By ரமாமணி சுந்தர்
First Published : 30 December 2015 01:02 AM IST
திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைப் பேறு கிட்டாத தம்பதிகளுக்கு இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technology) வரப்பிரசாதமாக விளங்குகின்றன. குழந்தையின்மை மருத்துவத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த கண்டுபிடிப்பு, IVF (in vitrofertilization) எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் தொழில்நுட்பம்.
1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம், IVF செயற்கைக் கருவூட்டல் முறையைப் பயன்படுத்தி உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பிறக்க வைத்தார் இங்கிலாந்து நாட்டு மகப்பேறு மருத்துவர் பேட்ரிக் ஸ்டேப்டேயும், விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சும். (இவர் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்).
இந்த மருத்துவ அதிசயம் நடந்த இரண்டே மாதங்களில், இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை நமது நாட்டில் பிறக்கச் செய்து சாதனை புரிந்தார் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் முகோபாத்யாய்.
செயற்கைக் கருவூட்டல் முறையில், பெண்ணின் சினைப்பை முட்டை தூண்டப்பட்டு, அது வெளியே எடுக்கப்பட்டு, ஆண் விந்து அணுவுடன் சேர்த்து கருவை உருவாக்கி, உருவான கருவை குறிப்பிட்ட நாள்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்து, பிறகு வளர்ந்த கரு தாயின் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது.
இந்த செயற்கைக் கருவூட்டல் முறையின் வெற்றிதான், ஒரு பெண்ணின் கருப்பைக்கு குழந்தையைப் பத்து மாதங்கள் சுமப்பதற்கான சக்தி இல்லாமல் இருந்தால்,அல்லது வேறு ஏதாவது மருத்துவச் சிக்கல் இருந்தால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, அவள் மூலம் குழந்தையைப் பெற முடியும் என்பதைச் சாத்தியமாக்கியது. இதுவே, வாடகைத் தாய் என்ற கருத்திற்கு வித்திட்டது.
1986-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாடகைத் தாயின் மூலம் உலகின் முதல் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது. இந்தியாவில், 2001-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் இந்திய தம்பதியருக்காக வாடகைத் தாய் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் வாடகைத் தாய் சேவை மையங்கள் அதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன
தற்பொழுது தில்லி, மும்பை, சென்னை போன்ற எல்லா பெரு நகரங்களிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களுக்கும், வாடகைத் தாய் சேவைக்கும் பஞ்சமில்லை என்றாலும், நமது நாட்டில் வாடகைத் தாய் சேவைக்கு பிரசித்தி பெற்ற இடம் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் எனும் ஊர்தான்.
நாட்டில் பால் தட்டுப்பாடு என்பதை அறவே மறக்கச் செய்து வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட ஆனந்த், இன்று பல தம்பதியருக்கு, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, குழந்தை பாக்கியத்தை அளித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. வாடகைத் தாய்களின் சுற்றுலாத் தலமாக மாறி விட்ட ஆனந்த், கடந்த பத்தாண்டுகளில், செயற்கைக் கருவூட்டல் மையங்கள், வெளிநாட்டினர் தங்குவதற்கான விடுதிகள், உணவகங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சுமார் இரண்டு லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆனந்தில், 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் துறையில் உள்ளனர். சுமார் ஆயிரம் பெண்மணிகள் தங்கள் சினை முட்டைகளைத் தானமாக வழங்குவதிலும், தங்கள் கருப்பையை வாடகைக்கு விற்று குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதிலும், பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையில் தாய்ப் பால் புகட்டி வளர்ப்பதிலும், ஈடுபட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான ஆமிர் கானும், ஷாருக் கானும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். இப்படி ஒரு சில இந்தியர்களும் வாடகைத் தாய்களின் சேவையை நாடுகிறார்கள் என்றாலும், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில், வாடகைத் தாயின் சேவையை நாடும் உள்நாட்டு தம்பதியரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களும் மட்டுமல்லாது, அயல் நாட்டவர்களும் வாடகைத் தாயைத் தேடி இந்தியாவிற்கு வருவதற்கான காரணம் என்ன?
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், வேறு ஒரு பெண்மணி மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை, குறிப்பாக வர்த்தக ரீதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதை சட்டம் தடை செய்கிறது.
நமது நாட்டில் வாடகைத் தாய்களின் மூலம் குழந்தை பெறுவதற்கு தடையொன்றும் இல்லை. இதுவே பல்வேறு நாடுகளிலிருந்து தம்பதிகள் இந்தியாவை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணம். நமது நாட்டின் நவீன மருத்துவ தொழில்நுட்பமும், ஆங்கிலம் பேசும் மருத்துவர்களும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டினரை இந்தியா ஈர்ப்பதற்கான மேலும் சில காரணங்கள்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், நமது நாட்டில் பணத்திற்காக தங்கள் சினை முட்டைகளை தானம் செய்வதற்கும், கருப்பையை வாடகைக்கு விடுவதற்கும் பல ஏழை, எளிய பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, வாடகைத் தாயாக செயல்பட்ட பெண்மணிகளில் பலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலான வாடகைத் தாய்கள், வீட்டு வேலை அல்லது கட்டடப் பணிகளில் கூலி வேலை செய்பவர்கள் அல்லது செயற்கைக் கருவூட்டல் மருத்துவ மனைகளில் பணியாற்றும், செவிலித் தாய்கள்.
ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களுக்காகக் குழந்தையைச் சுமக்கும் பெண்ணிற்கு நான்கு அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரையில் ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும். இதைத் தவிர, பிரசவம் ஆகும் வரையில் மாதா மாதம் சத்துள்ள உணவு, மருந்து மாத்திரைகள், மற்றும் பிரசவத்திற்கான செலவு என்று எல்லா செலவுகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தம்பதியரே கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவச் செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.
தற்பொழுது நமது நாட்டில் வாடகைத் தாய் வர்த்தகம் ஆண்டொன்றிற்கு சுமார் 900 கோடி ரூபாயிலிருந்து 1,300 கோடி வரையில் புழங்கும் தொழிலாக வளர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி, கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களுக்கு, சமீபத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வர்த்தக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கவில்லை என்று அறிவித்ததோடல்லாமல், அயல் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் தடை செய்துள்ளது. இனப் பெருக்கத்திற்கு உதவும் நாட்டிலுள்ள எல்லா தொழில்நுட்ப மையங்களுக்கும் சென்ற அக்டோபர் 27-ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தடை உத்தரவு அனுப்பியுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறுவதில், குழந்தையை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான கடவுச் சீட்டு, விசா போன்றவைகளைப் பெறுவது போன்ற பிரச்னைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
வாடகைத் தாய் தங்களுக்காக பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்த அந்த பத்து மாத காலத்திற்குள், அதன் ஜப்பானியப் பெற்றோர் விவாகரத்து செய்து விட, தனக்கு அக்குழந்தை வேண்டாம் என்று தாய் முடிவெடுக்க, அந்தப் பெண் குழந்தையை தந்தை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதி அளிக்காததால் தர்ம சங்கடமான நிலைமை உருவாகியது அனைவரும் அறிந்ததே!
பணம் படைத்த அயல் நாட்டினர், நமது ஏழை எளியப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. நமது பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உடலுக்கு கூறு விளைவித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்தத் தொழிலில், வாடகைத் தாய்கள், குழந்தையின் பெற்றோர்கள் போடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு குழந்தையை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களாகவும், குழந்தைகள் விற்பனைப் பொருளாகவும் ஆகி விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணிற்கும், பணத்திற்காக குழந்தையைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பு பெண்களும் பயனடைகிறார்களே, இதில் என்ன தவறு? என்று கேட்கிறார்கள் மற்றொரு சாரார்.
இன்று நாட்டில் பெருகிவரும் மருத்துவச் சுற்றுலாவில், வாடகைத் தாய் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலை தடை செய்ய வேண்டுமா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை.
செயற்கைக் கருவூட்டல் மற்றும் வாடகைத் தாய் தொழில்களுக்கான விதிமுறைகளை எடுத்துரைக்கும், இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) மசோதா 2014, இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுள்ள விதி முறைகளைக் கடைப்பிடித்து, வாடகைத் தொழிலை, ஒழுங்குபடுத்தி, வெளிநாட்டவர் வாடகைத் தாயைப் பயன்படுத்துவதற்கானத் தடையை நீக்கினால், வாடகைத் தாய்களின் சேவையின் மூலம் பலரும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை.
தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.
No comments:
Post a Comment