Wednesday, December 30, 2015

எதிர்ப்பலையை 'உணர்ந்து' தேர்தல் களம் காணும் அதிமுக! .....தமிழக செய்திப் பிரிவு

Return to frontpage

ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்."

கூட்டணி முயற்சிகள், கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகள் என தமிழக தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.

அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் அதிமுக மீதான மக்கள் நம்பிக்கையையும் அடித்துச் சென்றதாக கட்சியினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டது.

அதிமுகவினர் சிலரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதை முதல் முறையாக நாங்கள் சமீபகாலமாக பார்க்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறையில் இருந்தபோது அதிமுகவினர் திக்கற்று நிற்பதுபோல் உணர்ந்தனர். ஆனால், அவர் விடுதலையான பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையும் புது உத்வேகமும் பிறந்தது.

ஆனால், வரலாறு காணாத மழை நிலைமையை புரட்டிப் போட்டுவிட்டது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. "ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்" என்று ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, "மழை, வெள்ள பாதிப்புகள் மீது அரசு காட்டிய மெத்தனத்தால் அதிமுகவின் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், மக்கள் அதிருப்தி திமுகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூற முடியாது. மக்கள் நலக் கூட்டியக்கத்துக்கு ஓரளவு சாதகம் ஏற்படலாம்" என்றார்.

அதிமுகவின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, "மக்களின் கோபம் நியாயமானதே. ஆனால் அது மிகவும் தற்காலிகமானதே. வரலாறு காணாத மழையை மக்கள் எதிர்கொள்வது கடினமே. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறியது அவர்கள் உள்ளங்களை தொட்டுள்ளது" என்றார்.

ஆனால், சமூக வலைதளங்களில் ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கட்சிக்குள்ளும் அதிருப்தி

மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியிருப்பது ஒருபுறம் இருக்க கட்சிக்கு உள்ளேயும் அதிருப்திகள் நிலவுகிறது. தேனி, கோயமுத்தூர் போன்ற அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாகக் கூறுகின்றனர்.

அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களே மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு முன்னிறுத்துவதால் கட்சியில் பல ஆண்டுகளாக தொண்டாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என சிலர் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்து ஒருவர் கூறும்போது, "அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இதை அம்மாவிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்" என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மற்றொரு மூத்த தலைவர் , "கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும்கூட அமைச்சரவையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். இது முழுக்க முழுக்க அம்மாவின் முடிவு. அம்மாவுக்காகவே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கின்றனர். மாவட்ட, மாநகர பிரமுகர்களுக்காக யாரும் வாக்களிப்பதில்லை" என்றார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர். 2006 தேர்தல் வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றியுள்ளதால் இந்த மாவட்டங்களில் அதிமுக வெற்றி நிச்சயம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஈரோடு அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது விலையில்லா மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு ஆகியன எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்கிறார்.

நலத்திட்டங்களால் நன்மையடைந்த பெண்கள் வாக்கும், முதல் முறை வாக்காளர்கள் வாக்கும் தங்களுக்கே என அடித்துச் சொல்கின்றனர் சில அதிமுகவினர்.

கூட்டணி கணக்கு:

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவுக்கு கூட்டணி அமைப்பதில் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக பாஜக தொடர்ந்து மறுத்து வந்தாலும், மத்தியில் இருந்து எவ்விதமான மறுப்பும் வரவில்லை. இதனால் பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பாஜக இல்லாவிட்டால் அதிமுக, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், இந்த கூட்டணி அமைவதற்கான பணிகள் துவங்குவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தல் கூட்டணி கணக்குகள் எப்படி இருக்கும் என இப்போதைக்கு கணிக்க முடியாத நிலையில் கட்சி வட்டாரத் தகவலை வைத்து பார்க்கும்போது மக்கள் மத்தியில் அதிமுக எதிர்ப்பலைகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024