By இரா. கதிரவன்
First Published : 26 January 2016 01:23 AM IST
"நான் முதன் முதல் வாங்கிய டெரிலின் சட்டை, பதினைந்து வருடம் ஆகியும், கிழியவில்லை, நிறம் மாறவில்லை'.
- இப்படிப் பல பொருள்கள், வெகு காலம் வரை உழைத்தன என்பதை பெருமையாக பலரும் பேசுவதை முன்பெல்லாம் கேட்பதுண்டு. அன்றையப் பொருள்கள் வெகு நாள் உபயோகத்தில் இருப்பது என்பது பெருமையாக கருதப்பட்டது.
ஆனால், இன்றைய நிலை வேறு. இன்றோ, வாடிக்கையாளர்களுக்கு, சந்தையில் ஏராளமான பொருள்கள் குவிக்கப்பட்டு, அவர்களைத் திக்குமுக்காட செய்கின்றன.
பொருள்களை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் - உபயோகித்து விட்டு தூக்கியெறியும் - use and throw, கலாசாரத்துக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது, அவசியத்தின் அடிப்படையில் வாங்குவது என்ற நிலை மாறி, ஆடம்பரத்தின் அடிப்படையில் வாங்குவது என்பதும், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்ற நிலை மாறி, அனாவசியப் பொருள்களையும் வாங்கி, அவற்றை அத்தியாவசியம் என்று கூறிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்த சமயம், இந்த நாட்டு கதவுகள், பிற நாட்டினருக்காக முதலீடுகளுக்கும் - வர்த்தகத்துக்கும் சற்று விசாலாமாக திறந்து விடப்பட்டன. அதன் விளைவுகளில் நல்லவையும் இருந்தன, சில பாதிப்புகளும் ஏற்பட்டன.
சந்தையில் அதிகப் பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது - மக்கள் அவற்றை வாங்குவது - அதிக வியாபாரம் - அதிக பணச் சுழற்சி - அதிக லாபம் - அதிக முதலீடு - அதிக வேலை வாய்ப்பு - மேலும் வாங்கும் சக்தி - என்ற புதிய சுழற்சியை உண்டு பண்ணியது...
வாடிக்கையாளருக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, அவரை வாங்க வைக்க வேண்டும் என்பதில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பர யுக்திகளைக் கையாளுகின்றன. அதிலும் குறிப்பாக, சிறுவர் - சிறுமியரை குறி வைத்து செய்யப்படும் விளம்பரங்கள் ஏராளம்.
இருநூறு ரூபாய் மதிப்பிலான ஓர் ஆரோக்ய பானத்துடன், இரண்டு ரூபாய் பெறுமான ஒரு சிறு பொம்மை இலவசம் என விளம்பரம் செய்யப்படும்பொது, சிறுவர், சிறுமியர் பெற்றோரை,அந்த பானத்தை வாங்க நச்சரிக்கும் சூழலைஉண்டு பண்ணுகிறது.
டீத்தூள் அல்லது சோப்புக் கட்டி வாங்கினால், லண்டனில் நடக்க இருக்கும் கிரிக்கட் பந்தயத்துக்கு குலுக்கல் முறையில் டிக்கட் இலவசம் அல்லது திரைப்பட கதாநாயகனோடு ஒரு வேளை உணவு உண்ணலாம் என்பன போன்ற பிதற்றல்கள், வியாபாரத்தை அதிகப்படுத்த நடைபெறுகின்றன. இவற்றைவிட கொடுமையான விஷயம், நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியும், அதன் விளைவாக ஏற்படும் விளம்பர யுத்தமும் ஆகும்.
இதில் சோகமான உண்மை என்னவென்றால், இந்த விளம்பர யுத்தத்துக்கு அந்த நிறுவனங்கள் செய்யும் பெரும் செலவு முழுதும், வாடிக்கையாளர்களான நமது தலையில்விழுகிறது என்பதுதான்.
இதன் இன்னொரு அம்சம், இத்தகைய விளம்பரங்கள், மனிதனின் - உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றையே மாற்றி விடுகின்றன. வீடுகளில் செய்யப்பட்ட எளிய உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள் இப்போது மறக்கப்படுகின்றன. உடலுக்கு உபாதைத் தரும் பண்டங்களை வாங்க வேண்டும் என்று குழந்தைகள் நச்சரிக்கும் நிலைதான் எஞ்சுகிறது.
கடன் வாங்கும் பழக்கம்: சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்ய மனிதன் நுழைய முடியாது என்று இருந்த வங்கிகள் இன்றைக்கு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டன. EMI - என்ற ஒரு கோட்பாடு, மாத சம்பளக்காரர்களை, எளிதான தவணை முறையில் பொருள்களை வாங்க, கடன் பெற, வங்கிகள் பெரும் உதவி செய்கின்றன.
ஆனால், சற்று பலகீனமான மன நிலையில் உள்ளவர்கள், இவற்றை சரிவரப் பயன்படுத்தாது, சக்திக்கு மீறி கடன் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகி, ஆயுளுக்கும் கடன்காரர்களாக இருக்கின்றனர்.
தங்களது தேவைக்குப் பொருள்களை வாங்குவது போய், தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் வாங்குவதை எல்லாம் தாமும் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தம்மைத் தாமே தள்ளிக் கொண்டு விடுகின்றனர்.
இதனால், விட்டில் பூச்சிகள் எப்படி விளக்கில் போய் விழுந்து விடுமோ,அப்படி சராசரி மனிதன், கடனில் சிக்கிக் கொள்ளுகிறான். மேலும், கடன் அட்டைகள் (credit cards) உபயோகமும், பலரது நடவடிக்கைகளை மாற்றிவிட்டன.
வங்கிகள், தங்களது நிலையை உயர்த்திக் கொள்ள, கடன் அட்டைகளை தாராளமாக - எளிதாக கிடைக்கும்படி செய்கின்றன. அதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் கடன் அட்டைகளை வாங்கிப் பின்னர், அதற்கு அடிமையாகி, கடன் - வட்டி - அதிக கடன் - அதிக வட்டி என்ற சுழலில் சிக்கிக் கொண்டு - பலர், ஓடி ஒளிந்து கொண்டும், இருப்பதை இழந்தும் -நிம்மதியை தொலைக்கும் நிலையில் இருப்பதும் கண்கூடு.
நிறுவனங்கள் தமது வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங்களில் ஈடுபடுகின்றன. வங்கிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க கடன் கொடுத்தல், கடன் அட்டைகள் ஆகியனவற்றை ஊக்கப்படுத்துகின்றன. அவற்றை குறை கூறுவது நமது நோக்கம் அல்ல, அது அவசியம் அற்றதும் கூட...
ஆனால், எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னரும், அப்பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்கும் சக்தியும் - அதற்குரிய பணத்தை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தும் சக்தியும் உள்ளதா, அதனை வாங்குவதால் வேறு ஏதேனும் இழப்பு ஏற்படுமா, அந்த இழப்பு அவசியம்தானா என்று சிந்தித்து, நமது சக்திக்கு ஏற்பவும் - தேவைக்கு ஏற்பவும் பொருள்களை வாங்குவதை பழக்கமாகக் கொண்டு, கடன் சூழலுக்குள் சிக்காது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
No comments:
Post a Comment