Friday, December 18, 2015

விமான இன்ஜினில் சிக்கி இன்ஜினியர் பலி

மும்பை,:மும்பையில், ஏர் இந்தியா நிறுவன இன்ஜினியர், விமான இன்ஜினில் சிக்கி உயிரிழந்தார். மும்பை, சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா - 619' என்ற விமானம், ஐதராபாத்திற்கு புறப்பட இருந்தது.
இதையொட்டி, 'புஷ்பேக்' என்ற நடைமுறைப்படி, ஒரு வாகனம் விமானத்தை தள்ளி வந்து, ஓடுபாதையின் துவக்கத்தில் நிறுத்தியது. இப்பணிகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்ஜினியரான ரவி சுப்ரமணியன் மேற்பார்வையிட்டார். அப்போது, துணை விமானி, விமானம் புறப்படுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதாகக் கருதி, இன்ஜினை திடீரென இயக்கினார். இதையடுத்து, விமான இன்ஜினின் இறக்கைகள் அதிவேகமாக சுழலத் துவங்கின.
அப்போது ஏற்பட்ட பயங்கர ஈர்ப்புசக்தியில், ரவி சுப்ரமணியன் வேகமாக பின்னோக்கி இழுக்கப்பட்டு, இன்ஜின் இறக்கைகளில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி அறிந்ததும், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அஸ்வனி லோஹானி தலைமையில், விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'உயிரிழந்த ரவி சுப்ரமணியனின் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

எப்படி நடந்தது?


இந்த விபத்து குறித்து, 'இண்டிகோ ஏர்' நிறுவன பராமரிப்பு மேலாளர் பிரதீப் சிங் ராவத் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் செய்தி:விமானிகளுக்கும், தரை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தியதும், இரு சக்கரங்களிலும், தடை கட்டைகள் வைக்கப்படவில்லை. அப்படி வைத்திருந்தால், விமானம் சிறிது கூட முன்னேறியிருக்காது.
விமானம் புறப்பட, 'சிக்னல்' வழங்காத நிலையில், விமான இன்ஜின் இயக்கப்பட்டது தவறு. விமானத்தை தள்ள உதவிய இரு உருளைகளை அகற்றும்படி, உதவியாளரிடம் ரவி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, அவை அகற்றப்பட்டன.
அதே நேரத்தில், விமானிக்கு, விமானத்தை இயக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். உடனே, விமானியின் கட்டளைப்படி, துணை விமானி, இன்ஜினை இயக்கியுள்ளார். இறக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவி சுப்ரமணியனை அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை.
அப்போது, ரவி சுப்ரமணியன் காதில், 'ஹெட்செட்' அணிந்திருந்ததால், இன்ஜின் சத்தமும் அவருக்கு கேட்டிருக்காது. அதனால் தான், பின்புறத்தில் விமானம் நகர்ந்து வருவது அவருக்கு தெரியவில்லை. அதே சமயம், அவருக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த உதவியாளர், கீழே படுத்து, உயிர் பிழைத்துள்ளார். இவையெல்லாம் நொடிப் பொழுதில் நடந்து விட்டன; இது, முழுக்க முழுக்க மனிதத் தவறால் ஏற்பட்ட உயிரிழப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024