Saturday, December 26, 2015

டிஜிட்டல் மீட்டர் என்ன ஆச்சு?

logo

இந்திய பொருளாதாரம் இப்போது சீரடைந்து கொண்டுவருவதற்கு காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென்று குறைவதுதான். சமீபகாலங்களாக கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்துவருவதால், அரசின் அன்னிய செலாவணியும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008–ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலராக இருந்தது. இப்போது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 36.05 டாலராக குறைந்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப, பெட்ரோல்–டீசல் விலை குறையாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில், பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர வரிகள் வருமானம் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, குறைந்துவிடுவதால் அந்த வருமானம் குறையாத அளவில் வரியையும் கூட்டிவிடுகிறார்கள். 1989–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.50 ஆகவும், மண்எண்ணெய் விலை 2.25 ஆகவும், டீசல் விலை 3.50 ஆகவும் இருந்தது. இப்போதும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், அதற்கேற்ப ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை என்பது மக்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது.

2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 ரூபாய் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.25 காசாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.60.80 காசாக குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்தபிறகும் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை. இதன்பின்பு, ஐகோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் 8 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில், முதல் அம்சமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அப்படி ஒருபோதும் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பொதுமக்களை பொருத்தமட்டில், கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டாலும் பரவாயில்லை, மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலே போதும் கட்டணத்தை கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களிலும் ஜி.பி.எஸ். உடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்காக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை பெருநகரில் இயங்கிவரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தை காட்டும் கருவியுடன், அதாவது ஜி.பி.எஸ். உடன் கூடிய, மின்னணு இலக்க அச்சடிக்கும் எந்திரத்துடன் (டிஜிட்டல் மீட்டர்) விலை ஏதும் இல்லாமல் அரசு சார்பில் பொருத்தப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆக, கோர்ட்டும் சொல்லிவிட்டது, அரசும் நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், நிறைவேற்றவேண்டிய போக்குவரத்துத்துறை இதற்காக டெண்டர் விடுகிறோம் என்று அறிவித்து, அந்த டெண்டர் விடும் முறையே இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. இந்த குறையை போக்க உடனடியாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிக்கும் கட்டாய நடவடிக்கைகளையும், தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையையும் போக்குவரத்துத்துறை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024