Thursday, January 7, 2016

அரவமில்லா ஓர் அத்துமீறல்!

Dinamani



By ப. இசக்கி

First Published : 14 December 2015 01:27 AM IST


"குற்றத் தடுப்பு' என்ற பெயரில் தனியார் மற்றும் பொது இடங்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டெலிவிஷன் காமிரா'வை (சிசிடிவி) பொருத்தி வைத்துக் கொண்டு அடுத்தவர்களின் அந்தரங்கங்களை உற்றுப்பார்க்கும் அநாகரீகம் அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில் மக்களைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் சிசிடிவி காமிராக்களைப் பொருத்துவதை தமிழக அரசு கடந்த 2012 டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.
அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள், வியாபார நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் என காமிரா பொருத்த வேண்டிய இடங்களாக ஏராளமானவை அரசின் உத்தரவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், தனியான வீடுகள் தவிர பொதுமக்கள் வந்துபோகும் எந்த இடமாக இருந்தாலும் அங்கு சிசிடிவி காமிராவைப் பொருத்த வேண்டும் என்பதுதான் உத்தரவின் சுருக்கம்.
இந்த உத்தரவை சாக்காகக் கொண்டு இப்போது சகட்டு மேனிக்கு சிசிடிவி காமிராக்களைப் பொருத்தி, பொதுமக்களை ஒருவித பதற்றத்துக்கு ஆளாக்கி வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொது பயன்பாட்டு கட்டடங்களின் வாசலில் நுழையும்போதே கண்ணில் படும்படியாக "கண்காணிப்பு காமிரா சுழன்று கொண்டிருக்கிறது' என்ற அறிவிப்பு அதட்டுகிறது. சில இடங்களில் "தயவு செய்து சிரியுங்களேன், காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது' என்று ஒரு செல்லமான மிரட்டல்.
பொது இடங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண இந்த சிசிடிவி காமிரா உதவிகரமாக இருக்கலாம். குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு சிலர்தான். அதற்காக, அங்கு கூடும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை காமிரா மூலம் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பது என்பது எஞ்சியவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகாதா? தான் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பது குற்ற நோக்கம் இல்லாத ஒருவருக்குத் தேவையில்லாத பதற்றத்தையே ஏற்படுத்தும்.
தனி மனித சுதந்திரம் பற்றி பேசும் பொதுநல அமைப்புகள்கூட இந்த சிசிடிவி காமிரா விஷயத்தில் மெளனம் காப்பது வேடிக்கையாக இருக்கிறது.
பொது இடங்களில் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயதான பெண்கள் என பலரும் இருப்பார்கள். இந்தக் கால இளம்பெண்கள் பலர் உடையில் சுதந்திரமானவர்கள். கட்டடத்தின் உயரமான இடத்தில், ஒரு மூலையில், ஏதோ ஒரு கோணத்தில் சுழலும் காமிரா ஒவ்வொருவரையும் எப்படி படம் பிடிக்கும் என்பதை யார் அறிவர்? குற்றவாளிகளைக் கண்டறிய காட்சிகளை திருப்பி பார்க்கும்போது அதில் எந்த காட்சி எப்படி பதிவாகி இருக்கிறது, அதை யார் எப்படி பார்ப்பார்கள்? அந்த காட்சிகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? விஷமிகளால் அவை சமூக ஊடங்களுக்கு செல்லாது என்பதற்கு யார் உத்தரவாதம்? சரி, அசம்பாவிதம் ஒன்றுமே நடக்காவிட்டாலும்கூட, காமிராவில் பதிவான காட்சிகள் எல்லாம் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகின்றனவா? அவை எப்படி அழிக்கப்படுகின்றன?
இதற்கான எந்த விதிமுறைகளும் அரசு உத்தரவில் இல்லை. எனவே, காமிரா பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.
சரி, வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முதலாளிகள் என்றார் காந்தி. அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதை விட்டுவிட்டு அனைவரும் திருடர்கள் என்பதுபோல "மூன்றாவது கண்' கொண்டு கண்காணித்துக் கொண்டிருப்பது என்ன நாகரிகம்? அது வாடிக்கையாளர்களை அவமதிக்கும் செயல் ஆகாதா? வர்த்தக நிறுவனத்தினர் இதை உணர வேண்டாமா? கடைகளில் திருட்டு நடக்கிறது என்றால் கவனமுடன் இருக்க வேண்டியது ஊழியர்கள்தான். உஷாரான ஊழியர்கள் இருக்கும் கடைகளுக்கு திருடர்கள் நுழைய முடியுமா?
இந்த சிசிடிவி காமிரா கலாசாரம் ஒரு வகையில் காவல் துறையினரின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலே.
பொது இடத்தில் குற்றம் செய்தவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதற்கு சிசிடிவி காமிரா பொருத்தப்படாததை காரணமாக கூறுவது அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது. காமிரா இருக்கும் இடங்களில் நடந்த குற்றங்களைத் துப்புதுலக்க அவற்றை மலைபோல நம்பும் போலீஸார், அவை தொழில்நுட்ப காரணங்களால் சரியாக இயங்கவில்லை என்றால் விசாரணையில் நிலைகுலைந்து போவதும் உண்டு. காவல் துறையினர் வழக்கமாக மேற்கொள்ளும் பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளும் குறைய வாய்ப்புண்டு. அதற்காக காமிராவே வேண்டாம் என்பது பொருள் இல்லை.
திருவிழா நேரங்களில் கடைவீதிகளில் காமிராவைப் பொருத்தி காவல் துறையினர் கண்காணிப்பார்கள். பெருங்கூட்டத்தில் தவறு செய்வோரை எளிதில் அடையாளம் காண அது உதவலாம்.
முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்பு, விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என 24 மணி நேர பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் காமிரா இருக்கலாமே தவிர, அரவமில்லா இந்த அத்துமீறல் மற்ற இடங்களில் அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...