Wednesday, January 20, 2016

தீர்வு காணுமா தேர்தல் ஆணையம்?

Dinamani



By எஸ். ஸ்ரீதுரை

First Published : 19 January 2016 01:37 AM IST


தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் கூப்பிடு தூரத்தில் காத்திருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுவிடும்.
அதற்கு முன்னர், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சில விஷயங்களை நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப் படவுள்ள அரசு ஊழியர்களின் நலன் குறித்ததான நினைவூட்டல்களே அவை.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் போதே அத்தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் எத்தனை அலைக்கழிப்புகளுக்கு உள்ளானார்கள் என்பதைப் பற்றிய செய்திகளும், விவாதங்களும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தேர்தல் பணிக்கெனத் தேர்வு செய்யப்படும் ஊழியர்களின் பரிதவிப்புகள் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்போதே உயிர்பெற்று விடுகின்றன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் எடுப்பது ஒரு புறம் என்றால் அவர்களுக்கான தேர்தல் பணியிட ஆணை வழங்கப்படுவது இன்னொரு சங்கடம்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் அவர்களுக்குப் பரிச்சயமான இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணி புரிந்தால் அது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நியாயமானதுதான்.
அதற்காக ஒவ்வொருவரையும் நூறு, நூற்றைம்பது கிலோ மீட்டர் தள்ளியுள்ள வாக்குச்சாவடிகளுக்குத் தூக்கியடிப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.
இது போதாதென்று, சில தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் ரகசியம் காப்பதற்கென்று வேறொரு காரியமும் செய்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்கான கடைசி பயிற்சி வகுப்பின்போது இன்னின்ன ஊழியருக்கு இன்னின்ன வாக்குச்சாவடி என்று அறிவித்துவிட்டுப் பின்பு வழங்கப்பட்ட ஆணையில் வேறொரு ஊரிலுள்ள வாக்குச்சவடியின் பெயர் இருந்ததாம்.
வாக்குச்சாவடி ஊழியர்கள் தங்குவதற்கான தனிப்பட்ட ஏற்பாடு எதனையும் தேர்தல் ஆணையமோ அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளோ செய்யாத நிலையில், முதலில் கூறப்பட்ட இடங்களில் தாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்ட ஊழியர்கள், வாக்குச்சாவடி ஒதுக்கீடு ஆணை பெற்ற பின்பு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள மிகவும் சிரமப்பட்டுப் போயினர். இனியாவது இதையெல்லாம் சரி செய்யவேண்டும்.
தேர்தல் ஊழியர்கள் முழுவதுமாக இரண்டு நாள்களாவது தங்கள் குடும்பத்தை விட்டு வெளியே வந்து இந்தப் பணிகளைச் செய்யவேண்டியிருக்கிறது.
அவர்களுக்கான உணவு, தங்குமிடம், குளிக்க மற்றும் இயற்கை உபாதைகளுக்கான ஏற்பாடுகளை, அவர்களை வேலை வாங்கும் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும்.
பெண் ஊழியர்கள் இயற்கை உபாதைகள் குறித்த மன அழுத்தங்களும், சங்கடங்களும் இன்றித் தேர்தல் பணி ஆற்றிடத் தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவை எல்லாம் போதாதென்று, தேர்தல் பணிகளுக்கென பட்டியல் செய்யப்படும் அரசு ஊழியர்கள் தத்தமது உடல் நிலை அல்லது குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக அப்பணியில் ஈடுபட முடியாத நிலையைத் தெரிவித்தால், அதனை ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்கவும் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தேர்தல் பணியை மறுத்தால் உடனடியாகப் பணி இடை நீக்கம் செய்யப்படும் என்பதும் உண்மைதானா என்பதை ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் பணிகளில் முறைகேடுகளுக்காக தண்டனை வழங்கினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் பணிக்கு வரமுடியாததற்கே தண்டனை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நிற்க. தமிழகத்தில் இப்போதுதான் பெருமழை பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ள பாதிப்புக் கணக்கீடுகளில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பணிகள் முழுவதுமாக முடிவதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்.
மூடியிருந்த பள்ளிகள் இப்போது செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், ஆசிரியர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது. மேலும், தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. தனி நபர் மசோதா சமர்ப்பித்திருக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நமது இந்தியத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளுக்கு இப்போதிலிருந்தே முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களைக் குறைந்த அளவிலும், மாநில - மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்களைப் பெருமளவிலும் கொண்டு, சட்டப் பேரவைத் தேர்தலைச் செம்மையுற நடத்திக்கொள்ள வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து முதலியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அரசியல் கட்சியினரின் உள்ளம் கவர்ந்த தேர்தல், அதற்கென்று பணியாற்றும் அரசு ஊழியர்களையும் மனமுவந்து ஈடுபடச் செய்யும் நிகழ்வாக மலரவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024