விட்டார். காளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவன் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராயில்லை. குழந்தையைக் கொல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை. ஆனாலும் மிகுந்த மனோதிடத்துடன் குழந்தைக்காக மண வாழ்க்கையைத் துறந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார் காளி.

சனியன் விட்டதென்ற நிலையில் கணவனும் அடுத்த கல்யாணத்தை முடித்துக்கொள்ள, மனதில் விழுந்த அடியை மீறிய கசப்புணர்வுடனும், எப்படியும் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியுடனும் சென்னைக்குப் பயணமானவர்தான் காளி. இப்போது சென்னைவாசியாகவே மாறி மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகள், திருமணங்கள் என்று ஊருக்கும் போய் வந்துகொண்டிருக்கிறார். மறு கல்யாணம் செய்துகொண்ட கணவன் பற்றி ஒருநாள் காளி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல், என்னையும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது. ஆம்!

பெண் குழந்தை வேண்டாமென்று இரண்டாவது கட்டிக்கொண்டு வந்த மனைவியும் பெண் குழந்தையைத்தான் பெற்றெடுத்திருக்கிறாளாம். மிகக் கொண்டாட்ட மன நிலையில் அதைச் சொன்னார் காளி. பெண் சிசுக்கொலை, மைனர் பெண்ணுக்குத் திருமணம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தக் காளியின் வாழ்க்கை.

படிப்பறிவற்ற, கிராமத்துப் பெண் காளிக்கு மட்டும் அந்த நிலை என்பதல்ல; நகரத்தின் நாகரிகப் பெண்களுக்கும் இதே நிலைதான். கால மாற்றத்தின் விளைவு, மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லாம் ஒருங்கிணைந்து இப்போது சிசுக்கொலை என்பதைக் கடந்து கருக்கொலையாக மாறி பூதாகரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்து பார்த்த பின், குழந்தையின் பாலினம் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று சட்டம் எச்சரித்தாலும், எல்லாச் சட்டங்களையும் போலவே இதுவும் மீறப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்பதற்கான சங்கேத மொழியும், குறியீடுகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியா முழுமையும் இம்முறை அமலில் இருக்கிறது என்பதை எந்த வார்த்தைகளில் விவரிக்க? அதன் விளைவு ஆண் – பெண் விகிதாசாரம் இப்போது தலைகீழ் விகிதமாகி இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்கிறது என்பது கூடுதலான ஒரு ஆறுதல்.

உலகெங்கிலும் நடைபெறும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ராஜஸ்தான், ஹரியானா, பிஹார், ஒடிஷா எனப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் நிலை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பது வேதனையிலும் ஒரு மன நிறைவு. தமிழகத்தின் மேற்குப் பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. தமிழகம் முழுவதும் 24% சிறுமிகளுக்கு மணம் செய்விக்கும் நிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்றும் யுனிசெஃப் அறிவிக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் இதனால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 100 கோடிகளை எட்டும் எனவும் அது எச்சரிக்கிறது.

ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பு பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்று வேண்டா வெறுப்பாக வளர்ப்பதும், அவர்களைப் பெரும் சுமையாக நினைப்பதும், வீட்டை விட்டுத் தள்ளிவிட்டால் போதும் என நினைத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தொடர்கதையாக இருக்கும் நிலை மாற வேண்டும். ‘பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியப் போவுது’ என்ற நிலைபாடுகளும், சிந்தனைகளும் மாற்றப்பட வேண்டியவை.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024