By தி. இராசகோபாலன்
First Published : 05 January 2016 12:56 AM IST
பிரசவ வேதனையைப் பெண்ணுக்கு மட்டும் ஏன் வைத்தான், என்று பல நேரங்களில் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால், பத்திரிகைக் குழுமத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் வரவேண்டிய பத்திரிகையை, முதல்நாள் இரவே மூட்டைக் கட்டி அனுப்ப வேண்டுமென்பதில் படுகின்ற பாடுகள் இருக்கின்றனவே, அவற்றை எண்ணிய நேரத்தில் படைத்தவன் சமதர்மவாதிதான் என்பது புலப்பட்டது. இத்தகைய பெரும்பாடுகள் நேஷனல் ஹெரால்டு தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம் வரை அகலவே இல்லை.
பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூளைதான் நேஷனல் ஹெரால்டு. லண்டனில் படிப்பை முடித்து நேரு அலகாபாத் திரும்பிய நேரத்தில், இன்டிபெண்டன்ட் எனும் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை மோதிலால் நேருவின் முழுமையான பொருளாதாரப் பின்புலத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது. நேரு அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதலானார். ஆனால், மனிதவளம் இல்லாமல் போனதால் அப்பத்திரிகை அகால மரணமடைந்தது.
நேருவின் எழுத்துக்களில் இலக்கிய நயம் இல்லை என்று சிலர் விமர்சித்தபோது, "நான் ஓர் இலக்கியக்கர்த்தா அல்ல. ஆனால், ஒரு பத்திரிகை எழுத்தாளனைப்போல் இருக்கின்றேன்' என நவின்றார்.
இன்டிபெண்டன்ட் பத்திரிகை மறைந்த சோகம் நேருவைக் கப்பிக்கொண்டது. என்றாலும், அதுவே அடுத்தொரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் எனும் வேகத்தையும் தந்தது. காங்கிரஸ் கட்சியினுடைய நடப்புகளையும், போராட்டங்களையும் காஷ்மீரத்திலிருந்து, இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் ஆதங்கத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 09.09.1938 அன்று லக்னெளவில் தொடங்கினார்.
இதழியல் துறையில் ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்த கே.ராமா ராவை நேஷனல் ஹெரால்டின் ஆசிரியராக்கினார் நேரு. இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில்கூட பத்திரிகைக்கு ஆல்பெர்ட் எனும் கனரக இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தவர் நேரு. பத்திரிகையின் நோக்கம், சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது; எதையும் தியாகம் செய்து அதனைக் காப்போம் என்பதாகும்.
இந்தக் குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், இந்திரா காந்தி. கேபிரியல் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூனுக்குக் கொடுத்த தலைப்பு அது. அதனை நறுக்கி இந்திரா, நேருவுக்கு அனுப்பினார். நேரு அதனைப் பத்திரிகையின் நோக்கமாக்கினார். இதனைப் பத்திரிகை உலகம், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையின் குறிக்கோளாகிய ‘Comment is free;’ but facts are sacred என்பதற்குச் சமமானதாகப் பாராட்டியது. ஆசிரியர் கே. ராமாராவ், எங்களுடைய மூலதனம் நேருபிரான். எங்களது முதல் வங்கி ஏழைகளின் சட்டைப் பையே என எழுதினார்.
நேஷனல் ஹெரால்டில் ராமா ராவின் எழுத்துக்கள் தீப்பந்தங்களாகவும், கண்ணி வெடிகளாகவும் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கலங்கடித்தது. ஆங்கிலேய அரசு பத்திரிகையின் மீது தனது கிடுக்கிப்பிடியை இறுக்கிப் பிடித்தது. முன்ஜாமீனாக ரூ.6,000/- கட்டச் சொன்னது. அதனைக் கட்டி முடித்தவுடன் மீண்டும் 12,000/- ரூபாயைக் கட்டியாக வேண்டும் அல்லது பத்திரிகை நிறுத்தப்படும் என அச்சுறுத்தியது. ஆத்திரமடைந்த நேரு, ஒரே ஓர் அறிக்கையினைப் பத்திரிகையில் வெளியிட்டார். உடனடியாக ரூ.42,000/- பொதுமக்களிடமிருந்து வந்து குவிந்தது.
ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி ராமாராவ் காரசாரமாக எழுதினார். லக்னெள சிறைச்சாலைக்குள்ளேயே தடியடி செய்து, விடுதலைப் போராட்ட வீரர்களை அடித்து நொறுக்கிய அநாகரிகச் செயலை, ரத்தம் கொப்பளிக்கத் தக்கவகையில் தீட்டிக் காட்டினார் ராமாராவ்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு, கறுப்புச் சட்டத்தைக் கையில் எடுத்து ராமா ராவைக் கூண்டிலேற்றி ஆறு மாத காலம் சிறையில் அடைத்தது. வெகுண்டெழுந்த நேரு, அலகாபாத்திலிருக்கும் ஆனந்தபவனத்தை விற்றாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்துவேன் என்றறிக்கை விட்டார். நேரு என்ற ஒரே ஓர் உறைக்குள், தேசியமும் பத்திரிகா தர்மமும் இரண்டு வாள்களாகக் கிடந்தன. என்றாலும், அதிகார வர்க்கம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை இழுத்து மூடியது.
மறுபடியும் நேஷனல் ஹெரால்டு 1945-இல் புத்துயிர் பெற்று எழுந்தது. மணிகொண்டா சலபதி ராவ் ஆசிரியராக வந்தார். நேருவுக்கு நெருக்கமான நண்பர். சலபதி ராவ், 30 ஆண்டுகாலம் அப்பத்திரிகையில் கோலோச்சினார். அமரர் ஏ.என். சிவராமன் கணக்கன் எனும் பெயரில் பத்திரிகை உலகத்தின் லகானைக் கையில் பிடித்திருந்ததுபோல, சலபதி ராவ் எம்.சி. எனும் பெயரில் (மணிகொண்டா சலபதிராவ்) அதிகார வர்க்கத்தை நெம்புகோல் போட்டு நெம்பினார்.
நேஷனல் ஹெரால்டில் நேருவின் எழுத்துக்கள் முழு வீரியத்தோடும், வேகத்தோடும் மின்சாரத்தைப் போல் பாய்ந்தன. போட்டி பத்திரிகையாளர் நேருவுக்கு ஒரு பத்திக்கு ரூ.150/- தருவதாகக் கூறி எழுத அழைத்தனர். ஆனால்,நேரு, பாரதியாரைப் போல,"காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிது காண்' என மறுதலித்துவிட்டார். 1947-இல் நேரு பிரதமர் ஆனவுடன், பத்திரிகையில் மேலாண்மைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நேஷனல் ஹெரால்டில் பொருளாதார நெருக்கடி வந்தது. பத்திரிகைக் குழுமம் முழுவதும் ஊதியம் வாங்காமலேயே பத்திரிகையை நடத்தினர்.
1968-இல் லக்னெள அலுவலகம் தில்லிக்கு இடம் பெயர்ந்தது. சலபதி ராவ் நேருவின் நண்பராக இருந்தபோதிலும், ஆட்சியின் தவறான அணுகுமுறைகளைக் கண்டிக்கத் தவறுவதில்லை. நேருவினுடைய ஆட்சிக்காலத்தில் பிகினி எனும் இடத்தில் ஓர் அணுச் சோதனை நடந்தது. அதனைக் குறித்துப் பத்திரிகை நிருபர் கேட்டபொழுது, பேட்டி தர மறுத்துவிட்டார் நேரு.
ஆனால், சலபதி ராவ் அது குறித்து நேருவிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, அது எமனின் ஏஜெண்ட் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டினார். சலபதி ராவ் தலையங்கங்களைத் துல்லியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எழுதுவார்.
சலபதி ராவின் நடுநிலைக்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டலாம். பண்டித கோவிந்த வல்லப பந்த் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, ஓர் அரசு விழாவில், விநாயகர் பூஜையை முடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். மதச்சார்பற்ற நாட்டில் ஓர் அரசு விழாவில் விநாயகர் பூஜை முடித்துவிட்டுத் தொடங்கியதைச் சலபதி ராவ், தலையங்கத்தில் கண்டித்துக் கடுமையான சொற்களால் காய்ச்சி எடுத்துவிட்டார்.
இது பிரதமர் நேருவின் பார்வைக்குச் சென்றவுடன், அவர் அதனைப் பல படிகள் எடுத்து எல்லா மத்திய அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, எதிர்காலத்தில் அதுமாதிரி நடக்கக்கூடாது என எச்சரித்தார்.
மேலும், சலபதியின் போர்க்குணத்திற்கு மற்றொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டலாம். ஒரு பெரிய பணக்காரக் கோடீஸ்வரன் வீட்டு நாய் செத்துப் போயிற்று. செல்வந்தர்கள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, பிடிஐயில் எட்டுப் பத்திக்குப் படத்தோடு செய்தி வரும்படியாகச் செய்துவிட்டனர். அதனை எல்லாப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துவிட்டன.
அதே நாளில், ஓவியக்கலையில் உலகப் புகழ்பெற்ற மாமனிதர் அபீந்தரநாத் தாகூரின் மறைவும் நேரிட்டது. அதனை ஒரு சிறிய பெட்டிச் செய்தியில், அவருடைய மரணத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அவர் இரபீந்திரநாத் தாகூருக்கு உறவினர் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
இங்கிலாந்தில் ஓவியக்கலையில் வல்லுநர்கள் மேலும் தம் அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அபீந்திரநாத் தாகூரின் ஓவியக்கூடத்திற்கு வந்து போவது, சலபதி ராவுக்குத் தெரியும். அபீந்தரநாத் அவர்களின் ஆர்வத்தின் காரணமாகத்தான், இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எனவும் சிலர் எழுதியிருக்கின்றனர்.
அத்தகைய உலகப் புகழ் பெற்ற ஓவியருக்குப் பெட்டிச் செய்தியும், கோடீஸ்வரன் வீட்டு நாய்க்கு எட்டுப்பத்தியில் இறுதி ஊர்வலத்தை வருணித்திருந்ததும், சலபதி ராவை நக்கீரப் பார்வைக்குக் கொண்டு சென்றது. தலையங்கத்தின் தலைப்பு: அ. தாகூர் - ஒரு நாய் - பிடிஐ என்பதாகும். தலையங்கம் எழுதிய தாள்கள் தீப்பற்றும் அளவுக்கு வார்த்தைகளால் வறுத்து எடுத்துவிட்டார்.
சலபதி ராவ் கடைசி வரை கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். பத்திரிகை உலகம் அவரைப் பத்திரிகைகளுக்காகவே வாழ்க்கைப்பட்டுவிட்டார் என எழுதியது. பத்திரிகை ஊழியர்களின் கண்ணியம் கிஞ்சித்தும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொண்டார். பத்திராதிபர்கள் அத்துமீறி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் அனுமதித்ததில்லை.
பல பெரிய மனிதர்களையும், பல பெரிய பிரச்னைகளையும் ஊர் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சலபதி ராவின் மறைவு, பரிதாபப்படத்தக்கதாக அமைந்தது. 1983-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் சிக்கித் தெருவோரமாக அவருடைய சடலம் கிடந்தது.
நேருவின் மறைவுக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு, தாயை இழந்த ஊமைக் குழந்தை போலாயிற்று. காங்கிரஸ் கட்சி, அப்பத்திரிகை தனக்கு வாளும் கேடயமுமாக இருந்ததை மறந்தது. நிதிப்பற்றாக்குறையாலும், கடன் சுமையாலும் லக்னெளவில் இருந்த ஹெரால்டு கட்டடம் ஏலம் விடப்பட்டது.
ஊதியம் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி, குஷ்வந்த் சிங்கை அப்பத்திரிகையின் ஆசிரியர் ஆக்கினார். 2000 பத்திரிகைகள் தாம் விற்பனை ஆயின. குஷ்வந்த் சிங் நிலைமையை உணர்ந்து, ஊதியம் வாங்காமலேயே பணியாற்றினார். பி.டி.ஐ., யு.என்.ஐ.க்குரிய சந்தாக்கள் செலுத்தப்படாமையால், 2008-இல் இரட்டைப் பூட்டாகப் போட்டுப் பத்திரிகையை இழுத்து மூடினர்.
கவியரசர் கண்ணதாசன் பெற்ற பிள்ளையைப்போல் போற்றி வளர்த்த தென்றல் பத்திரிகை வேறொரு பெரிய முதலாளியால் வாங்கப்பட்டபோது, தன் கன்னத்தில் வடிந்த கண்ணீரைக் கவிதையாகத் தீட்டினார்:
அந்தோ என் செல்வம் ஆழிவாய்ப்
பட்டதம்மா
பந்தாடும் தென்றல், பாய்போட்டுத்
தூங்குதம்மா
பாண்டியனார் நாட்டில், பழம்பெரிய சோணாட்டில் தோன்றிய நாள்தொட்டுத் தொடர்ந்தோடும் தென்றலது,
ஆண்டி உடற்சாம்பல், அணுபோல்
பறந்ததம்மா
எனக் கண்ணதாசன் பாடியதுபோல், நேருவும், நேஷனல் ஹெரால்டு நின்று போனதைக் கல்லறையின் காதுகளின் வழியே கேட்டிருந்தால், கண்ணதாசன் அழுகையை ஆங்கிலத்தில் வடித்திருப்பார்.
No comments:
Post a Comment