By ப. இசக்கி
First Published : 28 December 2015 01:21 AM IST
தைமாதப் பொங்கலுக்கு தமிழர்கள் தயாராகிறார்களோ இல்லையோ, அதனையொட்டி நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தென் மாவட்ட இளைஞர்கள் தயாராகி விடுவார்கள். பொங்கலுக்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, 1,500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் வீர விளையாட்டு. இந்த வீர விளையாட்டை நடத்த சமீபகாலமாக கடும் அக்கப்போர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாக பிராணிகள் நல சங்கத்தினர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த 2014, மே 7-ஆம் தேதி இதற்குத் தடை விதித்தது. இதனால் கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனால், ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை களையிழந்தது. மக்கள் மனதில் பெரும் சோகம்.
ஜல்லிக்கட்டை ஒரு தெய்வ வழிபாடாக கருதும் கிராம மக்கள், ""இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் மட்டும் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படாததுதான் இதற்குக் காரணம். இது தெய்வக் குற்றம்'' என்கின்றனர்.
வீரமும், பக்தியும் கொண்ட இந்த ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்திவிட வேண்டும் என கிராம மக்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.
தடை விதிக்கப்பட்டு 18 மாதங்கள் வரை அதை நீக்குவதற்கு எந்த அரசியல் கட்சியும் தீவிரம் காட்டவில்லை. இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என அடம் பிடிப்பது ஓர் "அரசியல் ஜல்லிக்கட்டு' என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.
தமிழ்நாட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்திருந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ""ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சட்டம் கொண்டு வரப்படும்'' என்றார்.
தடைக்குப் பிறகு, இந்த ஆண்டு இதுவரையில், மூன்று முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. ஆளுங்கட்சிக்காரர் சொன்னால் காரியம் விரைவாக நடக்கும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த ஆர்வலர்களுக்கு இதுவரையில் ஏமாற்றமே.
அடுத்து, மதுரை வரும் அரசியல் தலைவர்கள் எல்லாம், போகிற போக்கில் "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்' சொல்லிச் சென்றார்களே தவிர, அதற்கான ஆக்கப்பூர்வமான காரியங்கள் எதையாவது செய்தார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இப்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் ஜல்லிக்கட்டை நோக்கி இழுக்கிறது. அதனால், எல்லோரும் இப்போது ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒருபடி மேலே போய், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். இப்போது அது கைவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஒரு காரியம் திட்டமாக நடைபெறப் போகிறது என்பது தெரிந்து விட்டால் அதற்காக முன்கூட்டியே ஒரு போராட்டம் நடத்தி அதில் பெயரை தட்டிச் செல்வதில் எப்போதும் திமுக முந்திக் கொள்ளும். இப்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக திமுக அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எதிர்க்கட்சிக்காரர் உண்ணாவிரதம் இருந்தால் ஆளுங்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா. அவர்கள் முந்திக் கொண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கடந்த திங்கள்கிழமை (டிச.21) அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு சாமிக்கு பொங்கல் வைத்து, ஜல்லிக்கட்டு காளைகளையும் கொண்டு வந்து வழிபாடு நடத்தி கடவுளிடம் வேண்டுதல் செய்துள்ளனர்.
""நாங்கள் ஆளுங்கட்சி. போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்த முடியுமா? அதுதான், தடைநீங்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிட்டு பொங்கல் வைத்துள்ளோம்'' என்கிறார் அதிமுக தொண்டர் ஒருவர்.
மத்தியில் ஆளும் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசியச் செயலர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தென் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும் என சொல்லிச்...சொல்லி...வாய் வலித்திருக்கும். இதுவரையில் ஒன்றும் ஆகவில்லை.
பாமக, மதிமுக, வி.சி., இடதுசாரிகள் என ஒருவர் கூட பாக்கி இல்லாமல் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும் என சொல்லியாகிவிட்டது. போராட்டங்களும் தொடர்கின்றன.
ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர்ந்து சொன்ன பிறகும், எதிர்ப்பே இல்லாத நிலையிலும் தடை நீங்கியபாடில்லை. தடை ஒன்றும் அரசு விதித்தது அல்ல. அரசியல் நெருக்கடியால் நீக்கிவிட. உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்டப் போராட்டம்தான் தீர்வு என்பதை அனைவரும் அறிவர். அதை ஆளும் அதிமுக செய்துள்ளது. அதிலும் இதுவரையில் முடிவு தெரியவில்லை.
இப்போது, ""மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்'' என மற்றொரு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். இப்போது எல்லோரும், அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். தமிழக முதல்வரும், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கலுக்கு இன்னும் 18 நாள்களே உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், அவற்றை அடக்க காளையர்களும் தயாராக உள்ளனர். ஆனால், இந்த குறுகிய கால இடைவெளியில் அவசரச் சட்டம் சாத்தியமாகுமா?
தமிழ்நாட்டின், அதுவும் தென் மாவட்டத்தில் மட்டுமே பிரபலமாக திகழும் ஒரு நிகழ்வுக்காக, தினம் ஒரு பிரச்னையில் சிக்கித் திணறும் மத்திய அரசும், அதன் அமைச்சரும், அதிகாரிகளும் மெனக்கெடுவார்களா? மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment