பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (Rajesh Khanna) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் (1942) பிறந்தார். இயற்பெயர் ஜதின் கன்னா. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மாமாவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பம்பாயில் வளர்ந்தார். 10 வயது முதல், நாடகங்களில் நடித்தார். புனே வாடியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
l அகில இந்திய அளவில் 1965-ல் நடத்தப்பட்ட யுனைடெட் புரொட்யூசர்ஸ் நடிப்புத் திறன் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்ற இவருக்கு 1966-ல் ‘ஆக்ரி கத்’ என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தார்.
l ‘ஆராதனா’ (1969) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 தொடர் வெற்றிப் படங்களை தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து பெற்றார்.
l இந்தியத் திரையுலகிலேயே மிகச் சிறந்த பாடல்களை வழங்கியது ராஜேஷ் கன்னா கிஷோர் குமார் ஜோடி என்பார்கள். ‘கிஷோர் குமார் எனது ஆன்மா. நான் அவரது உடல்’ என்பார் ராஜேஷ் கன்னா. இவரது படங்களில் இடம் பெற்ற ‘மேரே சப்னோங் கே ரானி’, ‘கோரா காகஸ் கா யே மன் மேரா’, ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘குன் குனா ரஹே ஹை பௌரே’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டன.
l தென் இந்திய ரசிகர்களை 1969-1991 காலகட்டத்தில் ராஜேஷ் கன்னா அளவுக்கு கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றார் சரோஜாதேவி. தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்னர் நண்பரானார்.
l அடுத்தவர்களின் தேவை அறிந்து, தானே ஓடிச்சென்று உதவும் மனம் படைத்தவர். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை மணந்தார். இவர்களது மகள்களான ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னாவும் நடிகைகள்.
l மொத்தம் 180 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். ‘ஆராதனா’, ‘அமர்பிரேம்’, ‘ஆனந்த்’, ‘கடீ பதங்’, ‘ராஸ்’, ‘சச்சா ஜூட்டா’, ‘ராஜா ராணி’ குறிப்பிடத்தக்கவை. 1980-களில் ‘ஸ்வர்க்’, ‘அவதார்’ போன்ற திரைப்படங்களில் தன் வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்தார்.
l தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல பிறமொழி இயக்குநர்கள் இவரை வைத்து தங்கள் மொழி ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்தனர். இதில் கே.பாலசந்தர், தர், கே.ராகவேந்திரா, ஐ.வி.சசி குறிப்பிடத்தக்கவர்கள்.
l தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். 3 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005-ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
l சினிமாவைவிட்டு 1990-களில் விலகியவர், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார். ஷீர்டி பாபாவின் பக்தர். இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 70-வது வயதில் (2012) மறைந்தார். மறைவுக்குப் பிறகு, பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment