2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மேலும், "எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. எனக்குப் பிறகும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று அவர் உறுதியுடன் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியது:
"தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், விவசாயம், நதி நீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 2011-ல் எங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வழங்கப்படுகிறது. 3 லட்சம் பசுமை வீடுகள் திட்டத்தில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 853 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 12 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள், 59,905 இலவச கறவை மாடுகள், 27 லட்சத்து 80 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் ரூ.2 ஆயிரம், மீன் குறைவு காலங்களில் ரூ.4 ஆயிரம், மீனவர் குடும்பங்களுக்கு ரூ.2,700 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மகப்பேறு நிதித் திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ரூ.2,910 கோடியே 21 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு திருமண நிதி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் 32 லட்சத்து 67 ஆயிரத்து 311 பேருக்கு மடிக்கணினிகள், 31 லட்சத்து 71 ஆயிரத்து 764 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவுக் கட்டணம் ரூ.755, ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் அனைத்தும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.70 கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், புதிதாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா மருந்தகங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். 8,542 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 724 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் மற்றும் பழநி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நிறைவேற்றப்பட்ட எதிர்பார்ப்புகள்...
கடந்த திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகத்தான். 2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்.
குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று சிலர் கேட்கலாம். பேச முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்து பேச முடியுமா? அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment