By சென்னை,
First Published : 07 December 2015 02:40 AM IST
தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்ட மக்களை அச்சம் அடையச் செய்துள்ளது.
மழை எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்து, கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: இரு நிலைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், பலத்த, மிக பலத்த மழையும் பெய்யும். சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையிலான கடலோர மாவட்டங்களில், 60 மி.மீ. முதல் 120 மி.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை மாநகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில நேரங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும்.
பலத்த காற்று எச்சரிக்கை: கடலோரப் பகுதியில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார் பாகுலேயன் தம்பி.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்: இதற்கிடையே, சென்னையில் கடந்த 3 நாள்களாக மழை சற்று ஓய்ந்திருந்ததால் சனிக்கிழமை (டிச. 5) முதல் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பால், பெட்ரோல், டீசல், உள்ளிட்ட அத்தியாவசப் பொருள்கள் தட்டுப்பாடு குறைந்து விநியோகம் சீரடைந்து வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையிலும் செயல்பட்டன. 50 சதவீதம் ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. பால், தயிர் விநியோகம் ஓரளவு சீரடைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செயல்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த மக்களுக்கு நூற்றுக்கணக்கான தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றன. ஆனாலும், இந்த நிவாரணப் பொருள்களை முறையாக வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
படிப்படியாக மின் விநியோகம்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை நகரில் மின் விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள மணலி, எம்.கே.பி. நகர், சிட்கோ நகர், முடிச்சூர், அனகாபுத்தூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
மீண்டும் ரயில், விமான சேவை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் திங்கள்கிழமை (டிச. 7) முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோல் கடந்த டிசம்பர் 2 முதல் மூடப்பட்டிருந்த சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. புறநகர் மின் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் மோசமாக இருந்தாலும் பேருந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் மழை பெய்த தொடங்கியதால் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீஸார், ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 லட்சம் பேர் பத்திரமாக மீட்பு
சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டோர் 14,32,924.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள படகுகள் 600.
நிவாரண மையங்கள் 5,554.
விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் 85,98,280.
நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் 24,220.
முகாம்களில் பயன்பெற்றவர்கள் 20,17,244.
கால்நடை மருத்துவ முகாம்கள் 1,536.
சிகிச்சை பெற்ற கால்நடைகள் 1,55,007.
முகாம்களில்விநியோகிக்கப்பட்ட பால்பவுடர் 453 மெட்ரிக் டன்
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வெள்ளப் பாதிப்பு, பலத்த மழை ஆகிய காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு தொடர் மழையால், நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும் பள்ளிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
No comments:
Post a Comment