புத்தகக் காதலர்களுக்குப் புத்தகத் திருவிழாக் களைவிட உற்சாகமளிக்கும் நிகழ்வு வேறு ஏது? இதோ சென்னையில் தொடங்கியிருக்கிறது மற்றுமோர் புத்தகத் திருவிழா!
மழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த சென்னை புத்தகக் காட்சி ஏப்ரலுக்குத் தள்ளிப்போனது குறித்துக் கவலை கொண்டிருந்த புத்தகக் காதலர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி! ‘சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா’ என்ற பெயரில் ஓர் புத்தகக் காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தொடங்கியிருக்கிறது.
சமீபத்திய சென்னைப் பெருமழை, வெள்ளத்தின் காரணமாக தங்கள் புத்தகங்களை இழந்து தவிக்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் எத்தனையோ பேர்! அது மட்டுமல்லாமல் இந்த இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து புத்தக விற்பனை மந்தமானதால் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் சொல்ல முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதைத் தொடர்ந்து ‘தி இந்து’ முன்னெடுத்த ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ இயக்கம் தமிழகமெங்கும் பரவி, புத்தக உலகத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. அந்த உற்சாகத்தைத் தொடரும் வகையில் இப்போது தொடங்கியிருக்கிறது ‘சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா’.
250 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் பங்கேற்கி றார்கள். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப் புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
எதுவரை நடக்கிறது?
13-01-2016 அன்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி, இந்த மாதத்தின் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக் காட்சி, வார நாட்களில் (ஜனவரி 14, 18, 19, 20, 21, 22) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் (ஜனவரி15, 16, 17, 23, 24) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
நிகழ்ச்சிகள்
புத்தகக் காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலை இலக்கியம், திரைப்படம், மனிதநேயம் தொடர்பான கருத்தாளர்களின் உரைகள், கருத்தரங் குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவிருக் கின்றன. முக்கியமான எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக் கிறார்கள்.
விருதுகள்
புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (14-01-2016) மூன்று பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் பொன்னீலன், பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன், கவிஞர் செல்ல கணபதி ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி வாழ்த்துரையாற்றியவர் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பொற்கோ தலைமை தாங்கினார்.
சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள்
சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்படுவது இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சம். பத்துப் பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளைத் தேர்ந்தெடுத்தவர்கள் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ச. தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர் ப. திருமாவேலன். கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏக்நாத், எஸ். அர்ஷியா, பாக்கியம் சங்கர், பி.என்.எஸ். பாண்டியன், சா. தேவதாஸ், கல்வியாளர் ச. மாடசாமி, சதீஸ் முத்துகோபால், ப்ரியா தம்பி, பாவண்ணன் ஆகியோரின் நூல்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.
பொங்கல் புத்தகத் திருவிழாவை மையப்படுத்தி ‘ஊர்கூடி ஓவியம் வரைதல்’ எனும் நிகழ்ச்சி 11-01-2016 அன்று நடைபெற்றது. இதனை நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொடங்கி வைத்தார். மூத்த பத்திரிகையாளர் ஞாநி, ஓவியர்கள் விஸ்வம், ஜேகே, மணிவண்ணன், யூமா வாஸுகி ஆகியோர் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு ‘வெள்ளம் தாண்டி உள்ளம் தொடுவோம்’ என்ற தலைப்பில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கான ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.
புத்தக நிவாரணம்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசோக் நகர் அரசு நூலகத்துக்கு இந்தப் புத்தகத் திருவிழா வில் 3,000 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தப் புத்தகத் திருவிழாவில் நுழைவுக் கட்டணம் மூலமாகக் கிடைக்கும் தொகை, சென்னை மழைவெள்ள நிவாரணத் துக்காக ‘முதல்வர் நிவாரண நிதி’க்குக் கொடுக்கப்படும் என்றும் புத்தகக் காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment