Wednesday, December 23, 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்? ....மு.அமுதா

Return to frontpage



ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.


நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது.

சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா?

2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?

4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்?

5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.

நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.

இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம்.

இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும்.

இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?

வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை.

வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும்.

இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

முதல் சம்பவம்:

ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது.

இரண்டாவது சம்பவம்:

இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது.

ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது.

மாற்றம் என்பது தண்டனையில் வருமா?

குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.

குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது.

பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!

வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்?

தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா?

இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்!

தீர்மானம் தீர்வா?

ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது!

மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது.

பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு.

எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.

மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...