Monday, January 4, 2016

சொல்லிக் கொடுக்காத கல்வி!

Dinamani


By உதயை மு. வீரையன்

First Published : 02 January 2016 01:00 AM IST


அண்மைக்காலமாக நிகழும் சம்பவங்களும், அது பற்றி வரும் செய்திகளும் மனதிற்குக் கவலையைத் தருகின்றன. நாட்டு நலனில் ஆர்வமும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர்களுக்கு அத்தகைய வருத்தம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில்தான் நாடும் இருக்கிறது; நாமும் இருக்கிறோம். அதற்குத் தளர்ச்சி ஏற்படுமானால் என்ன செய்வது?
நாடெங்கும் கடந்த ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத் தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் அதிகப்படியாக மகாராஷ்டிரத்தில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்காளத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
மாணவர் தற்கொலையில் மட்டுமல்லாமல் விவசாயிகள் தற்கொலையிலும் மகாராஷ்டிரம் முதலிடம் பெறுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,276 என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.
விவசாயிகளின் தற்கொலையை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்குக் கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. வேளாண்மையில் ஈடுகட்ட முடியாத இழப்பும், கடன் தொல்லையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. "மேழிச் செல்வம் கோழை படாது' என்று கூறப்பட்டாலும், அதையும் மீறி மானமே பெரிதென எண்ணும் மறவர் பெருங்குடி இவ்வாறு மரணத்தைத் தழுவுவது வேதனையானது.
எல்லாம் சரி, சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில் இந்த மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? படிப்பைத் தவிர வேறு நெருக்கடிகள் ஏதும் உண்டா? இல்லை, படிப்பே ஒரு நெருக்கடியாகிப் போனதா? இதுபற்றி இந்தச் சமுதாயம் கவலைப்பட வேண்டாமா?
"பள்ளிப் படிப்பு கூழாங்கற்களுக்கு ஒளியேற்றும்; வைரங்களை ஒளி மழுங்கச் செய்யும்' என்ற மேலை நாட்டு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. இதனையே நமது நாட்டுப்புற மக்கள், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கும் உதவாது' என்று கூறிச் சென்றுள்ளனர். என்றாலும், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்று நமது நீதி நூல் கூறுகிறது.
சங்க இலக்கியமாகிய புறநானூறு கல்வியின் பெருமையைப் போற்றிப் பாடு
கிறது. அதன் தேவையையும் எடுத்துப் பேசுகிறது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'
பல பிள்ளைகளைப் பெற்ற தாயும் கல்வியில் சிறந்தவனையே விரும்புவாள். ஒரே குடியில் பிறந்த பல பிள்ளைகளுள் கல்வி கற்காத மூத்தவனை அரசன் மதிக்க மாட்டான். இளையவனாயினும் கற்றவனையே மதிப்பான்.
வேறுபாடுடைய நால்வகைக் குலத்துள் கீழ் நிலையிலுள்ள ஒருவன் கல்வி கேள்விகளில் வல்லவன் ஆயின் மேல்நிலையிலுள்ளவனும் அவனை மதித்து மரியாதை செய்வான் என்று அக்காலத்திலேயே பாடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கல்வியைப் பயிலும் இக்கால மாணவர் சமுதாயம் வாழ்க்கையை ஏன் வெறுக்க வேண்டும்? உயிர் வாழ ஆசைப்பட வேண்டிய வயதில் தற்கொலையைத் தேர்வு செய்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
மாணவர்களுக்கு மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படுவதற்குக் காரணம் கல்வி வணிகமாக மாறியதுதான் என்று கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். "மாதா பிதா குரு தெய்வம்' என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கல்வி என்பது மனவளமும், பண்பாடும், ஒழுக்கமும் கற்றுத் தருவதுதான் என்ற நிலை மாறி, கல்வி என்பது பணம் பண்ணுவதற்கான புதிய கருவி என்ற நிலை உருவாகிவிட்டது. கல்வி இப்போது கடைச்சரக்காகி விட்டது. முயற்சியும், உழைப்பும் இல்லாமல் வாங்கும் பொருளாக நிலை தாழ்ந்துவிட்டது.
பெற்றோரின் பேராசைக்குத் தீனி போடும் நிலையங்களாகத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
அவர்கள் விரும்பாத பாடத்தை பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இளமைக்கால விளையாட்டு வாழ்க்கையே பறிக்கப்படுகிறது. அவர்களது சிரிப்பும், கும்மாளமும் எங்கே போனது?
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார். "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.
அவர்களது குழந்தைகளாகவே இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் திணிப்பது வன்முறையேயாகும். வன்முறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகள் சுதந்திரமாக வளர்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வின் தோல்வியால் மனமுடைந்து தற்கொலையை நாடுவோர் தொகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கல்லூரிகளில் "ஈவ் டீசிங்' என்னும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் என்று கூறலாம்.
2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவி தைரியலட்சுமியின் சோகம் அனைவரும் அறிந்ததுதான். தமிழ்வழியில் படித்து 92 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் கூறப்பட்ட காரணம் ஆங்கிலம் புரியவில்லை என்ற அவமானம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.
பள்ளி முதல் உயர்கல்வி வரை மாணவியர் பலர் ஆசிரியர்களின் பாலியல் வன்முறை காரணமாகத் தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளும் உண்டு. வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்கள் அவர்களை வாழ்க்கையின் இறுதிக்கே இட்டுச் செல்கிறது.
மாணவர்களின் தற்கொலை மட்டுமல்லாமல் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும், சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1912-ஆம் ஆண்டில் 39,822- ஆக இருந்த சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43,506-ஆக அதிகரித்துள்ளது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 அன்று இது 48,230 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசும், கல்வித்துறையும் தேர்ச்சி விழுக்காட்டை முதன்மைப்படுத்த ஆணைகளை வெளியிடுகின்றன. மாணவர்கள் தண்டிக்கப்படுவதைத் தடைசெய்துவிட்டு, தேர்ச்சி விழுக்காட்டுக்கு கேள்வி எழுப்புகிறது. தலைமையாசிரியரும், பாட ஆசிரியர்களும் தேர்ச்சிக் குறைவுக்குப் பதில் கூற வேண்டும்.
இதனால் மாணவர்களைப் பண்படுத்தக்கூடிய நீதிபோதனை வகுப்புகளும், மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு மற்றும் இசை வகுப்புகளும் இல்லாமல் போய்விட்டன. பொது அறிவை வளர்க்கும் நூலக வகுப்புகளும் இல்லை.
இந்த வகுப்புகள் எல்லாம் பாட வகுப்புகளாக மாற்றப்பட்டு, அவர்களது முறையான வளர்ச்சி பறிக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் மன இறுக்கம் தொடர்பான வடிகால்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.
தற்கொலை என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதல்ல; உணர்ச்சிவயப்பட்டு ஒரு சில நொடிகளில் நடந்து முடியக்கூடியதாகும். அந்த நேரத்தில் அது தடுக்கப்படுமானால் தற்கொலை செய்ய முயன்றவர்கள் தான் செய்ய நினைத்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள், வெட்கப்படுவார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நூறாண்டு காலம் வாழ வேண்டிய இனிய வாழ்க்கையை அற்பக் காரணங்களுக்காக முடித்துக் கொள்ளத் துடிக்கும் மாணவர்கள் தங்களை நம்பியுள்ள பெற்றோரையும், மற்றோரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தேவையற்ற இறப்பையும், இழப்பையும் தடுத்துவிட வேண்டும்.
"ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா?' என்று கேட்கிறார் காந்தியடிகள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. அது தனக்காக மட்டும் வாழும் சுயநலம் கொண்டது அல்ல. தன்னை நம்பியுள்ள மனித சமுதாயத்துக்காக வாழும் பொதுநலம் சார்ந்தது. அதை இடையில் முடித்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதனைச் சொல்லிக் கொடுக்காத கல்வியை என்னென்பது?
பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார், "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024