தனியார், 'டிவி' சேனல் நிகழ்ச்சியில், சமீபத்திய மழை வெள்ளம் தொடர்பாக, தமிழக அரசின் செயல்பாடுகளை, நட்ராஜ் என்பவர் கடுமையாக விமர்சித்தார். அவர், அ.தி.மு.க., உறுப்பினரும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான நட்ராஜ் என, தவறாக ஒளிபரப்பாகி விட, அதை வைத்து, அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா.
இந்நிலையில், 'டிவி' ஒளிபரப்பில் நடந்த தவறு என தெரிய வந்ததும், நடராஜ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவதாக, நேற்று இரவு, ஜெயலலிதா அறிவித்தார்.இது குறித்து முதல்வர் ஜெய
லலிதா வெளியிட்ட அறிக்கையில்,' தென் சென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்
படுகிறது. தொடர்ந்து அவர் கட்சியின் உறுப்பினராக செயல்படுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நமது நாளிதழுக்கு ஆர்.நட்ராஜ் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியை பொறுத்தவரையில், எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாரோ, ஒரு நடராஜன், எதையோ சொல்வதற்கும், எனக்கும் என்ன தொடர்பு?
அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் கருத்துக்களை, எப்படி வெளியிட முடியும்; முதலில், அப்படியொரு சிந்தனையே, எனக்கு எட்டாதே.
முதல்வர் மீது எப்போதும் எனக்கு மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. அவர் தான் எனக்கு எல்லாமே கொடுத்தார். நான் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில், எல்லா விஷயங்களிலும், அவர் மெச்சும் படியாகத்தான் பணியாற்றி உள்ளேன்.
அந்த அடிப்படையில் தான், அவர் வழிநடத்தும் கட்சியில் இணைந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு, இதய சுத்தியோடு, கட்சிப் பணியாற்றி வந்தேன். எந்த இடத்திலும், சிறு நெருடலும் இல்லாமல் தான் நடந்து கொண்டேன்.
சென்னையை சுருட்டி வீசிய மழை, என் வாழ்வையும் யாரோ, ஒரு நடராஜன் மூலம், சுருட்டி வீசி விட்டது. சம்பந்தப்பட்ட பேட்டிக்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில், வேறு எந்த சர்ச்சைக்கும் நான் போக மாட்டேன்; அமைதி தான் ஒரே வழி.
இவ்வாறு அவர் கூறினார்.இப்படி பேட்டியளித்த சில மணி நேரத்தில் நட்ராஜ் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment