ஒருவர் தகுதி படைத்தவர் என்றால், அவருக்கு வேலை நியமனத்துக்கான உத்தரவு வீடு தேடி வரும். ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை இது. இந்த புதியமுறை ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசாங்க பணிகளோடு நின்று விடக்கூடாது, மாநில அரசுகளும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றாத இண்டர்வியூ முறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். குரூப்–3 மற்றும் குரூப்–4 என்பது இளநிலைப்பணிகள்தான். இந்த பணிகளுக்குத்தான் ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குமேல் உள்ள பணிகள் அதிகாரிகள் பணிகள். எனவே, இந்த குரூப்–3, குரூப்–4 பணிகளுக்குத்தான் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். புதுமை இந்தியாவை படைக்கப் போகும் நுழைவு வாயில் இந்த பணிகள்தான்.
பள்ளிக்கூட படிப்பு காலத்தில் இருந்தே நான் படித்து முடித்தவுடன், இந்த வேலைக்குத்தான் போவேன் என்று ஒரு இலக்கோடு மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடருவார்கள். அப்போது தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும்வரை அந்த லட்சியத்தோடு இரவு–பகலாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். படித்து முடித்து வேலைக்கு முயற்சிக்கும் போது, தகுதியுள்ளவனுக்கு வேலை கிடைக்காமல் பணம் கொடுத்து, சிபாரிசு பெற்று தகுதி இல்லாதவன் அந்த பணிக்கு தேர்வானால், அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். தகுதியற்றவனுக்கு வேலை என்பதோடு முடிந்து விடுவது இல்லை. பணம் கொடுக்க வசதி உள்ளவனுக்கே வேலை என்று வேலைவாய்ப்புகள் விலை பேசப்பட்டால், அரசு நிர்வாகத்தில் ஆற்றல் இல்லாமல் போய்விடும். இதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து வேலைக்கு சேருபவன் கை சும்மா இருக்காது. வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வரை அவன் லஞ்சம் வாங்கிக் கொண்டே இருப்பான். அவனால் அவன் பணியாற்றும் அலுவலகமே ஊழலின் ஊற்றுக்கண்ணாகி விடும். அந்த வகையில், தகுதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயமும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக் கூடாது என்று லஞ்சத்தை எதிர்ப்போரும் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறார்கள். ஆனால், வெறும் மதிப்பெண்கள் மூலமும், எழுத்துத்தேர்வு மூலமும் ஒருவரது திறனாய்வை, உடனடி முடிவெடுக்கும் ஆற்றலை, நடத்தையை, தோற்றத்தை, உடல் திறனை கண்டுபிடிக்க முடியாதே என்று சொல்வோரும் உண்டு. ஆனால், ஒவ்வொரு பணியிலும் தகுதி காண்பருவம் என்று அதிகபட்சம் 2 ஆண்டுகள் உண்டு. அந்த காலகட்டத்தில் ஒருவரது பணி நிறைவளிக்க வில்லையென்றால், அவரை நிறுத்திவிட முடியும். எனவே, இந்த புதியமுறை பலனளிக்கக்கூடியதே, இதன் வெற்றியைப் பார்த்து மாநில அரசு பணிகளிலும் பிரதமர் வேண்டுகோளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment