By ஆசிரியர்
First Published : 26 January 2016 01:19 AM IST
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவிகள், மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது தற்கொலையாக இருந்தாலும் அல்லது தற்போது பெற்றோர் சொல்வது போல கொலையாக இருந்தாலும், அதற்கான காரணம் கல்லூரியின் செயல்பாடாகத்தான் இருக்க முடியும்.
2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு மத்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம் அங்கீகாரம் அளிக்க மறுத்த பின்னரும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கல்லூரிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கிய பிறகும், இந்தக் கல்லூரி செயல்பட்டது என்பதே தமிழகத்தில் இயங்கும் தனியார் கல்லூரிக் கல்விச் சூழலின் அவலத்துக்கு அத்தாட்சி.
இந்தக் கல்லூரி போதுமான வசதிகள் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்துக்காக, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், இதற்கு வழங்கியிருந்த இணைவுத் தகுதியை 2015-லேயே ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தும்கூட, இக்கல்லூரி நடைபெற்றுவந்துள்ளது. போதிய வசதிகள் ஏற்படுத்தாமல், மாணவிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இக்கல்லூரி மாணவிகள் பலரும் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இந்தக் கல்லூரியைக் குறித்துப் புகார் மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்தத் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும். தனியார் கல்லூரி சார்ந்த பிரச்னை என்பதால் அதில் தலையிட மாவட்ட ஆட்சியர் தயங்கி இருக்கக் கூடும். இந்த மனுவை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அந்தக் கல்லூரி வளாகத்துக்கு சென்றிருந்தாலும்கூட, பல உண்மைகள் தெரியவந்திருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் உணவு தரமானதாக இல்லை என்றும், சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்றும் பல கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். ஆனால் பல கோரிக்கைகள், பத்திரிகைகளில் புகைப்படம் வருவதோடு முடிந்து போகின்றன. தீர்வு காணப்படுவதே இல்லை.
தற்போது தனியார் கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில், கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் முறையற்ற வகையில் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இவர்களை எதிர்த்துக்கொண்டு, அங்கே படித்துப் பட்டம் பெறுவது இயலாது என்ற மனநிலையில், பெற்றோரும் மாணவர்களும் இதனை சகித்துக்கொண்டு இருக்கின்றனர். சில தனியார் கல்லூரிகளில், பயிற்சி மருத்துவராக பணிபுரியும் காலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தைக்கூட வழங்குவதே இல்லை. இருப்பிடம், உணவு மட்டும் இலவசம் என்பதுதான் அவர்கள் வழங்கும் சலுகை.
பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துபோனதால், மாணவர்களைத் தக்கவைக்கவும், மாணவர்களைச் சேர்க்கவும் கல்விக் கட்டணத்தில் "தள்ளுபடி' அறிவிக்கும் காலம் இது. இருப்பினும், பல பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் தங்கள் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ஓர் உத்தியைக் கையாளுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஈடுசெய்யும் (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) என்ற அரசாணையைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒவ்வொரு கல்லூரியிலும் முழுமையாக ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, விரிவுரையாளர்கள் கூடத் துயரத்தில் உள்ளனர். பல பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்குச் சம்பளத்தையே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்குவதாக புகார்கள் உள்ளன. மாணவர்கள் குறைவு என்பதால் வருமானம் இல்லை என்கிற நியாயம் முன்வைக்கப்படுகிறது.
தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளைக் காட்டிலும் மிக மோசமான நடைமுறை, அதிகக் கட்டணம் என்பது தனியார் மேனிலைப் பள்ளிகளிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்கள்தான் உயர்கல்விக்கான அடிப்படை என்பதால், இதையெல்லாம் பெற்றோர் பொறுத்துக்கொள்கின்றனர்.
இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு கல்விச்சூழல் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். கட்டண முறைகேடு, கற்பித்தல் குறைபாடு, கற்பதற்கான வசதியின்மை, கல்லூரி விடுதியின் அவலநிலை, தரமற்ற உணவு ஆகியன குறித்த புகார்களை உடனடியாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றதாக இக்குழு அமைய வேண்டும். இன்றைய இன்றியமையாத் தேவை இது.
இந்தக் குழுவில் கல்வித் துறை அலுவலர்கள் பாதி எண்ணிக்கையிலும், பெற்றோர், மாணவர்கள் பாதி எண்ணிக்கையிலும் இருக்க வேண்டும். எந்தவொரு புகாரையும் குழுவின் அங்கத்தினர் இருவரும், புகாருக்கு இலக்கான கல்லூரி அல்லது மேனிலைப் பள்ளி அமைவிடத்தின் மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுப்பப்படும் இரு வருவாய்த்துறை அலுவலர்களும் அக்கல்லூரி/ பள்ளிக்குச் சென்று நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதுடன் மாணவர்களுடனும் தனிஅறை விசாரணை நடத்த வேண்டும்.
இத்தகைய கண்காணிப்புக் குழுக்களின் வெளிப்படைத் தன்மை, உயர்கல்வியில் நிலவும் பல முறைகேடுகளைப் பெருமளவு போக்கிவிடும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!
No comments:
Post a Comment