Saturday, December 19, 2015

வங்கிகளால் ஆன பயன்?

Dinamani


By வாதூலன்

First Published : 19 December 2015 01:21 AM IST


தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சென்னை உள்பட இதுவரை கண்டிராத பெருமழை அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.
தன்னார்வலத் தொண்டர்கள்; எதிர்க்கட்சிகள்; திரை நடிகர்கள்; அறக்கட்டளைகள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்தும் போர்வைகள், உணவுப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள் குவிந்தன.
பொதுத் துறை வங்கிகளின் பங்கு இந்த விஷயத்தில் அவ்வளவு குறிப்பிடும்படியாக இல்லை என்பதை உறுத்தலுடன் பதிவு செய்தாக வேண்டும்.
அதுவும், "வளமான நாட்களில் கண் சிகிச்சை முகாம், முதியோர் நலன், நீரிழிவு சோதனை முகாம் என்றெல்லாம் கண்காட்சிகள் நிகழ்த்தி, தங்கள் திட்டங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் வங்கிகள், இந்த வரலாறு காணாத வெள்ளத்தின்போது ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிர்.
ஒருவேளை, வங்கிகளுக்கே சிக்கல் நிறைய முளைத்தது காரணமாக இருக்கலாம் (உதாரணம்: வலைதள செயலிழப்பு; லாக்கருக்குள் நீர்.)
ஒரு சில வங்கிகள் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மைதான். இ.எம்.ஐ.யை கெடுத் தேதியில் செலுத்தாவிட்டால் அபராத வட்டி தொகை இல்லை; சேதமடைந்த கடன், டெபிட் அட்டைகளுக்கு மாற்று அட்டை, பிற வங்கிகளில் ஏ.டி.எம். பயன்படுத்தும்போது கட்டணம் கிடையாது. இத்தகைய சலுகைகள் வந்தபடியிருக்கின்றன. என்றாலும், நிகழ்ந்த சேதத்துக்கு இவை சோளப் பொறிக்கு ஒப்பானதுதான்.
ஒரு யதார்த்த நிலைமையை இங்கு குறிப்பிடலாம். குடும்பத்துக்குத் தூண் போலிருக்கும் தலைவர் இறந்து போனால், அந்தக் குடும்பத்துக்குச் சோகம் பதினைந்து நாள்கள்தான் இருக்கும்.
அதற்குப் பின்னர், கண் முன் பூதாகரமாக விரிந்து நிற்பது முதலில், நிதிநிலைமைதான். அத்தகைய "நிதிகளை' இருப்பில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு முதுகெலும்பு போலிருக்கும் தேசிய வங்கிகள், இதுபோன்ற பேரிடரில் முன்வந்து, இடுக்கண் களைய வேண்டாமோ?
ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. அறுபது வயது எட்டினவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 1975-இல் இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, பலர் - குறிப்பாக வட நாட்டில் பாதிக்கப்பட்டார்கள்.
1977-இல் அவசரநிலை நீக்கப்பட்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் ஜனதா அரசு வெற்றி பெற்றது, அவசரநிலையால் ஜனதா அரசு வெற்றி பெற்றது. அவசரநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனி கடன் உதவி வழங்க வேண்டுமென்றும், அதற்கான "ஸ்டேட்மென்ட்' மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டுமென்றும் அரசு உத்தரவிட்டது.
இதேபோல், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் நேர்ந்த கலவரங்களில் பல சீக்கியர்கள் வீடு வாசலை இழந்தார்கள். அத்தகையவர்களுக்கும் வங்கி ஒத்தாசை புரிந்தது.
மேற்சொன்ன இரண்டும் அரசியல் சாயம் கொண்டவை. ஆனால், இப்போது நடந்தது இயற்கையின் வெறியான சீற்றம். பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதில், அரசு வங்கிகளுக்கு முக்கியப் பங்குண்டு என அழுத்தமாகச் சொல்லலாம்.
என்ன தீர்வு? இன்றைய காலகட்டத்தில், ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் எல்லா வீடுகளிலும் நவீன நுகர் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சலவை இயந்திரம், கணினி, வாகனங்கள் இவை யாவற்றையும் பெற வங்கிகள் கடன் தருகின்றன.
நுகர்பொருள் என்றால் மூன்றாண்டு தவணை; வாகனம் எனில் நாலாண்டு; வீடு என்றால் இருபது ஆண்டு, கால அளவு வேறுபடும். இந்த வெள்ளத்தில் மிகப் பலருக்கு நுகர்பொருள்கள் முற்றுமாக அழிந்தே விட்டன. வங்கிகள் புதிய பொருள் வாங்க கடன் கொடுக்கலாம்:
= நுகர் பொருள்களுக்குக் காப்பீடு இருந்தாலும், 30 சதவீதமே கிடைக்கும்; அதுவும் தனியான 'Householders Policy' இருந்தால்தான்.
= வாகனங்களுக்கு உறுதியாகக் காப்பீடு இருக்கும். இருந்தால்கூட தேய்மானத்தைக் கணக்கிட்டுத்தான் தொகை கிடைக்கும். வாகனத்தைச் செப்பனிட குறுகிய காலக் கடன் வழங்கலாம்.
= வீட்டு வெளிச் சுவரில் சேதம்; வெளிவாசல் கதவு சேதம்; வீட்டுக் கூரை இடிந்து விழுந்திருப்பது - இவற்றைச் சரி செய்ய வங்கிகள் தாராளமாகக் கடன் தரலாம்.
சான்றுகள் காண்பிப்பது எளிதான காரியம்தான், தினத்தாளில் வந்த செய்தி; புகைப்படம்; தங்களது ரேஷன் அட்டை இவை போதுமே. ஒருவேளை ரேஷன் அட்டையும் நாசமாகியிருந்தால், வங்கிகள் PAN எண்ணை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவங்கிகள் எல்லாம், Flood Relief என்ற ஒரு பிரிவு வைத்து, குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, ஓரளவு குறைந்த வட்டியில் (8 சதவீதம்) கடன் வழங்கலாம்.
மேற்சொன்ன மூன்று பிரிவில், தொழில், விவசாயம் இவ்விரண்டையும் சேர்க்கவில்லை. ஏனெனில், இவ்வகைக் கடன்களை வழங்கிக் கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வங்கியிலும் தனியே இலாகாக்கள் இயங்குகின்றன.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யலாம்; யந்திர பிற அடமானக் கடனை மறு சீரமைப்பு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக பாவித்துத் தான் கடன் வழங்கப்படும்.
நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சேதம், "வங்கிகளால் ஆன பயன் என் கொல் பேரழிவில் நேசக் கரம் நீளாவிடில்' என்ற புதுக் குறளுக்கேற்ப, பொதுத் துறை வங்கிகள் செயல்பட்டால் உசிதம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024