Tuesday, December 1, 2015

கவனத்தின் உயிர்ச்சூழல்!

Published: December 1, 2015 08:58 ISTUpdated: December 1, 2015 08:58 IST

கவனத்தின் உயிர்ச்சூழல்!

வெ. ஸ்ரீராம்

மனதின் ஒரு பகுதி நமக்குள்ளிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுவதே கவனம்

சமூகவியல் பாடத்தில் கவனம் போதாது என்றது ஆறாவது வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியரின் குறிப்பு. கடைக்குப் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மேல் கவனம், தெருவில் விளையாடும் போதும் சைக்கிள் ஓட்டும்போதும் கவனம் - இப்படி நம் வாழ்க்கைப் பாதையில் எத்தனை அன்றாட விஷயங்களில், எவ்வளவு விதங்களில் கவனம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், இந்தக் ‘கவனம்’ என்பதை ஒரு ‘பொருளாக’, விலை கொடுத்து வாங்கப்படும் ‘பொருளாக’, நுகர்பொருளாகப் பார்க்க முடியுமா?

சற்றே நூதனமான அணுகுமுறையுடன் இந்தக் கருத்தை ஆராய்ந்து யீவ் சிதோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘கவனத்தின் பொருளியல்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இவர் பிரான்ஸின் க்ரெநோபல் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியரும்கூட. அதே ஆண்டு ‘கவனத்தின் உயிர்ச் சூழலுக்காக’ என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார் சிதோன். ‘பொருளியல்’ என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் நிதிநிலை, அங்குள்ள நுகர்பொருட்கள், அவற்றின் வணிகம் அல்லது சந்தை இவற்றிடையேயான தொடர்பு பற்றிய துறை. ஆனால், மக்களின் ஒட்டுமொத்த கவனம் என்ற பொருளை ஒரு சிலருடைய சுயநலத்துக்காகச் சுரண்டல் செய்வதை ஆராய்கிறது இந்தப் புத்தகம். அதுவும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் உதவியால் சமூகத்தில் ‘கவனம்’ நுகர்பொருளாக்கப்படுகிறது என்ற கருத்தாக்கத்தை இவர் முன்வைக்கிறார்.

கவனத்தின் நெருக்கடி

ஆனாலும், இந்தப் பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குப் பிறகுதான் தோன்றியதென்று சொல்ல முடியாதென்கிறார் இந்த ஆசிரியர்.

1880-களிலேயே, மேலைநாடுகளில் தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிலவிய முதலாளித்துவச் சூழலிலேயே ‘கவன’த்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பற்றி ஜோனாதன் க்ரேரி என்ற அமெரிக்க ஆய்வாளர் முன்வைத்த கருத்தை இவர் சுட்டிக்காட்டுகிறார். அன்றைய நவீன மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில், சீராக நகர்ந்துகொண்டிருக்கும் மேஜைகளின் முன்னால் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் தொழிலாளிகள் ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தும்போது, அவர்களுடைய கவனமும் அவர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளரின் கவனமும் உற்பத்திப் பெருக்கத்திலேயே இருந்த நாட்களிலேயே ‘கவனம்’நெருக்கடியை எதிர்கொண்டது என்கிறார். உற்பத்தி பெருகப்பெருக, அவற்றைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததை விற்றுத் தீர்ப்பது, விற்றுத் தீர்ந்த இடத்தில் மீண்டும் நிரப்புவது, இந்தச் சங்கிலி செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் விளம்பரங்கள் என எல்லாத் தளங்களிலும் கவனம் திரும்பியபோது ஏற்பட்ட நெருக்கடி.

மக்களின் கவனக் கண்காணிப்பின் நிர்ப்பந்தங்கள் ஊடகக் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. ஊடகங்களுடைய வளர்ச்சிக்கு விளம்பரதாரர்களுடைய உதவி தேவைப்பட ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கும் நேரமும் இடமும் விரிவடையத் தொடங்கின. நுகர்வோரின் கவனத்தைக் கவர்ந்து, கட்டுக்குள் வைத்து நிர்வகிப்பதில் போட்டி வளர்ந்தது. ‘‘மக்கள் கவனத்தை எப்போதும் தன் கட்டுக்குள் இருத்தும் நெருக்கடியின் வரலாறுதான் முதலாளித்துவத்தின் வரலாறு’’ என்று குறிப்பிடுகிறார் இவர்.

உள்ளுணர்வின் அங்கம்

தீவிரமான, ஒருமுகப்படுத்தப்பட்டது ‘நல்ல கவனம்’, பல திசைகளை நோக்கிச் சிதறும் ‘மோசமான கவனம்’ என்று மனிதர்களின் கவனத்தை மேம்போக்காகத் தரம் பிரிக்க முடியாது. மனித குலத்துக்கு இந்த இருவிதமான கவனங்களுமே அவசியமானவை என்று ‘கவனத்தின் உயிர்ச்சூழலுக்காக’ என்ற தன்னுடைய அடுத்த புத்தகத்தில் விளக்குகிறார் யீவ் சிதோன். ஒருமுகக் கவனத்தைவிட, பல திசைகளிலும் கவனம் கொள்வதென்பது மனித குலத்துக்கே அடிப்படையான ஒன்று. ஏனென்றால், அது உள்ளுணர்வைச் சார்ந்தது. பன்முகக் கவனச் சிதறலைக் குறித்து நரம்பியலாளர்களும் உளவியலாளர்களும் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றின் மேல் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதுகூட, வேறு பல திசைகளிலும் நம் கவனம் செயல்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறு கூட்டத்தில் ஒருவருடன் நாம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்னாலிருந்து யாராவது நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால், அதுவும் நமக்குக் கேட்கிறது; திரும்பியும் பார்க்கிறோம். உளவியலாளர்கள் இதை ‘காக்டெய்ல் பார்ட்டி விளைவு’ என்று சொல்கிறார்கள். நம்முடைய மனத்தின் ஒரு பகுதியில், தானியங்கிக் கவனம் ஒன்று எப்போதும் அனிச்சையாக 360 டிகிரி கோணத்தில் விழிப்புடன் செயல்படுகிறது, ஆதிமனிதனுக்கு இருந்ததைப் போல. ஆதி மனிதனுக்கு அது வாழ்வா, சாவா என்ற பிரச்சினை. ஒரு சிறிய சத்தம், வானிலையில் லேசான மாற்றம், கொடிய மிருகம் ஒன்றின் அன்மை, விநோதமான வாடை இவற்றையெல்லாம் இனம் கண்டுகொள்ள அவனுடைய ஐம்புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. இன்றைய ஊடக ஆக்கிரமிப்புச் சூழலில் ஸ்மார்ட் போன் போன்ற ‘செயற்கைப் புலன்’அந்த வேலையைச் செய்கிறது. இது ஒரு வசதி; ஆபத்தானதும்கூட. (செல்போனில் பேசிக்கொண்டே விபத்துக்குள்ளான சம்பவங்கள் நவீன உலகின் மறுபக்கம்.)

கடந்த 50 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் மற்ற தேவைகளிலும் ஓரளவாவது கவனத்தைச் ‘சிதற’ விட்டிருந்தோமானால், உயிர்ச்சூழல் சேதங்களைக் குறித்தும், இதே பொருளாதார வளர்ச்சி உருவாக்கிய சமூகப் பிரச்சினைகளைக் குறித்தும் ஒருவேளை நம்முடைய கவனம் பயனுள்ள வகையில் செயல் பட்டிருந்திருக்கும் என்கிறார் அவர்.

எப்படி வகைப்படுத்துவது?

‘தனக்குப் புறத்தேயிருக்கும் ஒன்றை நோக்கி மனத்தைச் செலுத்துவது’ என்பதுதான் ‘கவனம்’ என்கிறார் ஆசிரியர். (லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு, ஆங்கிலத்துக்கு வந்திருக்கும் இந்தச் சொல்லுக்கு சொற்பிறப்பியல் வரையறையும் இதுதான்.) அதாவது, நம்முடைய மனதின் ஒரு பகுதி நமக்குள்ளேயிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுகிறது. ஒருவிதத்தில் இது ஒரு ‘அந்நியமாதல்’. ஆனாலும், அழகியல் ரீதியினாலான அனுபவங்களின் அற்புதமே அதுதான். ஒரு புத்தகம், இசை அல்லது திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு, தானாகவே ஒருவர் தன் அகவயத் தன்மையை விட்டுக்கொடுப்பது. இருந்தாலும், நமக்குள் சில மாறுதல்களை அது தோற்றுவித்து நம்மை வளப்படுத்துகிறது. வெளியுலகத்துடனான நம்முடைய உறவுகளுக்கு இந்தக் கவன ஈர்ப்பு தேவையாக இருப்பதால், இந்த அந்நியமாதலை மறுக்கும் வாழ்க்கை மனிதாபிமானமற்றதாக ஆகிவிடுகிறது என்ற கருத்தாக்கத்தை சிதோன் தன் புத்தகத்தில் முன்வைக்கிறார்.

க்ரெநோபல் நகர மேயர், நகரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் பொதுஇடங்களில், வித்தியாசமான தானியங்கி இயந்திரங்களை வைத்துள்ளார். ஒரு நாணயத்தை அதில் போட்டு, பித்தானை அமுக்கினால், பிஸ்கெட் பாக்கெட் அல்லது குளிர்பான டின்னைப் போல, அவற்றுக்குப் பதிலான இரண்டு அல்லது மூன்று தாள்கள் வரும். அவற்றில் ஒரு சிறுகதை இருக்கும். காத்திருக்கும்போது ‘ஸ்மார்ட் போனை’யே கவனித்துக்கொண்டு இருக்காமல் சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். தேர்வு மக்களுடையதே!

- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியே விருது பெற்றவர்.

தொடர்புக்கு: ramcamus@hotmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024