By மாலன்
First Published : 18 January 2016 03:04 AM IST
கடவுள் முன் வந்து குழுமின காளைகள். கண்ணைத் திறந்த சிவன் என்ன என்றார். பால் போல் வெண்மேனியும், பாய்ந்தோடும் கால்களில் கருமையும் கொண்ட காளை, "தாங்க முடியவில்லை, தலைவா!' என்று தழுதழுத்தது. அந்தி வானின் செந்நிறம் கொண்ட இன்னொரு காளை காப்பாற்றுங்க எனக் கதறியது.
விண்மீன்களைப் போல வெண் புள்ளிகள் கொண்ட மற்றுமொன்று உழைக்கச் சலிக்கவில்லை, ஆனால், உதையைச் சகிக்க முடியவில்லை என்றது. சிவன் சிகையில் சூடிய பிறையைப் போல கொம்புகள் கொண்ட வேறோரு காளை, நீங்கள் செய்த ஏற்பாடுகள் நிலைக்க வேண்டுமானால் உடனே தலையிட வேண்டும். உதவாது இனித் தாமதம் என்று செருமியது.
"விளக்கமாகச் சொல்லுங்கள். என்ன பிரச்னை உங்களுக்கு?' என்று வினவினார் வெள்ளிப் பனிமலையில் வீற்றிருந்த விமலன். நீங்கள் ஏன் எங்களை பூமிக்கு அனுப்பினீர்கள் என்று கேட்டது வெண்மேனிக் காளை.
காரணத்தைத் தேடிக் கண்டெடுக்க வேண்டிய அவசியமில்லை. நெடுநாளாகிவிட்ட போதிலும் சிவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. இன்று காளைகள் கூட்டமாக வந்து நிற்பது போல் அன்று மனிதர்கள் மந்தையாக வந்திருந்து மன்றாடினார்கள்.
உமையோடு அமர்ந்திருக்கும் இமயத்தரசே, ஈசனே, உலகைப் படைத்தாய், உலகில் எம்மையும் படைத்தாய், எமக்கு உணவையும் படைத்தாய். ஓடி ஓடி அந்த உணவைத் தேடிக் களைத்த போது, நாங்களே எங்களுக்கான உணவை உருவாக்கிக் கொள்ளும் வேளாண் தொழில்நுட்பம் கற்பித்தாய். எல்லாவற்றுக்கும் நன்றி.
ஆனால், தனித்து நின்று உழுது பயிரிட, நிமிர்ந்து குனிந்து நீரிறைக்க, கதிர் மிதித்து மணி பிரிக்க, விளைந்ததை வீட்டுக்கு எடுத்துச் செல்ல எங்களால் முடியவில்லை. உதவி வேண்டும். எங்கள் பணிகளில் உதவ உடலில் வலுவும், உழைக்கும் திறமும் கொண்டவர் ஒருசிலரை உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று மனிதக் கூட்டம் மன்றாடியாது.
இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார் சிவன். இங்குமங்கும் உலாவினார். என்ன செய்யலாம்? என்றார் பார்வதியைப் பார்த்து. இவனை அனுப்பி வையுங்கள் என்றாள் உமை, அவர் அமர்ந்திருந்த காளையைக் காட்டி. அம்பலவாணர் அந்த யோசனையை ஏற்றார்.
மனிதர்களைப் பார்த்து சிவன் சொன்னார். இதோ எனக்குப் பிரியமான இவனை உங்களுக்கு உதவ அனுப்பி வைக்கிறேன். பணியாளாக அல்ல, தோழனாக. எத்தனை கடினமான வேலை கொடுத்தாலும் சலிக்காமல் செய்து முடிப்பான். ஆனால் அவன் வேலையாள் அல்ல. நண்பன். மனித குலத்திற்கு இறைவன் கொடுத்த நண்பன்.
கண்போல் கவனித்துக் கொள்ளுங்கள். காரியம் ஆக வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமில்லாமல் ஆசையோடும் நேசத்தோடும் அன்பு செய்யுங்கள். உங்கள் உற்பத்தியில் கொஞ்சம் உண்ண அவனுக்கும் கொடுங்கள். இலவசமாக அல்ல. உணவாக நீங்கள் கொடுப்பதை உரமாக அவன் திருப்பித் தந்து விடுவான் என்று சொல்லி மனிதனுக்கு உதவக் காளையை அனுப்பி வைத்து நெடுநாளாகிவிட்ட போதும் அதை நெஞ்சம் மறக்கவில்லை.
உதவி செய் என்று அனுப்பிய அந்தக் காளையின் சந்ததிகள் இன்று கண்ணீரோடு வந்து கதறுகின்றன.
"எங்களுக்குச் சரியான வசிப்பிடம் கிடையாது. ஒதுக்கிய இடத்தையும் ஒழுங்காகச் சுத்தம் செய்வது கிடையாது. சேறும் சகதியும், சாணமும் கூளமும் நிறைந்த இடத்தில்தான் நிற்க வேண்டும். படுக்கையும் உணவும் அங்கேயே. எளிதில் நகர்ந்து விட முடியாதபடி எங்களைக் கயிற்றால் பிணைத்திருப்பார்கள்.
அன்றாடம் ஆனந்தக் குளியல் அவர்களுக்கு. எங்களுக்கோ என்றோ ஒரு நாள் அந்த சுகம். அதுவும் அவர்களுக்கு நேரமிருந்தால். நாங்கள் உழைப்பதற்குச் சுணங்குவதில்லை. ஆனாலும் உதைபடாமல் இருப்பதில்லை. சாட்டைகள் எங்களைச் சாடுகின்றன. காயம் பட்டால் உடனே கவனிப்பதில்லை.
மூச்சு விடத்தானே மூக்கைக் கொடுத்தீர்கள். அதில் அவர்கள் கயிற்றை நுழைத்து மூர்க்கமாக இழுக்கிறார்கள். வயதேறி வலிமை குறைந்தால் கொலை செய்யவும் அவர்கள் கூசுவதில்லை. தோலை உரித்துக் காலில் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள், நாங்கள் செய்த உதவியெல்லாம் ஞாபகம் வருவதில்லை.'
பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தார் கடவுள். சரி, நான் வந்து பார்க்கிறேன் என்றார். மனிதர்களிடம் பசப்பல் வார்த்தைகளைக் கேட்டுப் பழகியிருந்த காளைகள் கடவுளின் சமாதானத்தை எளிதில் ஏற்க மறுத்தன.
நண்பன் என்று சொல்லி அனுப்பினீர்கள். தோழனாக நடத்தாவிட்டாலும் தொண்டூழியம் செய்யத் தயார். ஆனால், அடிமைகளாக இருக்க மாட்டோம் என்று உறுதியான குரலில் ஒலித்தன காளைகள்.
"சரி. நான் வந்து பார்க்கிறேன்' என்றார் மகாதேவன் மறுபடியும்.
எப்போது? என்று காலத்தை அறிவிக்கச் சொல்லிக் காளைகள் கேட்டன. கார்த்திகை மாதம், அமாவாசையன்று என்றார் பிறை சூடிய பெருமான். பெருமூச்செறிந்தபடி பிரியாவிடை பெற்றன காளைகள்.
இது கற்பனையல்ல. கதையல்ல. ஒடிஸாவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தவரான குர்மி மக்களின் நம்பிக்கை. கார்த்திகை அமாவசையன்று மனிதர்கள் காளைகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கக் கடவுள் வருகிறார் என்ற நம்பிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் பந்தன என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அந்தப் பண்டிகை நம் பொங்கலைப் போலிருக்கிறது; அதுவும் மூன்றுநாள் திருவிழா.
கடவுள் வருகிறார் என்பதால், பண்டிகை நெருங்கும் நேரத்தில் வீடுகளைச் சுத்தம் செய்து வெள்ளையடிக்கிறார்கள். முக்கியமாக மாடுகளின் தொழுவங்களை. தளம் எங்காவது பெயர்ந்திருந்தால் செப்பம் செய்கிறார்கள். சிலர் மண்ணைக் குழைத்து மெழுகி முழுத் தளத்தையும் புதுப்பிப்பதும் உண்டு. அந்தக் களிமண்ணை மட்டி என்றழைக்கிறார்கள்.
சிவப்பு, வெள்ளை எனப் பலவண்ணங்களில் மட்டியை எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். லால் மட்டி எனப்படும் செம்மண்ணை தரைக்கும், தூத்தி மட்டி என்ற பால் வண்ணக் களிமண்ணை,பெரும்பாலும் சுவருக்கும் பயன்படுத்துகின்றனர்.
வாசலில் மட்டுமல்ல, சுவர்களிலும் மாக்கோலமிடுகிறார்கள். காவியோ, செம்மண்ணோ கொண்டு அதைச் செம்மைப்படுத்துவதில்லை. அதற்கு பதில் குங்குமத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
பண்டிகையின் முதல் நாள் ஜாக்ரண் (விழிப்பு, கண்காணிப்பு). மாடுகளைப் பராமரிப்பவர் அல்லது வீட்டின் மூத்த உறுப்பினர் மாட்டை அருகில் இருக்கும் ஆற்றுக்கு அல்லது குளம் குட்டைக்கு அழைத்துச் சென்று நன்கு குளிப்பாட்டுவார். குழந்தைகளும் கூடமாட உதவுவார்கள். ஆனால் குழந்தைகளின் நோக்கம் உதவுவது அல்ல. தண்ணீரில் இறங்கிக் கும்மாளம் போடுவது. அன்று அதைப் பெரியவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பெண்கள் டோங்கி என்ற மூங்கில் கூடையில் புத்தரிசி எடுத்துச் சென்று ஆற்றில் அதைக் கூடையிலேயே வைத்து அலசுவார்கள். இதற்காக பண்டிகைக்கு முன், மூங்கில் கூடை, புதுப் பானை, அதற்கு மண்ணால் ஆன மூடி, வெல்லம், எண்ணெய், புடவை, வேட்டி ஆகியவற்றைக் கிராமச் சந்தையில் (பேரம் பேசி) வாங்கி வந்திருப்பார்கள். அப்படி அலசிய அரிசியை, ஈர உடைகளோடு வீடு திரும்பி, வெட்ட வெளியில், நிழலில் உலர்த்துவார்கள். பின் அவற்றைத் திரித்து, அந்த மாவில் விளக்குகள் செய்வார்கள். அந்த விளக்குகளால் வீடு முழுக்க அலங்கரிப்பார்கள்.
பின் அந்த விளக்குகளைச் சேகரித்து, பொடி செய்து, புதுப்பானையில் இட்டு, பிட்டா என்று ஒரு "கேக்' செய்வார்கள். பிட்டாவில் இரண்டு வகை. இனிப்பான பிட்டா, இனிப்பற்ற பிட்டா. (இனிப்புப் பிட்டா இன்னும் நெஞ்சில் இனிக்கிறது). குளித்து விட்டு வந்த காளைகளுக்கு ஆண்கள், நெற்றியில் திலகமிட்டு, மாலை சூட்டி அலங்கரிப்பார்கள்.
அன்று இரவு கிராமம் முழுக்கப் பொதுத் திடலில் கூடி பாடல்கள் பாடி, நடனமும் ஆடுவார்கள். அரிசியில் தயாரான மதுவும் பரிமாறப்படும்.
இரண்டாம் நாள் கோஹல் பூஜா. அதாவது உழவுக் கருவிகளுக்கான பூஜை. குடும்பத் தலைவர் காலையில் ஆற்றில் குளித்துத் தனது நிலத்திலிருந்து சில கதிர்களை அறுத்து வருவார். அப்படி வரும் போது அவர் யாருடனும் பேசக் கூடாது. வீடு திரும்பியதும், அந்தக் கதிரின் வைக்கோலைத் திரித்து ஒரு மாலை போலச் செய்வார். அது காளைகளுக்கு அணிவிக்கப்படும். வேளாண் கருவிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு துளசி நீர் தெளிக்கப்படும்.
மூன்றாம் நாள், காளைகளுக்குத் திருஷ்டி கழிக்கும் நாள். ஊர் நடுவே, அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பத்தின் நடுவே காளைகளைக் கொண்டு வந்து கட்டி, பெண்கள் அந்தக் காளைகளை அலங்கரித்து, அவற்றின் மீது அரிசி அல்லது சோற்றை வீசிப் பின் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள். ஆண்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு காளைகளைப் புகழ்ந்து பாடுவார்கள். அதன் பின் எல்லோரும் சேர்ந்து, நம்மூரில் குலவையிடுவது போல, ஒலி எழுப்புவார்கள்.
ஆட்டம், பாட்டம், அலங்காரம், விருந்து என மூன்று நாள்கள் அமர்க்களமாகக் காளைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் அங்கு சமர்க்களம் கிடையாது. அதாவது- அங்கு ஜல்லிக்கட்டு கிடையாது.
"மனிதர்களைப் பார்த்து சிவன் சொன்னார்: எனக்கு பிரியமான காளையை உங்களுக்கு உதவ அனுப்பி வைக்கிறேன். பணியாளாக அல்ல, தோழனாக.'
No comments:
Post a Comment