வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?
l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.
l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.
l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.
l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.
l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.
l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.
l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.
l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
(அடுத்த முறை: ஏன் இந்த அழுத்தம்?)
தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / www.snehaindia.org
மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org
இலவச ஆலோசனை
புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
No comments:
Post a Comment