Sunday, January 10, 2016

உருளைக்கிழங்கைக் கைவிடலாம்; உறவுகளை?

Return to frontpage

வாழ்க்கையில் நமக்குப் பிரியமானவை என்று சில விஷயங்கள் உண்டு. பிரியமானவற்றை எப்போது கைவிடுவது, எப்போது விடாபிடியாகக் கடைப்பிடிப்பது என்ற தேர்வு முக்கியமானது.

என் பிரியங்களில் முக்கியமானது உருளைக்கிழங்கு. ஆரோக்கியமான உணவான அது பல வீண் பழிகளுக்கு உள்ளாகிவந்திருப்பது தனிக்கதை. சிறுவயது முதலே உருளைக்கிழங்கின் ருசி உணர்ந்துவிட்ட நான் அதை எந்த ரூபத்திலும் எந்த வேளையிலும் எப்படியும் சாப்பிடத் தயங்க மாட்டேன். உருளைக்கிழங்கை ஊறுகாயாகவோ பாயசமாகவோ செய்தால்கூட நான் விரும்பி உண்பேன். வாரத்தில் பத்து முறையாவாவது உருளைக்கிழங்கை உண்பவனாக சுமார் 40 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறேன்.

அந்தப் பிரியத்தை நான் கைவிட்டு 28 மாதங்களாகின்றன. வாரத்தில் ஒரு வேளை இப்போதெல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடுவதே அபூர்வம். அதுவும் அதை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதிலிருக்கும் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும் ‘லீச்சிங் முறை’யைக் கையாண்டு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். காரணம் இரு வருடங்கள் முன்னர் என் சிறுநீரகங்கள் செயலிழந்ததுதான்.

டாயாலிஸுடன் ஒரு போர்

அப்போது மருத்துவர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் நான் டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்றார்கள். நான் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு டயாலிசிஸ் செயவதைத் தவிர்க்க விரும்புகிறேன் என்றேன். அதற்கான உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைப் பெற்றேன். அதன்படிதான் உப்பையும் உருளைக்கிழங்கையும் கைவிட்டேன். உப்பிட்ட உருளை முதல், கோஸ், அவரை, சௌசௌ, வடை, பஜ்ஜி எல்லாமே எனக்கு மிகவும் பிரியமானவை. இப்போது அவை என் வாழ்க்கையில் முக்கியமானவையாக இல்லை. அந்தப் பிரியங்கள் மீதான பற்று எனக்கு அற்றுவிட்டது.

இன்னொரு பிரியத்தையும் நான் கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கூட்டம் நிரம்பிய இடங்களுக்குச் செல்வது, அதிகமான மனிதர்களுடன் சந்தித்து உறவாடுவது முதலியன தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அது. காரணம் அங்கெல்லாம் எளிதில் எனக்கு ஏதேனும் தொற்று ஏற்படலாம். அதற்கு சிகிச்சை தருவது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிக்கலானது என்றார்கள்.

எனவே திரையரங்கு களுக்குச் செல்வது, பொதுகூட்டங்களில் பங்கேற்பது, திரளான மாணவர்களுடன் பயிற்சிகள் நடத்துவது, வீட்டு முன் அறையில் 20 பேருடன் நாடகப்பயிற்சி செய்வது, ஏசி டிவி ஸ்டூடியோக்களுக்கு செல்வது எல்லாமே எனக்கு ஆபத்தானவை என்றார் ஒரு மருத்துவர்.

மனிதர்களைக் கைவிட முடியுமா?

இந்தப் பிரியத்தை நான் கைவிட மறுத்துவிட்டேன். தொடர்ந்து பல மனிதர்களை சந்திப்பதும் உறவாடுவதும் உரையாடுவதும் குழுவாகச் செயல்படுவதும் என் பள்ளிக் காலம் முதலான என் பிரியங்களில் ஒன்று. என் மனதுக்குப் பிரியமான இதை நான் செய்ய முடியாமல் போனால், நான் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டு மோசமான நோயாளியாவேன் என்று நான் கருதுகிறேன். அப்போது ஒரு வேளை என் உடல் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், என் மனம் துருப்பிடித்து சிதைந்துபோய்விடும். எனவே இந்தப் பிரியத்தைநான் கைவிடவில்லை. ஞாநி

கடந்த இரு வருடங்களில் மாதம் மும்மாரி வீதம் டிவி நிலையங்களில் கருத்துமாரி பொழிந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் இடங்களுக்குப் பல முறை சென்றேன். நூற்றுக்கணக்கானவர்களுடன் தொடர்ந்து பேசினேன். உறவாடினேன். மிகக் கடுமையான தொற்று ஏற்படும் ஆபத்து உடைய இடங்கள் என்று சொல்லப்பட்ட இரு குடிசைப் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காகச் சென்றேன். எங்கள் ‘பரீக்‌ஷா’ நாடகக் குழு வாராவாரம் சந்தித்துப் பயிற்சிகள் செய்கிறது. பல வெளியூர்களுக்கு சென்று நாடகங்கள் நடத்தினோம். எல்லா இடங்களிலும் என் உணவுக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதேசமயம், மனமலர்ச்சி விரிவடைந்தது. நோயை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் கிறேன்; டயாலிஸிஸை இன்றுவரை தவிர்த்து வருகிறேன்.

சில பிரியங்களை நாம் கடந்து போக வேண்டும். சில பிரியங் களை கடைசி வரை கட்டிப்பிடித்து உடன் வைத்திருக்க வேண்டும். எதை, எப்படி என்ற தேர்வே வாழ்வைத் தீர்மானிக்கும்.

- ஞாநி, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024