தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "இந்த அறிவிக்கை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேதியில் இருந்து கரடி, குரங்கு, புலி, காளை ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ அல்லது பழக்கப்படுத்தி வித்தையில் ஈடுபடுத்தவோ கூடாது.
இருப்பினும், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் எருதுவண்டி போட்டிகள் ஆகியவற்றுக்காக காளைகளை பழக்கப்படுத்தி, காட்சிப்படுத்த அரசு அனுமதிக்கிறது.
அதேவேளையில் எருதுவண்டி போட்டிகளை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவான சரியான வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டை பொருத்தவரை வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் 15 மீட்டர் தூரத்துக்குள் அடக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என்று ஒவ்வொரு காளை மாடும் கால்நடை பராமரிப்பு துறையால் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். காளை மாடுகளுக்கு ஊக்க மருந்துகள் வழங்கப்படுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அனுமதி வழங்கி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு விவகாரத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. | முழு விவரம்தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி: ட்விட்டரில் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்