Friday, January 15, 2016

யானைகளின் மன அழுத்தம்! By ஆர்.ஜி. ஜெகதீஷ்


First Published : 15 January 2016 01:19 AM IST
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பச் சூழ்நிலைகள், வேலைப் பளு, கடன் பிரச்னைகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் போன்றவை அதில் முக்கிய காரணிகளாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதனின் மன அழுத்தம் தீர்வதற்கு மனநல மருத்துவர்கள் உதவுவார்கள், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
 ஆனால், பிரமாண்ட வன விலங்கான யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை எப்படி வழங்க முடியும்? யானைகளுக்கு உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், இப்போது யானைகள் கடும் மனை உளைச்சலில் இருப்பதாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
 மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்துக்கு மனிதனே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அதன் விளைவே யானை - மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல்.
 இதனை, மோதல் என்று சொல்லுவதைவிட யானை - மனிதன் எதிர்கொள்ளல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
 யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
 நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
 அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை.
 முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன.
 வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.
 ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
 யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.
 அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.
 அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.
 ஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.
 இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.
 அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
 மனிதர்களாகிய நாம் நம் சந்தோஷத்திற்காக யானைகளை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்' என்கிற சிறுகதையில் "டாப்ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார்.
 மேலும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றளவும் உள்ளது.
 யானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார்.
 இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, யானைகளுக்குத் தேவையான, உகந்த சூழலை ஏற்படுத்தி யானைக்கும் - மனிதனுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளலாம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் அதுவே!

 


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024